தேடுதல்

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் விடுதலை கேட்டு போராட்டம் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் விடுதலை கேட்டு போராட்டம் 

அருள்பணி ஸ்டான் சுவாமிக்கு மிதியடி, உறுஞ்சு குழாய் மறுப்பு

ஒவ்வொரு மாதமும், ஐம்பது நாடுகளில் முன்னூறுக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள், தங்கள் மத நம்பிக்கைக்காக, கடத்தப்படுகின்றனர் அல்லது, அநீதியான முறையில் சிறைவைக்கப்படுகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மும்பை Taloja மத்திய சிறையில் வைக்கப்பட்டிருக்கும், 84 வயதான இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஏழை மக்களுக்கு உதவிசெய்வதற்கு ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக தன் வாழ்வை அர்ப்பணித்திருந்ததே அவர் செய்த ஒரே குற்றம் என்று, அவரது வழக்கறிஞர் ஒருவர், யூக்கா செய்தியிடம் கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் 9ம் தேதியிலிருந்து சிறையில் இருக்கும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், முதுமையின் காரணமாகவும், பார்க்கின்சன்ஸ் உடல் நோயின் காரணமாகவும் பிணையலில் வருவதற்கு விடுத்துவரும் விண்ணப்பத்திற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வரும்வேளையில், தண்ணீர் மற்றும் ஏனைய திரவங்களைப் பருகுவதற்கு உறுஞ்சு குழாயைப் பயன்படுத்த, நவம்பர் 6ம் தேதியிலிருந்து கேட்கப்பட்டுவரும் அவரது விண்ணப்பத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் கைகள் நடுங்குவதால் உறுஞ்சு குழாயைப் பயன்படுத்தவும், குளிர்கால ஆடைகளோடு மிதியடியைப் பயன்படுத்தவும், நவம்பர் 26, இவ்வியாழனன்று நடைபெற்ற விசாரணையில் கேட்கப்பட்ட அனுமதிக்கு, NIA எனும் தேசிய புலனாய்வு அமைப்பு எந்தப் பதிலும் கூறவில்லை என்று, வழக்கறிஞர் இயேசு சபை அருள்பணி A.சந்தானம் அவர்கள் கூறியுள்ளார்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் நிலை குறித்து, சிறை மேற்பார்வையாளரின் அறிக்கை ஒன்றைக் கேட்கவிருப்பதாகவும், அடுத்த விசாரணை வருகிற டிசம்பர் 4ம் தேதியன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், அருள்பணி  சந்தானம் அவர்கள் கூறியுள்ளார். (UCAN)

இதற்கிடையே, ஒவ்வொரு மாதமும், ஐம்பது நாடுகளில், முன்னூறுக்கும் அதிகமான கிறிஸ்தவர்கள், தங்கள் மத நம்பிக்கைக்காக, கடத்தப்படுகின்றனர் அல்லது, அநீதியான முறையில் சிறைவைக்கப்படுகின்றனர் என்று, “Aid to the Church in Need” எனப்படும் திருத்தந்தையரின் அறக்கட்டளை அமைப்பு ஒன்று கூறியுள்ளது. (CNA) 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2020, 14:23