தேடுதல்

ராஞ்சி திருஅவை ராஞ்சி திருஅவை  

ஒடுக்கப்படுகின்றவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்

பொதுவாக, பழங்குடி இன மக்கள் அமைதியை விரும்புபவர்கள் மற்றும், ஏனைய மதத்தவருடன் நல்லுறவுகளைக் கொண்டிருப்பவர்கள் - ஆயர் Toppo

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் பழங்குடி இன கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டுள்ளது குறித்து, புலன்விசாரணை இடம்பெறவேண்டும் என்று, திருஅவைத் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மாநில அரசை வலியுறுத்தியுள்ளனர்.  

பாதிக்கப்பட்டுள்ள 13 கிராமங்களைப் பார்வையிட்டபின், இவ்வாறு அரசை கேட்டுக்கொண்டுள்ள உண்மையை அறியும், சமுதாய மற்றும், மனித உரிமை அமைப்புகள், இந்த தாக்குதல்கள் குறித்து பாரபட்சமின்றி, விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த தாக்குதல்கள் குறித்து யூக்கா செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, Raigarh ஆயர் Paul Toppo அவர்கள், இத்தகைய நிகழ்வுகள் கவலை தருகின்றன என்றும், பழங்குடி இன சமுதாயத்திற்கு பாதுகாப்பு அவசியம் என்றும், பல்வேறு மதங்கள் மத்தியில் நல்லிணக்கம் கொணரப்படவேண்டும் என்றும் கூறினார்.

பொதுவாக, பழங்குடி இன மக்கள் அமைதியை விரும்புபவர்கள் மற்றும், ஏனைய மதத்தவருடன் நல்லுறவுகளைக் கொண்டிருப்பவர்கள் என்றுரைத்த ஆயர் Toppo அவர்கள், மதம், சாதி மற்றும், நம்பிக்கை ஆகியவற்றின் பெயரில், மக்கள் மத்தியில் சில குழுக்கள் பிரிவினையை உருவாக்க முயற்சிப்பது கவலை தருகின்றது என்று கூறினார்.  

மக்களைப் பராமரிக்கவேண்டியது அரசின் கடமை என்றும், நசுக்கப்படும் மக்களுக்கு நீதி கிடைக்கவும், மதம் அல்லது சாதியின் பெயரில் இடம்பெறும் எவ்விதப் பாகுபாடுகளைக் களையவும், நடவடிக்கை எடுக்குமாறு, மாநில முதலமைச்சர் Bhupesh Baghel அவர்களையும், ஏனைய அதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறோம் என்றும், ஆயர் Toppo அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 22, 23 ஆகிய தேதிகளில், சட்டீஸ்கர் மாநிலத்தின் Kondagaon, Sukma, Bastar மற்றும், Dantewada ஆகிய மாவட்டங்களில், கிறிஸ்தவ பழங்குடி இன மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. (UCAN)

03 November 2020, 14:46