தேடுதல்

Vatican News
இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி 

தன்னுடன் சிறையிலிருக்கும் கைதிகளுக்காக செபிக்குமாறு விண்ணப்பம்

தன் தற்போதைய நிலைகளையும், தன் உடன் கைதிகள் தனக்கென ஆற்றிவரும் சேவைகளையும் குறிப்பிட்டு கடிதம் ஒன்றை சிறையிலிருந்து அனுப்பியுள்ளார் அருள்பணி ஸ்டான் சுவாமி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

மாவோயிஸ்ட் தீவிரவாதி என பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கும் இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தன்னுடன் சிறையிலிருக்கும் இரண்டு ஏழை கைதிகளுக்காகச் செபிக்குமாறு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார்.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் பூர்வீகக் குடிமக்களின் நில உரிமைகளுக்காகப் பல ஆண்டுகளாக போராடிவரும் ஒரே காரணத்திற்காக, தீவிரவாதி என அரசால் கைது செய்யப்பட்டு மும்பையில் சிறைவைக்கப்பட்டிருக்கும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தன்னுடன் சிறையில் இருக்கும் கைதி ஒருவரின் துணையுடன், மடல் ஒன்றை எழுதி, இரகசியமாக அனுப்பியுள்ளார்.

மனித உரிமை நடவடிக்கையாளரும், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் நண்பருமான ஜான் தயாள்  அவர்களுக்கு இரகசியமாக சிறையிலிருந்து அனுப்பப்பட்டுள்ள இந்த மடலில், தன் தற்போதைய நிலைகளையும், தன் உடன் கைதிகள் தனக்கென ஆற்றிவரும் சேவைகளையும் குறிப்பிட்டுள்ளார்.

பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 83 வயதான இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களால், ஒழுங்காக எழுதமுடியாது என்பதால், அதே சிறைச்சாலையில் இன்னொரு அறையில் வைக்கப்பட்டிருக்கும் மனித உரிமை நடவடிக்கையாளர் Arun Ferreira அவர்களின் துணையுடன் இந்த மடல் எழுதப்பட்டுள்ளது.

தன்னுடன் ஒரே அறையைப் பகிரும் இரு கைதிகளும், மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், தன் கைகள் நடுங்குவதால், தான் சாப்பிடுவதற்கும், குளிப்பதற்கும், தன் துணிகளைத் துவைப்பதற்கும், இவர்கள் இருவருமே மிகப்பெரிய அளவில் உதவி வருவதாகவும், இவர்களுக்காகச் செபிக்குமாறும் அம்மடலில் விண்ணப்பித்துள்ளார், அருள்பணி ஸ்டான் சுவாமி.

4 மீட்டர் நீளமும் 2.4 மீட்டர் அகலமும் உள்ள ஓர் அறையில் மேலும் இருவருடன் தான் வைக்கப்பட்டுள்ளதாகவும், காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையும், தான் சிறை அறையிலிருந்து வெளியே வந்து, சிறை வளாகத்தில், ஏனைய கைதிகளை சந்திக்க அனுமதிக்கப்படுவதாகவும், தன் மடலில் கூறியுள்ளார், இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி.

இந்தியாவின் தலித் மக்களுக்கு ஆதரவாக 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவின்  Bhima Koregaon எனுமிடத்தில் இடம்பெற்ற போராட்டங்களில் உருவான வன்முறைகளில் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக, தற்போது, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதி என பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மும்பையின் Taloja சிறையில் வைக்கப்பட்டிருப்பதுபோல், அதே குற்றத்திற்காக, அதே சிறையில், மனித உரிமை நடவடிக்கையாயாளர்கள், Varavara Rao, Vernon Gonsalves, Arun Ferreira ஆகியோரும் மற்றொரு அறையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். (AsiaNews)

17 November 2020, 15:16