தேடுதல்

எத்தியோப்பியாவில் பதட்ட நிலை எத்தியோப்பியாவில் பதட்ட நிலை  (AFP or licensors)

அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு எத்தியோப்பிய திருஅவை அழைப்பு

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் நாட்டின் வளத்திற்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒருவரை ஒருவர் மதித்து வாழவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

எத்தியோப்பியாவில் வடக்கு Tigray பகுதியில் இடம்பெறும் பதட்டநிலைகளால், உள்நாட்டுப்போர் சூழும் அச்சம் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, அமைதி பேச்சுவார்த்தைகள் இடம்பெற அழைப்புவிடுத்துள்ளனர் எத்தியோப்பிய ஆயர்கள்.

பிறரை மதித்து புரிந்துகொள்ளும் உணர்வுகளுடன், நட்புடன்கூடிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற வேண்டியது அவசியம் எனவும், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் நாட்டின் வளத்திற்காக உழைக்கும் நோக்கத்தில், ஒருவரை ஒருவர் மதித்து வாழவேண்டும் எனவும் செபிப்பதாக தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர் ஆயர்கள்.

எத்தியோப்பிய பிரதமர்  Abiy Ahmed அவர்களுக்கும், Tigray மக்கள் விடுதலை முன்னணி என்ற பலம் வாய்ந்த குழுவுக்கும் இடையே மோதல்கள் உருவாகி, இக்குழுவால் இராணுவ முகாம் ஒன்று தாக்கப்பட்டது, இதைத் தொடர்ந்து, Tigray பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது குறித்து, தங்கள் கவலையை வெளியிட்டுள்ள ஆயர்கள், சகோதரர்கள், ஒருவரோடொருவர் போரிட்டு உயிரிழப்பதால் யாருக்கும் இலாபமில்லை, மாறாக, நாட்டின் நிலையான தன்மைக்கே அது அச்சுறுத்தலாக முடியும் என தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கத்தோலிக்கரும், நாட்டின் அமைதி பாதுகாப்பு, ஒப்புரவு, தேசிய ஒன்றிப்பு ஆகியவைகளுக்காக செபிக்கவும், உழைக்கவும்வேண்டும் என்ற விண்ணப்பத்தை விடுத்துள்ள ஆயர்கள், எத்தியோப்பியாவில் அனைத்து மதங்களின் கூட்டமைப்பு, இம்மாதம் 5ம் தேதி முதல் 12ம் தேதிவரை, நாட்டின் ஒப்புரவிற்காக சிறப்பான விதத்தில் செபித்துவருவதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எத்தியோப்பியா நாட்டில் அமைதி நிலவவேண்டும் என செபிக்குமாறு, நவம்பர் 8, ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ள அதே வேளையில், பதட்ட நிலைகளுக்கு அமைதியான தீர்வுகளைக் காண முன்வரவேண்டும் என போரிடும் துருப்புகளை நோக்கி, ஐநா. பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டாரெஸ் அவர்களும் அழைப்பு விடுத்துள்ளார்.

10 November 2020, 15:18