தேடுதல்

அருள்சகோதரி Elisa Petra அருள்சகோதரி Elisa Petra  

கருவுற்ற பெண்களுக்கு உதவும் அருள்சகோதரி

தாய்-சேய் நலப்பணியை கோவிட்-19 கொள்ளைநோய் காலத்திலும், தொடர்ந்து ஆற்றுவதாகத் தெரிவித்த அருள்சகோதரி Elisa Petra, இந்த கொள்ளைநோய் காலத்தில், Tanjung போன்ற கிராமப் பகுதியில் பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பது மிகவும் கடினமாக உள்ளது என்று கூறினார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தோனேசியாவில் மக்களால் பெரும்பாலும் அறியப்படாத Ketapang மறைமாவட்டத்தில், அருள்சகோதரி ஒருவர், ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ ஆறு மணி நேரம் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டு, கருவுற்ற பெண்களுக்கு உதவி வருகிறார் என்று ஆசியச் செய்தி கூறுகிறது.

மத்திய ஜாவா மாநிலத்தில் பிறந்த, அகுஸ்தீன் சபையைச் சார்ந்த தாதியரான அருள்சகோதரி Elisa Petra அவர்கள், கடந்த எட்டு ஆண்டுகளாக, Ketapang மறைமாவட்டத்தில், ஒதுக்குப்புறமாக உள்ள Tanjung பகுதியில், இந்த நலவாழ்வுப் பணியை ஆற்றி வருகிறார்.

தனது பணி பற்றி ஆசியச் செய்தியிடம் விளக்கிய அருள்சகோதரி Elisa Petra அவர்கள், தனது அகுஸ்தீன் சபையின் ஆன்மீகச் சுடரை, ஒதுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பரப்பவேண்டும் மற்றும், கடவுளுக்கும், மற்றவருக்கும் தன்னால் இயன்ற நல்லவற்றை மிகச் சிறப்பாக ஆற்றவேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார்.

மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு 5 முதல் 6 மணி நேரப் பயணம் மேற்கொள்ளவேண்டிய சூழலில் வாழ்கின்ற கருவுற்ற பெண்கள், குழந்தைகளைப் பாதுகாப்பாகப் பெற்றெடுக்க, தான் உதவி வருவதாக, அருள்சகோதரி Petra அவர்கள் கூறினார்.

தற்போதைய கோவிட்-19 கொள்ளைநோய் காலத்திலும், தனது பணியைத் தொடர்ந்து ஆற்றுவதாகவும், இந்த கொள்ளைநோய் காலத்தில், குறிப்பாக, Tanjung போன்ற கிராமப் பகுதியில் பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பது மிகவும் கடினமாக உள்ளது என்றும் அருள்சகோதரி Elisa Petra அவர்கள் கூறினார்.

அருள்சகோதரி Elisa Petra அவர்கள் ஆற்றிவரும்,  இந்த நலவாழ்வுப் பணி, 1955ம் ஆண்டில், டச்சு நாட்டைச் சேர்ந்த அகுஸ்தீன் சபை மறைப்பணியாளர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டது. (AsiaNews)

13 November 2020, 15:04