தேடுதல்

இயேசு சபை அருள்பணியாளர் Stan Swamy அவர்களுடன் ஒருமைப்பாடு இயேசு சபை அருள்பணியாளர் Stan Swamy அவர்களுடன் ஒருமைப்பாடு  (AFP or licensors)

அருள்பணியாளர் Stan Swamyக்கு மேலும் 21 நாட்கள் காவல் நீட்டிப்பு

கோவிட்-19 கொள்ளைநோய் கட்டுப்பாடுகளையும் மீறி அருள்பணியாளரை மும்பைக்கு எடுத்துச் சென்ற காவல்துறை, அதே கொள்ளைநோயைக் காரணம் காட்டி அவரை நீதிமன்றத்திற்கு கொணர மறுக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தேசத்துரோகச் செயல்களில் ஈடுபட்டார் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் மும்பையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் இயேசு சபை அருள்பணியாளர் Stan Swamy அவர்களை, மேலும் 21 நாட்களுக்கு சிறையில் வைக்குமாறு சிறப்பு நீதிமன்றம் ஒன்று உத்தரவு வழங்கியுள்ளது.

அருள்பணியாளர் ஸ்டான் சுவாமி அவர்களை கடந்த மாதம் 8ம் தேதி இராஞ்சியில் கைது செய்து, கோவிட்-19 கொள்ளைநோய் குறித்த கட்டுப்பாடுகளையும் மீறி, அவரை மும்பைக்கு எடுத்துச் சென்ற தேசிய புலனாய்வுத் துறையின் பயங்கரவாத தடுப்பு காவல்துறையினர், அதே கோவிட் பிரச்சனையைக் காரணம் காட்டி, அவரை நீதிமன்றத்திற்கு முன் கொணர மறுத்து வருவது, முரண்பாடாக உள்ளது என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் மாதம் 23ம் தேதி அவர் நீதிமன்றத்தில் கொணரப்படவேண்டும் என சிறப்பு நீதிமன்றம் கட்டளையிட்ட போதிலும், இந்த கோவிட் காலத்தில் அவரின் வயதை கருத்தில் கொண்டு, அவரைக் கொணரமுடியாது என காவல்துறை அறிவித்து, அவரை கொணர மறுத்தது குறிப்பிடத்தக்கது..

பழங்குடியினத்தவரின் நில உரிமைகளுக்கு அயராது போராடி வந்த இயேசு சபை அருள்பணியாளர் சுவாமி அவர்கள், மாவோயிஸ்ட் தீவிரவாத குழுவுடன் தொடர்பு கொண்டிருந்தார் என ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்டு மும்பையில் சிறைவைக்கப்பட்டதிலிருந்து, தொடர்ந்து தடுப்புக்காவல் கால அளவு நீட்டிக்கப்பட்டே வருகின்றது.

தற்போது நவம்பர் 26ம் தேதி இவரின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வரை தடுப்புக்காவல் நீட்டிக்கப்படுவதாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் அருள்பணி சுவாமியின் வெளிஉலகத் தொடர்புகள் தீவிரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட குளிர்கால உடைகளைக்கூட சிறை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாகவும், இவ்வழக்கை ஆராய்ந்து வரும் வழக்கறிஞரும், இயேசு சபை அருள்பணியாளருமான சந்தானம் அவர்கள் தெரிவித்தார்.

09 November 2020, 14:18