தேடுதல்

Vatican News
புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள மெக்சிகோ ஆயர்  Arizmendi Esquivel  (16-12-2015) புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள மெக்சிகோ ஆயர் Arizmendi Esquivel (16-12-2015) 

பழங்குடி இன மக்கள் மீது திருத்தந்தை நன்மதிப்பு

புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள ஆயர் Arizmendi Esquivel அவர்கள், மெக்சிகோ நாட்டில் பழங்குடி இன மக்கள் வாழ்கின்ற Tapachula மறைமாவட்டம், குறிப்பாக, San Cristobal de Las Casas மறைமாவட்டத்தில் ஆயராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளவர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கர்தினால் என்ற பதவியல்ல, மாறாக, அன்போடு, பிறரன்புப் பணிகளை ஆற்றுவதே தனக்கு மிக முக்கியம் என்றும், கடவுளையும், அயலவரையும் அன்புகூர்வதே, நம்மை மதிப்புமிக்கவர்களாக ஆக்கும் என்றும், புதிதாக கர்தினாலாக உயர்த்தப்படும் மெக்சிகோ நாட்டு ஆயர் Felipe Arizmendi Esquivel அவர்கள் கூறியுள்ளார்.

நவம்பர் 28, இச்சனிக்கிழமை மாலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது தலைமைப் பணியில் நிறைவேற்றும் ஏழாவது கர்தினால்கள் அவையில் புதிதாக  இணையும் ஆயர் Felipe Arizmendi Esquivel அவர்கள், Zenit செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்தப் புதிய பதவி, வீணான பெருமையை தன்னில் உருவாக்காமல் இருப்பதற்கு, தூய ஆவியாரிடம் மன்றாடுவதாகக் கூறியுள்ளார்.

தான் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பது, மெக்சிகோ நாட்டு பழங்குடி இன மக்கள், அம்மக்களுக்குப் பணியாற்றும் ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும், துறவறத்தார் மீது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டிருக்கும் நன்மதிப்பையே வெளிப்படுத்துகின்றது என்று, புதிய கர்தினாலாகிய Arizmendi Esquivel அவர்கள் கூறினார்.

 தான் கர்தினாலாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, கடவுளுக்கும், திருத்தந்தைக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், புதிய கர்தினாலாகிய Arizmendi Esquivel அவர்கள் கூறினார்

மெக்சிகோ நாட்டில் பழங்குடி இன மக்கள் வாழ்கின்ற Tapachula மறைமாவட்டம், குறிப்பாக, San Cristobal de Las Casas மறைமாவட்டத்தில் ஆயராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள புதிய கர்தினால் Arizmendi Esquivel அவர்கள், அம்மக்கள் மத்தியிலும் இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவையின் கலாச்சாரம் மற்றும், கல்வி பணிக்குழுவின் உறுப்பினராகவும், பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

1963ம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்கென்று திருநிலைப்படுத்தப்பட்ட புதிய கர்தினால் Arizmendi Esquivel அவர்கள், 1991ம் ஆண்டில் Tapachula மறைமாவட்ட ஆயராகவும்,  பின்னர், San Cristobal de Las Casas மறைமாவட்ட ஆயராகவும் நியமனம் செய்யப்பட்டார். இவர், மெக்சிகோவின் Chiapas மாநிலத்தில் கடும் வறுமையில் வாழ்கின்ற பழங்குடி இன மக்கள் மத்தியில் ஆயராகப் பணியாற்றி, 2015ம் ஆண்டில், தனது 75வது வயதில், பணி ஓய்வு பெற்றார். (Zenit) 

28 November 2020, 14:44