தேடுதல்

சிகப்பு புதனன்று சிகப்பு ஒளி வெள்ளத்தில் இத்தாலியின் வெனிசியா(2018) சிகப்பு புதனன்று சிகப்பு ஒளி வெள்ளத்தில் இத்தாலியின் வெனிசியா(2018) 

துயர்களை அனுபவிக்கும் மக்களுக்காக 'சிவப்பு புதன்'

இம்மாதம் 25ம் தேதி இடம்பெறவிருக்கும் சிவப்பு புதன் சிறப்பு செப வழிபாடுகள், நம்பிக்கையின்மைகளால் இருளில் வாழும் மக்களுக்கு நம்பிக்கைகளை தூண்டுவதாக இருக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகில் தங்கள் விசுவாசத்தின் காரணமாக துன்பங்களை அனுபவிக்கும் கிறிஸ்தவர்களுக்கு சிறப்பான முறையில் செபிக்கும் நாளாக ஒவ்வோர் ஆண்டும் கடைபிடிக்கப்படும் 'சிவப்பு புதன்' நாளன்று, இவ்வாண்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் செபிக்கப்படும் என அறிவித்துள்ளது, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவை.

ACN எனப்படும் 'துன்புறும் திருஅவைகளுக்கு உதவி' என்ற அமைப்பின் பிலிப்பீன்ஸ் பிரிவின் தலைவர் பேராயர் Socrates Villegas அவர்கள் இந்நாளைக் குறித்துப் பேசுகையில், இம்மாதம் 25ம் தேதி இடம்பெறவிருக்கும் இந்த சிவப்பு புதன் சிறப்பு செப வழிபாடுகள், நம்பிக்கையின்மைகளால் இருளில் வாழும் மக்களுக்கு நம்பிக்கைகளை தூண்டுவதாக இருக்கும் என்று கூறினார்.

சிவப்பு என்பது கிறிஸ்தவ மத நம்பிக்கைகளுக்காக மறைசாட்சிகளாகியுள்ளோரை குறிப்பதாக இருப்பினும், அந்நிறம் அன்பையும் சுட்டிக்காட்டி நிற்பதால், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருப்போரையும், ஒரே திரு அவையாக, பிறரன்போடு நினைகூர்ந்து அந்நாளில் சிறப்பான விதத்தில் அவர்களுக்காக செபிப்போம், என அழைப்புவிடுத்தார் பேராயர் Villegas.

கொரோனா கதவடைப்புகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்ஸ் சமுதாயம், ஏழ்மையையும், உயிரிழப்புகளையும், துயர்களையும் தாங்க வேண்டியுள்ளது என்ற பேராயர் Villegas அவர்கள், திருஅவை, மற்றும், கிறிஸ்தவ சமூதாயங்கள் வழியாக  இறை இரக்கம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

உலகில் விசுவாசத்திற்காக துன்புறும் கிறிஸ்தவர்களுக்கென 2016ம் ஆண்டு பிரிட்டனில் துவக்கப்பட்ட இந்த சிவப்பு புதன் செப தினம், 2017ம் ஆண்டிலிருந்து பிலிப்பீன்ஸிலும் கடைபிடிக்கப்பட்டுவருகின்றது. இம்மாதம் 25ம் தேதி சிறப்பிக்கப்படும் இந்நாளில், அனைத்து திருஅவைக் கட்டடங்களும், சிவப்பு வண்ணத்தில் ஒளிவீசும்படி அமைக்கப்படும்.(ZENIT)

10 November 2020, 15:07