தேடுதல்

Vatican News
மலேசியாவில் கோவிட்-19 சிகிச்சை மலேசியாவில் கோவிட்-19 சிகிச்சை  

மலேசிய காரித்தாஸ் அமைப்பு - 'போர்க்கள மருத்துவமனை'

மலேசியாவில் குடியேறியவர்கள், மற்றும், புலம்பெயர்ந்தோர் நடுவே, 'போர்க்களத்தில் செயலாற்றும் ஒரு மருத்துவமனை' போல கத்தோலிக்கத் திருஅவை பணியாற்றிவருகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய், மலேசியா நாட்டில் உருவாக்கியுள்ள கூடுதல் வறுமையின் காரணமாக துன்புறுவோருக்கு, அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு ஆற்றிவரும் உதவிகளைக் குறித்து, இவ்வமைப்பின் செயலர், Charles Bertille அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

கோவிட்-19 கொள்ளைநோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 82 இலட்சம் பேருக்கு அரசிடமிருந்து எவ்வித உதவியும் கிடைப்பதில்லை என்றும், 2 கோடியே 10 இலட்சம் பேருக்கு மிகக் குறைந்த உதவிகளே கிடைக்கின்றன என்றும் Bertille அவர்கள் சுட்டிக்காட்டினார்.

உதவி கிடைக்காதவர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டிலிருந்து மலேசியாவில் குடியேறியவர்கள், மற்றும், புலம்பெயர்ந்தோர் என்பதையும் எடுத்துரைத்த Bertille அவர்கள், இவர்கள் நடுவே, 'போர்க்களத்தில் செயலாற்றும் ஒரு மருத்துவமனை' போல கத்தோலிக்கத் திருஅவை பணியாற்றிவருகிறது என்று கூறினார்.

மலேசிய காரித்தாஸ் அமைப்பு, அண்மையில், வலைத்தளம் வழியே நடத்திய ஒரு சந்திப்பில், கொள்ளைநோயினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களைக் குறித்த விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்றும், அதன் அடிப்படையில், செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன என்றும் காரித்தாஸ் செயலர் Bertille அவர்கள் கூறினார்.

மலேசியா, சிங்கப்பூர், ப்ருனேயி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கத்தோலிக்க ஆயர்கள் அவை, இவ்வாண்டு சனவரி மாதம் மலேசிய காரித்தாஸ் அமைப்பை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. (Fides)

25 November 2020, 14:47