தேடுதல்

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் விடுதலை கேட்டு போராட்டம் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் விடுதலை கேட்டு போராட்டம்  (AFP or licensors)

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு பிணையல் வழங்கப்பட...

பெல்காம் ஆயர் Derek Fernandes அவர்கள் தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்று, நவம்பர் 17, இச்செவ்வாயன்று கர்நாடக மாநிலத்தின் Belagavi மாவட்ட உதவி ஆணையரிடம் இரண்டு மனுக்களைச் சமர்ப்பித்துள்ளது

மேரி தெரேசா : வத்திக்கான் செய்திகள்

மும்பையில் சிறைவைக்கப்பட்டிருக்கும், 83 வயது நிறைந்த இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, அவருக்கு பிணையல் வழங்கப்படுமாறு, இந்திய கிறிஸ்தவர்கள், குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமருக்கு விண்ணப்பித்துள்ளனர்.

பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், சிறையிலிருந்து அனுப்பிய மடலை வாசித்தபின், பெல்காம் ஆயர் Derek Fernandes அவர்கள் தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்று, நவம்பர் 17, இச்செவ்வாயன்று கர்நாடக மாநிலத்தின் Belagavi மாவட்ட உதவி ஆணையரிடம் இரண்டு மனுக்களைச் சமர்ப்பித்துள்ளது.

அந்த மனுக்களில் ஒன்று, இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கும், மற்றொரு மனு, பிரதமர் நரேந்தர மோடி அவர்களுக்கும் என்று, முகவரியிட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதிநிதிகள் குழு, இந்த மனுக்களைச் சமர்ப்பிக்கும்முன், ஒன்றிணைந்த கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த இருநூறுக்கும் அதிகமான மக்கள், Belagavi நகர் ஆணையர் அலுவலகத்தின் முன்பாக, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்று வலியுறுத்தும் தட்டிகளை வைத்திருந்தனர்.

இந்த மனுக்கள் பற்றி யூக்கா செய்தியிடம் பேசிய ஆயர் Fernandes அவர்கள், உண்பதற்கு, குடிப்பதற்கு, மற்றும் ஏனைய சொந்தப் பணிகளை ஆற்றுவதற்கு அடுத்தவரின் உதவி தேவைப்படும் நிலையில் இருக்கின்ற அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், பிணையலில் விடுதலைசெய்யப்படவேண்டும் என்று கேட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் பூர்வீக இன மக்களின் நில உரிமைகளுக்காகப் பல ஆண்டுகளாகப் போராடிவரும் ஒரே காரணத்திற்காக, தீவிரவாதி என அரசால் கைது செய்யப்பட்டு மும்பையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தன்னுடன் சிறையில் இருக்கும் கைதி ஒருவரின் துணையுடன், மடல் ஒன்றை எழுதி, அனுப்பியுள்ளார்.

நரம்புத்தளர்ச்சி நோய் காரணமாக, தன்னால் ஒழுங்காக எழுதமுடியாது என்பதால், அதே சிறைச்சாலையில் இன்னொரு அறையில் வைக்கப்பட்டிருக்கும் மனித உரிமை நடவடிக்கையாளர் Arun Ferreira அவர்களின் துணையுடன் இந்த மடல் எழுதப்பட்டுள்ளது என்று, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இம்மடலில் கூறியுள்ளார்.

20 November 2020, 14:23