தேடுதல்

விண்மீன் இசைக்குழுவினர் விண்மீன் இசைக்குழுவினர் 

விண்மீன் இசைக்குழுவினர்: சிறாருக்கு நமது உதவி தேவை

"Star Singers" எனப்படும் விண்மீன் இசைக்குழுவினர், ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சிறாருக்கு நமது உதவி தேவை, அவர்களை நாம் மறவாதிருப்போம் என்ற விண்ணப்பத்துடன், பாப்பிறை மறைப்பணி கழகத்தின் பாலர் சபையைச் சார்ந்த (POSI)  Star Singers" எனப்படும் விண்மீன் இசைக்குழுவினர், தங்களின் இவ்வாண்டு ஒருமைப்பாட்டுப் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறுகின்றது.  

சுவிட்சர்லாந்து நாட்டின் பிரெஞ்ச் மொழி பேசும் பகுதியிலுள்ள விண்மீன் இசைக்குழுவினர், திருவருகைக்காலம் மற்றும், திருக்காட்சி பெருவிழா காலங்களில், தங்களின் படைப்பாற்றல் மற்றும், ஒருமைப்பாட்டு நடவடிக்கைகளால் நிதி சேகரித்து துன்புறும் சிறாருக்கு வழங்கி வருகின்றனர்.

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், தங்களின் நடவடிக்கைகளை மிகக் கவனத்துடன் மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ள இந்த இசைக்குழுவினர், தங்களை வழிநடத்துவோரின் உதவியுடன், அரசு அதிகாரிகளின் அனுமதிபெற்று செயல்படவுள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.   

"Star Singers" எனப்படும் இந்த இசைக்குழுவினர், ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தில், முக்கிய அங்கம் வகிக்கின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டில், ஜெர்மன் நாட்டு விண்மீன் இசைக்குழுவின் ஏறத்தாழ மூன்று இலட்சம் சிறார், "கிறிஸ்து இந்த வீட்டை ஆசீர்வதிக்கிறார்" என்று எழுதப்பட்ட அட்டைகளுடன் வீடுகளைச் சந்தித்து, உலகெங்கும் துன்புறும் தங்களையொத்த வயதுடைய சிறாருக்கென நன்கொடைகளைச் சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (Fides)

07 November 2020, 15:04