தேடுதல்

Vatican News
வீரமாமுனிவர் வீரமாமுனிவர்  

வீரமாமுனிவர் பிறந்த நாளில் சிறப்பு மரியாதை

சென்னை நகரில் பணியாற்றும் இயேசு சபையினர், அந்நகரிலுள்ள வீரமாமுனிவரது உருவத்தின் முன்பாக மரியாதை செலுத்திய நிகழ்வில், தமிழக அமைச்சர் திருவாளர் கே. பாண்டியராஜன் அவர்களும் கலந்துகொண்டார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இத்தாலி நாட்டு மறைப்பணியாளரான, இயேசு சபை அருள்பணியாளர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi) என்ற இயற்பெயரைக்கொண்ட வீரமாமுனிவர் அவர்கள் (நவ.8, 1680 – பிப்.4, 1747) பிறந்த நாளில், தமிழக இயேசு சபையினர் அவரை சிறப்பாக நினைவுகூர்ந்து, அவர் தமிழுக்கும், திருஅவைக்கும் ஆற்றிய அரும்பணிகளை எடுத்துரைத்தனர்.

சென்னை நகரில் பணியாற்றும் இயேசு சபையினர், மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள வீரமாமுனிவரது சிலைக்கு முன்பாக, நவம்பர் 8, இஞ்ஞாயிறன்று, மரியாதை செலுத்திய நிகழ்வில், தமிழ் மொழி மற்றும், தமிழ் கலாச்சாரத் துறை அமைச்சர் திருவாளர் கே. பாண்டியராஜன் அவர்களும் கலந்துகொண்டார். 

இத்தாலி நாட்டிலுள்ள Castiglione dello Stiviere என்னும் ஊரில் 1680ம் ஆண்டில் பிறந்த வீரமாமுனிவர், 1698ம் ஆண்டில் இயேசு சபையில் இணைந்து 1709ம் ஆண்டில் அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு, மதுரைக்கு மறைப்பணியாற்ற அனுப்பப்பட்டார்.

சீனாவில் மறைப்பணியாற்றிய இயேசு சபை அருள்பணியாளர்கள் போன்று, இவரும், இந்திய உணவு மற்றும், வாழ்வுமுறையைப் பின்பற்றினார். இந்துமதத் துறவிகள் போன்று உடையணிந்து, அந்த மத கோவில்களால் தூண்டப்பட்டு, கிறிஸ்தவ ஆலயங்களை இவர் எழுப்பினார்.

18ம் நூற்றாண்டில் இந்தியாவில் மறைப்பணியாற்றிய, மிக முக்கியமான இயேசு சபை அருள்பணியாளர்களுள் ஒருவரான இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று, இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து, தமிழுக்குச் செழுமையூட்டினார்.

முதலில் தனது பெயரை தைரியநாதசாமி என்று மாற்றிய இவர், நன்கு தமிழ் கற்ற பின்னர், அப்பெயர் வடமொழி என்பதால், அந்தப் பெயரை செந்தமிழில், வீரமாமுனிவர் என மாற்றிக்கொண்டார்.

கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என, பன்முகத் திறமைகளைக் கொண்டிருந்த இவர், தமிழ் உரைநடையின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுவின் வாழ்க்கைத் தொடர்பான நிகழ்வுகளையும், இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும், தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது, இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக அமைந்துள்ளது. (AsiaNews)

10 November 2020, 15:22