தேடுதல்

கோவிட்-19 காலத்தில் பிரித்தானியா கோவிட்-19 காலத்தில் பிரித்தானியா  (AFP or licensors)

வறுமை ஒழிக்கப்பட புதிய யுக்திகள் அவசியம்

பிரித்தானிய சமயத் தலைவர்கள், வறுமை ஒழிக்கப்பட புதிய யுக்திகளுக்கு அழைப்பு விடுத்துவரும்வேளையில், கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகள், ஒவ்வொரு நாளும், 95 ஆயிரத்திற்கும் அதிகமான உணவுப்பொட்டலங்களை வழங்கி வருகின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிரித்தானியாவில் சிறார் எதிர்கொள்ளும் கடும் வறுமைநிலையை அகற்றுவதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று, அந்நாட்டு கத்தோலிக்க கர்தினால் வின்சென்ட் நிக்கொல்ஸ் அவர்கள் உட்பட, இருபது சமயத் தலைவர்கள் இணைந்து, பிரதமருக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

நம் சமுதாயத்தில், குறிப்பாக, இந்த நெருக்கடி காலத்தில், மிகவும் துன்புறும் மக்களைப் பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படவேண்டியது எங்களது கடமை என்று, அந்த மடலில் சமயத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரித்தானிய சமயத் தலைவர்கள், வறுமை ஒழிக்கப்பட புதிய யுக்திகளுக்கு அழைப்பு விடுத்துவரும்வேளையில், கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகள், ஒவ்வொரு நாளும், 95 ஆயிரத்திற்கும் அதிகமான உணவுப்பொட்டலங்களை வழங்கி வருகின்றன.

சமயத்தலைவர்களின் இந்த அழைப்பிற்கு ஆதரவளித்துள்ள காரித்தாஸ் அமைப்பு, Westminster மறைமாவட்டம் முழுவதும் அதிகரித்துவரும் வறுமையைப் போக்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் அவசியம் என்றும் கூறியுள்ளது.

பிரித்தானியாவில் கோவிட்-19 கொள்ளைநோய் பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் முதன் முறையாக ஊரடங்கு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டபோது, அதிர்ச்சியூட்டும் முறையில் அதிகரித்த வறுமை மற்றும், பாதுகாப்பின்மையைப் போக்குவதற்கு, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, அதிசயிக்கதக்க வகையில் உதவிகளை ஆற்றியது.

இங்கிலாந்தில் நிலவும் வறுமை நிலை குறித்துக் கூறிய காரித்தாஸ் அமைப்பில் உணவு சேகரிக்கும் பொறுப்பிலுள்ள Anna Gavurin அவர்கள், பெற்றோர், புலம்பெயர்ந்தோர் என்ற நிலையில் உள்ளனர் என்பதற்காக, எந்த ஒரு குழந்தையும் பசியுடன் இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.  

Finchley Eastலுள்ள புனித மரியா பங்குத்தளம், கடந்த மார்ச் மாதத்திலிருந்து, தனது உணவு வங்கியை நானூறு விழுக்காடு அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. (ICN)

07 November 2020, 15:01