தேடுதல்

Vatican News
சிரியா குழந்தைகள் சிரியா குழந்தைகள் 

சிரியா குழந்தைகளின் முகங்களில் புன்னகையைக் கொணர...

25,000 குளிர்கால ஆடைகளை சிறார்களுக்கு வழங்குவதோடு, அவற்றை, சிரியாவிலேயே தயாரிப்பதன் வழியே, வேலை வாய்ப்புகளை வழங்கும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இயேசுமரி துறவுசபையின் வழியாக, சிரியாவின் 25,000 குழந்தைகளுக்கு குளிர்கால ஆடைகளை வழங்க உள்ளது கத்தோலிக்க பிறரன்பு நிறுவனமான Aid to the Church in Need அமைப்பு.

25,000 குளிர்கால ஆடைகளை சிறார்களுக்கு வழங்குவதோடு, அவற்றை, சிரியாவிலேயே தயாரிப்பதன் வழியே, அந்நாட்டவருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் பணிகளையும் ஆற்ற முனைந்துள்ளது, இந்த கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.

சிரியாவின் உள்நாட்டுப்போரால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள வட சிரியாவின் Aleppo நகரில், இந்த குளிர்கால ஆடைகள் தயார் செய்யப்படும் எனவும், இது உள்நாட்டு பொருளாதாரத்திற்கு உதவுவதாக இருக்கும் எனவும் தெரிவித்தது ACN பிறரன்பு அமைப்பு.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என 180 தொழிலாளர்களைக் கொண்டுள்ள 30 தொழிற்கூடங்கள் இந்த குளிர்கால ஆடைகளை குழந்தைகளுக்கென தயாரித்து வருகின்றன.

இந்த ஆண்டு கிறிஸ்து பிறப்பு காலத்தில், குழந்தைகளின் முகங்களில் புன்னகையை கொணரும் நோக்கத்தில், சிரியாவின் பல்வேறு நகர்களின் குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களையும் ஏற்பாடுச் செய்துள்ளது, ACN கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.

23 November 2020, 14:52