தேடுதல்

Vatican News
பெலாருஸ் நாட்டில் நீதிக்காகப் போராடி உயிர்துறந்த இளையவரின் இறுதி ஊர்வலம் - நவம்பர் 20, 2020. பெலாருஸ் நாட்டில் நீதிக்காகப் போராடி உயிர்துறந்த இளையவரின் இறுதி ஊர்வலம் - நவம்பர் 20, 2020.  (ANSA)

பெலாருசில் அமைதியான தீர்வுக்கு ஆயர்கள் அழைப்பு

ஏறத்தாழ 95 இலட்சம் மக்கள் வாழ்கின்ற பெலாருஸ் நாடு, இரஷ்யா, போலந்து, லாத்வியா, லித்துவேனியா, உக்ரைன் ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டிருக்கின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பெலாருஸ் நாட்டில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அரசுத்தலைவர் தேர்தலுக்குப்பின், அந்நாட்டை முடக்கிப்போட்டுள்ள நெருக்கடிநிலைக்கு, அமைதியான முறையில் தீர்வு காணப்படுமாறு, அந்நாட்டு ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பெலாருஸ் மற்றும், இரஷ்யாவைச் சேர்ந்த கத்தோலிக்க ஆயர்கள், நவம்பர் 25, இப்புதனன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், பல மாதங்களாக இடம்பெற்ற போராட்டங்களும், அரசின் அடக்குமுறைகளும், நெருக்கடிநிலைகளை அதிகமாக்கியுள்ளன என்று கூறியுள்ளனர்.

நாட்டில் வன்முறை நிறுத்தப்படவில்லை, இரத்தம் தொடர்ந்து சிந்தப்பட்டு வருகின்றது, சமுதாயம் பிளவுபட்டுள்ளது என்றும், இந்நிலை, மகிழ்வான வருங்காலத்தை மக்களுக்கு முன்னறிவிக்காது என்றும் கூறியுள்ள ஆயர்கள், தனக்குத்தானே பிளவுண்டுள்ள இல்லம், நிலையாய் இருக்காது என்ற கிறிஸ்துவின் சொற்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

ஏறத்தாழ 95 இலட்சம் மக்கள் வாழ்கின்ற பெலாருஸ் நாடு, இரஷ்யா, போலந்து, லாத்வியா, லித்துவேனியா, உக்ரைன் ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்டிருக்கின்றது என்றும், நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சனைக்குமுன், பல்வேறு மதங்கள் மற்றும், இனக்குழுக்கள் மத்தியில் நல்லிணக்கமும், நன்மதிப்பும் நிலவின என்பதையும், ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நற்செய்தி மற்றும், சமுதாயக் கோட்பாட்டின் மீது கட்டப்பட்டு, அவற்றால் வழிநடத்தப்படும் கத்தோலிக்கத் திருஅவை, வன்முறை, சட்டம்ஒழுங்கின்மை, அநீதி, பொய்மை ஆகியவற்றை எதிர்க்கின்றது, மற்றும், அவற்றுக்கு எதிரான தன் கண்டனத்தைத் தெரிவிக்கின்றது என்று, ஆயர்களின் செய்தி கூறுகின்றது. (CNA)

28 November 2020, 14:29