தேடுதல்

வியன்னாவில் தாக்குதல்கள் வியன்னாவில் தாக்குதல்கள்  (ANSA)

வன்முறையை எதனாலும் நியாயப்படுத்த முடியாது

வியன்னா நகரில் தொழுகைக்கூடத்தின் முன்பாக, தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது, 1981ம் ஆண்டில் தொழுகைக்கூடம் கடுமையாய்த் தாக்கப்பட்டது மற்றும், அதில் இடம்பெற்ற உயிரிழப்புக்களை நினைவுபடுத்துகின்றது - கர்தினால் Schönborn

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆஸ்ட்ரியா நாட்டு தலைநகர் வியன்னாவில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களுக்குப் பின்புலம் எதுவாக இருந்தாலும், அவை, எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்தப்பட முடியாதவை என்று, அந்நாட்டு கர்தினால் Christoph Schönborn அவர்கள் கூறியுள்ளார்.

நவம்பர் 02, இத்திங்கள் இரவில், வியன்னா நகரில் ஆறு  இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள, வியன்னா பேராயர் கர்தினால் Schönborn அவர்கள், இந்த தாக்குதல்களில், உயிரிழந்தோர் மற்றும், காயமுற்றோருக்கு உதவிவரும் அனைவருக்காகவும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்கிருமி மீண்டும் பரவத்தொடங்கியுள்ளதை முன்னிட்டு, அவசரகாலம் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், இத்தகைய இரத்தம் சிந்தும் தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்காக பணியாற்றிவரும் எல்லாருக்காகவும் தான் செபிப்பதாக, கர்தினால் Schönborn அவர்கள் உரைத்துள்ளார்.

வியன்னா நகரில் வாழ்கின்ற யூத சமுதாயத்தின் தொழுகைக்கூடத்தின் முன்பாக, இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது, 1981ம் ஆண்டில் தொழுகைக்கூடம் கடுமையாய்த் தாக்கப்பட்டது மற்றும், அதில் இடம்பெற்ற உயிரிழப்புக்களை நினைவுபடுத்துகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜெர்மன் நாட்டு கத்தோலிக்க ஆயர்களும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும், இத்தாக்குதல்களுக்கு எதிரான தங்களின் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

வியன்னாவில் நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல்களில் மூன்று பேர் இறந்துள்ளனர் மற்றும், குறைந்தது 14 பேர் காயமுற்றுள்ளனர். இவர்களில் சிலர் இறக்கும் நிலையில் உள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

03 November 2020, 13:45