தேடுதல்

Vatican News
காமரூன் நாட்டில் அமைதி முயற்சிகள் காமரூன் நாட்டில் அமைதி முயற்சிகள்   (AFP or licensors)

மொழிப் பிரச்சனையால் உயிர்பலிகள்

காமரூன் நாட்டில் அமைதி பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு மதத்தலைவர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

காமரூன் நாட்டில் இடம்பெறும் மோதல்களை முடிவுக்குக் கொணரும் நோக்கத்தில், அமைதி பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்க, இருதரப்பினருக்கும் தொடர்பற்ற மூன்றாம் குழு ஒன்றை அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டு அரசுத்தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர், காமரூன் மதத்தலைவர்கள்.

ஆயுதம் தாங்கிய குழுக்களின் மோதல்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்களின் சார்பாக இந்த அழைப்பை விடுப்பதாகக் கூறும் அந்நாட்டு மதத்தலைவர்கள், இது குறித்து, அண்மையில், இருநாள் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தினர்.

உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமானால், நடுநிலையான ஒரு குழுவின் தலையீடு இன்றியமையாதது எனக்கூறும் கிறிஸ்தவ சபைகள், மற்றும், இஸ்லாம் மதத்தலைவர்களின் அறிக்கை, அரசுத்தலைவர் Paul Biya அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

காமரூன் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், பிரெஞ்ச் மொழியை ஊக்குவிக்கும் அரசுக்கும், ஆங்கிலம் பேசும் பகுதிகளுக்கும் இடையே 2016ம் ஆண்டில் துவங்கிய மோதல்களால், பொதுமக்கள் பெருமளவில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

30 November 2020, 15:03