தேடுதல்

கர்தினால் Christian Wiyghan Tumi கர்தினால் Christian Wiyghan Tumi  

கடத்தப்பட்டிருந்த 90 வயது கர்தினால் Tumi விடுதலை

காமரூன் நாட்டின் வடமேற்கு மற்றும், தென் மேற்குப் பகுதிகளில் நான்கு ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் போர் முடிவுக்கு வருவதற்கு கர்தினால் Tumi அவர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 05, இவ்வியாழனன்று காமரூன் நாட்டின் வடமேற்குப் பகுதியில், பிரிவினைவாதப் போராளிகளால் கடத்திச்செல்லப்பட்டதாகச் சொல்லப்படும் 90 வயது நிரம்பிய கர்தினால் Christian Wiyghan Tumi அவர்கள், நவம்பர் 06, இவ்வெள்ளியன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Doualaவின் முன்னாள் பேராயரான கர்தினால் Tumi அவர்கள், ஆயுதம் ஏந்திய மனிதர்களால் கடத்திச்செல்லப்பட்டது குறித்து வத்திக்கான் செய்தித் துறைக்குப் பேட்டியளித்த, தற்போதைய Douala பேராயர் Samuel Kleda அவர்கள், தான் கடத்தல்காரர்களால் கேள்விகளால் நச்சரிக்கப்பட்டதாக, கர்தினால் Tumi அவர்கள், தொலைப்பேசியில் கூறினார் என்று தெரிவித்தார்.

காமரூன் நாட்டின் வடமேற்கு மற்றும், தென் மேற்குப் பகுதிகளில் நான்கு ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் போர் முடிவுக்கு வரவும், அப்பகுதிகளில் அமைதி நிலவவும், கலந்துரையாடல் இடம்பெறவேணடும் என்று, கர்தினால் Tumi அவர்கள், தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார்.

கடந்த அக்டோபர் 28ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் மறைக்கல்வியுரைக்குப்பின், காமரூன் நாட்டில் போர் இடம்பெறும் இந்தப் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும் என்று செபித்து, அதற்காக அழைப்பும் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2016ம் ஆண்டில், காமரூன் நாட்டில் ஆங்கிலம் பேசும் வடமேற்கு மற்றும், தென் மேற்குப் பகுதிகளில், கல்வி மற்றும், நீதி நிறுவனங்களில், பிரெஞ்சு மொழி பேசுவோர் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து கிளர்ச்சி ஆரம்பமானது.

06 November 2020, 15:41