தேடுதல்

சவுதி அரேபியாவில் பணியாற்றும் வெளிநாட்டவர் சவுதி அரேபியாவில் பணியாற்றும் வெளிநாட்டவர் 

தொழில்முறை சீர்திருத்தங்கள் புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கு

பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த முப்பது இலட்சம் புலம்பெயர்ந்த பணியாளர்களில் ஏறத்தாழ எட்டு இலட்சம் பேர், சவுதி அரேபியாவில் பணியாற்றுகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சவுதி அரேபியாவில், ஒப்பந்தப்படி வேலைசெய்பவர்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அரசு மேற்கொண்டுவரும் திட்டங்கள், அந்நாட்டில் வீட்டுவேலை செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற தன் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார், பிலிப்பீன்ஸ் ஆயர் ஒருவர்.

சவுதி அரேபியாவில் இடம்பெற்றுவரும் தொழில்முறை சீர்திருத்தங்கள் குறித்து கருத்து தெரிவித்த, பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் மேய்ப்புப்பணி குழுவின் தலைவர் ஆயர் Ruperto Santos அவர்கள், இச்சீர்திருத்தங்கள், அந்நாட்டில் பணியாற்றும் இலட்சக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பயனளிக்கும் என்று கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவில் வேலைக்கு ஆள்களைத் தேர்வு செய்யும், “kafala” எனப்படும் அமைப்புமுறையில் நிலவும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது என்றும், இந்த திட்டம் 2021ம் ஆண்டு மார்ச் மாதம், நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டம், அந்நாட்டில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் வேலைகளை மாற்றவும், அவற்றிலிருந்து வெளியேறவும் வழியமைக்கிறது.

மேலும், வேலைக்குச் சேர்த்தவரின் அனுமதியின்றி, தொழிலாளர்கள், சவுதி அரேபிய அரசிடமிருந்து, நாட்டில் நுழைவதற்கும், நாட்டைவிட்டு வெளியேறுவதற்கும், விசாக்களைப் பெறமுடியும்.

சவுதி அரசின் இந்த சீர்திருத்த நடவடிக்கைகளால், அந்நாட்டில் வீட்டுவேலை செய்யும் பிலிப்பீன்ஸ் நாட்டவர் பலனடைவார்கள் என்றுரைத்த ஆயர் Ruperto Santos அவர்கள், kafala முறையில், மோசமாக நடத்தப்படவும், தவறாகப் பயன்படுத்தப்படவுமான சூழலை, புலம்பெயர்ந்த பணியாளர்கள் எதிர்கொள்கின்றனர் என்று கூறினார்.

பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த முப்பது இலட்சம் புலம்பெயர்ந்த பணியாளர்களில் ஏறத்தாழ எட்டு இலட்சம் பேர் சவுதி அரேபியாவில் பணியாற்றுகின்றனர்.

சவுதி அரேபியா போன்று, கத்தார் நாட்டில் கொண்டுவந்த சீர்திருத்தங்களால் ஏறத்தாழ  2,41,000 பிலிப்பீன்ஸ் பணியாளர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், பஹ்ரைன் நாட்டில் 2009ம் ஆண்டில் kafala நடைமுறை இரத்துசெய்யப்பட்டது என்று கூறப்படுகின்றது.

13 November 2020, 15:07