தேடுதல்

பேராயர் ஈமோன் மார்ட்டின் அவர்கள் தயாரித்துள்ள திருவருகைக்கால நாளேடு பேராயர் ஈமோன் மார்ட்டின் அவர்கள் தயாரித்துள்ள திருவருகைக்கால நாளேடு  

'நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ள' - திருவருகைக்கால நாளேடு

நாம் துவங்கவிருக்கும் திருவருகைக்காலம் நல்லதோர் எதிர்காலத்தை நோக்குவதற்குரிய நம்பிக்கையை நமக்குள் விதைக்கட்டும் - அயர்லாந்து பேராயர் ஈமோன் மார்ட்டின்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோயின் காரணமாக, இவ்வாண்டு, நம் அனைவருக்கும் போராட்டமான ஓர் ஆண்டாக இருந்துவரும் வேளையில், நாம் துவங்கவிருக்கும் திருவருகைக்காலம் நல்லதோர் எதிர்காலத்தை நோக்குவதற்குரிய நம்பிக்கையை நமக்குள் விதைக்கட்டும் என்று, அயர்லாந்து பேராயர் ஈமோன் மார்ட்டின் அவர்கள், கூறியுள்ளார்.

அயர்லாந்து நாட்டின் தலைமை ஆயராகப் பணியாற்றும் பேராயர் ஈமோன் மார்ட்டின் அவர்கள், அண்மித்துவரும் திருவருகைக்காலத்திற்கென நாளேடு ஒன்றை, இணையதளத்தில் வெளியிட்ட வேளையில் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த நாளேட்டினை ஒவ்வொரு நாளும் திறந்து, அங்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்களையும், சிந்தனைகளையும் வாசித்து, ஐந்து நிமிடங்கள் தியானித்தால், அது அனைவருக்கும் பயனுள்ள ஒரு முயற்சியாக இருக்கும் என்று பேராயர் மார்ட்டின் அவர்கள் கூறினார்.

இந்தக் கொள்ளைநோய் மற்றும் அதனால் விதிக்கப்பட்ட முழு அடைப்பு காலத்தில், மக்கள் தங்கள் நலவாழ்வு, வேலை, குடும்பம் என்ற அனைத்து தளங்களிலும் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்து வந்தாலும், பிறரன்பால் தூண்டப்பட்டு, அவர்களில் பலர், உதவிக்கரங்களை நீட்டியிருப்பது, கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமான உண்மையை உலகறியச் செய்துள்ளது என்று பேராயர் மார்ட்டின் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வோர் ஆண்டும், குளிர்காலத்தின் இருளான நாள்களில், திருவருகைக்காலமும், கிறிஸ்துபிறப்பு காலமும், வருவது, கிறிஸ்து இவ்வுலகிற்கு ஒளியைக் கொணர வந்தார் என்பதை உணர்த்தவே என்று கூறிய பேராயர் மார்ட்டின் அவர்கள், ஏனைய ஆண்டுகளைவிட, இவ்வாண்டு, குழந்தை இயேசு கொணரும் ஒளி நமக்கு அதிகம் தேவைப்படுகிறது என்று எடுத்துரைத்தார்.

#SharingHope அதாவது, 'நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ள' என்ற பொருளில் வெளியிடப்பட்டுள்ள இந்த இணையதள நாளேட்டில், ஒவ்வொரு நாளின் திருப்பலி வாசகம், திருவருகைக் காலத்தையொட்டிய சிறு காணொளிகள், குடும்ப செபங்கள் ஆகியவை வெளியிடப்படுகின்றன. 

கடந்த ஏழு ஆண்டுகளாக பேராயர் மார்ட்டின் அவர்கள் வெளியிட்டு வரும் இந்த நாளேடு, பள்ளிகள், பங்குத்தளங்கள் மற்றும் குடும்பங்களில் உள்ளவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருந்துள்ளது என்று, அயர்லாந்து ஆயர் பேரவையின் அறிக்கையொன்று கூறுகிறது.

இதற்கிடையே, கனடா நாட்டு ஆயர் பேரவை, திருவருகைக்காலத்தில், விசுவாசிகள், சிறப்பான முறையில் பங்கேற்க உதவியாக, 'திருவருகைக் காலத்தின் பயணம்' என்ற தலைப்பில், காணொளித் தொடர் ஒன்றை, வாரம் ஒருமுறை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. (ICN/ Zenit)

25 November 2020, 14:42