தேடுதல்

'சிவப்பு வாரத்'தையொட்டி, சிவப்பு வண்ணத்தில், உரோம் நகரி்ன் கொலோசெயம் - கோப்புப் படம் 'சிவப்பு வாரத்'தையொட்டி, சிவப்பு வண்ணத்தில், உரோம் நகரி்ன் கொலோசெயம் - கோப்புப் படம்  (AFP or licensors)

நவம்பர் 18- 25, துன்புறும் கிறிஸ்தவர்களுக்காக, 'சிவப்பு வாரம்'

கனடா முதல் ஆஸ்திரேலியா வரை, பல்வேறு நாடுகளில், 'சிவப்பு வாரம்' முழுவதும், பல்வேறு ஆலயங்களும், பல பொதுவான அடையாளச் சின்னங்களும் சிவப்பு வண்ணத்தில் ஒளிரும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தங்கள் மதநம்பிக்கை காரணமாக, உலகெங்கும் துன்புறும் கிறிஸ்தவர்களை நினைவுகூரும் வண்ணம், நவம்பர் 18 இப்புதன் முதல், 25, அடுத்த புதன் முடிய, 'சிவப்பு வாரம்' (#RedWeek) கடைபிடிக்கப்படும் என்று, 'தேவையில் உள்ள திருஅவைக்கு உதவி' என்ற பெயரில் இயங்கிவரும் ACN அமைப்பு அறிவித்துள்ளது.

உலகெங்கும், ஏறத்தாழ, ஒவ்வோர் ஆண்டும் துன்புறும் 25 கோடிக்கும் அதிகமான கிறிஸ்தவர்களை நினைவுகூரும் வண்ணம், 2015ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த 'சிவப்பு வாரம்', இவ்வாண்டு, கோவிட்-19 கொள்ளைநோய் பரவியுள்ள வேளையிலும் கடைபிடிக்கப்படுகிறது என்று, ACN அமைப்பு அறிவித்துள்ளது.

ஆஸ்திரியா நாட்டை மையப்படுத்தி, இவ்வாண்டு நடைபெறும் 'சிவப்பு வாரம்', நவம்பர் 18, இப்புதனன்று, ஆஸ்திரியாவின் வியென்னா நகரில் அமைந்துள்ள புனித ஸ்தேவான் பேராலயத்தில் நடைபெற்ற திருப்பலியுடன் துவங்கியது.

கனடா முதல் ஆஸ்திரேலியா வரை பல்வேறு நாடுகளில், இந்த சிவப்பு வாரம் முழுவதும், பல்வேறு ஆலயங்களும், ரியோ நகரில் அமைந்துள்ள மீட்பர் கிறிஸ்துவின் திரு உருவம், உரோம் நகரில் கொலோசெயம் உட்பட, பல பொதுவான அடையாளச் சின்னங்களும் சிவப்பு வண்ணத்தில் ஒளிரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கள் மத நம்பிக்கைக்காக அநீதமான முறையில் சிறைப்படுத்தப்பட்டிருப்போரை விடுவிக்க கோரி, பிரித்தானியா மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளில், இவ்வாண்டு, சிறப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், இந்தக் கொள்ளைநோய் காலத்தில், மக்கள் பணியில் ஈடுபட்டு நோயுற்ற மற்றும் இறந்த அருள்பணியாளர்கள், துறவியர், மற்றும் ஏனைய பணியாளர்களுக்காகவும் பிலிப்பீன்ஸ் நாட்டில், 'சிவப்பு வாரம்' கடைபிடிக்கப்படுகின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. (Zenit)

18 November 2020, 14:09