தேடுதல்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் 

துருக்கி காரித்தாஸ், முஸ்லிம்களுடன் இணைந்து மீட்புப்பணியில்

அக்டோபர் 30ம் தேதி, துருக்கி மற்றும், கிரேக்க நாடுகளின் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில், பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது மற்றும், 900க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

துருக்கி மற்றும், கிரேக்க நாடுகளின் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, உடனடி நிவாரண உதவிகளை ஆற்றி வருகின்றது என்று, துருக்கி நாட்டு காரித்தாஸ் அமைப்பின் தலைவரும், Anatolia அப்போஸ்தலிக்க நிர்வாகியுமான ஆயர் Paolo Bizetti அவர்கள் கூறியுள்ளார்.

துருக்கி காரித்தாஸ் அமைப்பு, அந்நாட்டு பேரிடர் மற்றும், அவசரகால மேலாண்மை அமைப்புடன் (AFAD) இணைந்து, தேவையில் இருப்போருக்கு உதவிகளை ஆற்றி வருகின்றது என்று, ஆயர் Bizetti அவர்கள், ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார்.

துருக்கி நாட்டு காரித்தாஸ் அமைப்பு தற்போது ஆற்றிவரும் அவசரகால உதவிகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli Tutti) என்ற திருமடலின் உணர்வில் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கூறிய ஆயர் Bizetti அவர்கள், ஒருமைப்பாட்டுணர்வின்றி, கொடுந்துன்பங்களை எதிர்கொள்வது இயலாத காரியம் என்று தெரிவித்தார்.

உலக அளவில் நெருக்கடிநிலைகள் உருவாகியுள்ள இந்த காலக்கட்டத்தில், இந்த இயற்கைப் பேரிடர், பல்வேறு மக்கள் மற்றும், மதங்களுக்கிடையே உடன்பிறந்த உணர்வை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும், ஆயர் Bizetti அவர்கள் கூறினார். 

துருக்கி மற்றும் கிரேக்க நாடுகளின் ஏஜியன் கடற்கரைப் பகுதியில், அக்டோபர் 30 கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற நிலநடுக்கத்திற்குப் பின்னும், 1,120 முறைகளுக்கு மேலாக சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இதுவரை 1,800க்கும் அதிகமான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டாயிரம் கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளன என்று ஆசியச் செய்தி கூறுகிறது. (AsiaNews)

03 November 2020, 14:59