அரசுத்தலைவர் தேர்தல் நாளுக்காக நவநாள் செபங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடைபெறவுள்ள அரசுத்தலைவர் தேர்தலை முன்னிட்டு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள், நவநாள் பக்தி முயற்சி ஒன்றைத் தொடங்குவதற்குத் தீர்மானித்துள்ளனர்.
வருகிற நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தலில், அனைவரும் தங்கள் மனச்சான்றின்படி வாக்களிக்கவேண்டும் என்பதற்காக, இந்த நவநாள் காலத்தில், கத்தோலிக்கர், சிறப்பாக இறைவேண்டல் செய்யுமாறு, ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இயேசு கற்றுக்கொடுத்த செபம், அன்னை மரியாவை நோக்கி செபிக்கப்படும் அருள்மிகப் பெற்றவரே என்ற செபம், மூவொரு கடவுளை வணங்கும் செபம் ஆகியவற்றை, இந்த நவநாள் செப நாள்களில், கத்தோலிக்கர் செபிக்குமாறு, ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்
இந்த நவநாள் செப முயற்சி, அக்டோபர் 26, வருகிற திங்கள் முதல், நவம்பர் 3ம் தேதி முடிய இடம்பெறுகின்றது.
இயற்கையைப் பாதுகாத்தல், கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கும் கத்தோலிக்கப் போதனைகளின் பல்வேறு கூறுகள், மனித வாழ்வின் மாண்பு மற்றும், சமய சுதந்திரத்தின் முக்கியத்துவம் போன்ற பல்வேறு தலைப்புக்களில், இணைய பக்கத்தில், ஒவ்வொரு நாளும் செபக்கருத்து பதிவுசெய்யப்படும் என்றும், அமெரிக்க ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.
நவம்பர் 4ம் தேதி, புதனன்று, தேர்தலில் வெற்றிபெற்ற தலைவர்களுக்கென, சிறப்பு இறைவேண்டல் இடம்பெறும் என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் இணைய பக்கத்தில் 2020ம் ஆண்டின் தேர்தல் நவநாள் பற்றி வெளியிடப்பட்டுள்ளது.