தேடுதல்

இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி  

அருள்பணி ஸ்டான் சுவாமி விடுதலைக்காக தமிழக ஆயர்கள்

அருள்பணி ஸ்டான் சாமி அவர்கள், தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் பிறந்தவர். இயேசு சபையில் இணைந்த இவர், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, ஜார்கண்ட மாநிலத்தில், அடிப்படை உரிமைகளை இழந்துள்ள வறிய மக்கள் மத்தியில் பணியாற்றி வந்தவர்.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் ஜார்கண்ட மாநிலத்தில், கடந்த வாரத்தில், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால் கைதுசெய்யப்பட்டு, மும்பை சிறையில் வைக்கப்பட்டுள்ள, 83 வயது நிரம்பிய இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்காக, அமைதியான வழியில் போராடுங்கள் என்று, தமிழக ஆயர் பேரவை அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

அருள்பணி சுவாமி அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர் விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக ஆயர் பேரவையின்

தலைவர் பேராயர் அந்தோனி பாப்புசாமி, துணைத்தலைவர் ஆயர் நீதிநாதன், செயலர் ஆயர் தாமஸ் பால்சாமி, துணைச் செயலர் அருள்பணி முனைவர் சகாயராஜ் லூர்துசாமி ஆகியோர் கையெழுத்திட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஜார்கண்ட மாநிலத்தில், பூர்வீக இன மற்றும், தலித் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக, அம்மக்கள் மத்தியில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக மிகுந்த அர்ப்பணிப்போடு பணியாற்றிவந்த அருள்பணி ஸ்டேன் சுவாமி அவர்கள் மீது, இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு, பொய்க் குற்றம் சாட்டி, இம்மாதம் 8ம் தேதி, வியாழன் இரவு கைது செய்துள்ளது.

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக உழைத்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுடன் தனது தோழமையை உறுதிப்படுத்தும் விதமாக, தமிழகத் திருஅவை, அக்டோபர் 18, வருகிற ஞாயிறன்று, தோழமை நாளைக் கடைப்பிடிக்கிறது, அந்நாளில், தமிழக கத்தோலிக்கர் அனைவரும் அருள்பணி சுவாமி அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை, வலியுறுத்தி, அமைதியான முறையில் போராடுமாறு தமிழக ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகம் தவிர, இந்தியாவில் ஏறத்தாழ எல்லா மாநிலங்களிலும், இதே கருத்துக்காக, இந்திய நடுவண் அரசை எதிர்த்து, போராட்டங்களும், கண்டன கூட்டங்களும், அறிக்கைகளும் பொதுவிலும், சமுதாய ஊடகங்களிலும் இடம்பெற்று வருகின்றன. 

அருள்பணி ஸ்தனிஸ்லாஸ் லூர்து சுவாமி ஆகிய அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் பிறந்தவர். இவர், இயேசு சபையில் இணைந்து, ஜார்கண்ட மாநிலத்தில் அடிப்படை உரிமைகளை இழந்துள்ள வறிய மக்கள் மத்தியில் பணியாற்றி வருகின்றார்.

தமிழக ஆயர் பேரவையின் தலைமைக் குழுவின் அறிக்கை

தமிழக இறைமக்கள் அனைவருக்கும் நம் மீட்பர் இயேசுகிறிஸ்துவின் வாழ்த்துக்களும் இறை ஆசீரும் உங்களோடு தங்குவதாக!

தமிழகத்தில் பிறந்து ஜார்கண்ட மாநிலத்தில் ஆதிவாசி தலித் மக்கள் மத்தியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்போடு பணி செய்து வந்த அருட்தந்தை ஸ்டனிஸ்லாஸ் லூர்துசாமி என்ற ஸ்டேன் சுவாமி அவர்களைத் தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த அக்டோபர் 8-ம் தேதி ஜார்கண்ட மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் கைது செய்தது நமக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்வு குறித்து ஊடகங்கள் வாயிலாக இறைமக்களாகிய நீங்கள் அறிய வந்திருக்கிறீர்கள்.

தமிழக ஆயர் பேரவையும், தந்தை ஸ்டேன் சுவாமி அவர்களின் கைதைக் கண்டித்தது 10.10.2020 அன்று அறிக்கையும் வெளியிட்டது. எனினும் இறைமக்கள் அனைவரும் தந்தை ஸ்டேன் சுவாமி கைது குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் இக்கடிதத்தை எழுதுகிறோம்.

தந்தை ஸ்டேன் சுவாமி அவர்கள் திருச்சி மாவட்டத்திலும், கும்பகோணம் மறை மாவட்டத்திலும் உள்ள விரகாலூர் பங்கில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். படிக்கும் போதே துறவி ஆவதற்கு ஆர்வம் கொண்டு இறை அழைத்தலை -- உணர்ந்து இயேசு சபையில் சேர்ந்து துறவியானார். பீகார் - ஜார்கண்ட மாநிலத்தில் ஆதிவாசிகள் தலித் மக்கள் அதிகமாக உள்ளனர். அவர்களுடைய வாழ்வு நிலை மிகவும் பின்தங்கியதாக இருந்தது. ஆள்வோரின் செயல்பாடுகள் ஆதிவாசிகளின் நிலத்தை ஆக்கிரமிப்பவர்களுக்கும் அப்பகுதியில் இருந்த இயற்கை வளங்களைச் சுரண்டுபவர்களுக்கும் துணை போவதால் ஆதிவாசி மக்களின் நில உரிமையை தக்க வைக்கவும் அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு சட்டங்கள் வழங்கும் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு பணி செய்து வந்தார்.

ஆயிரக்கணக்கான ஆதிவாசி - இளைஞர்கள் தம் உரிமைகளுக்காகப் போராடியபோது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய அவர்களால் வழக்கறிஞர் வைத்து கூட வாதாட முடியாத நிலை. இது சம்பந்தமாக ஆராய்ச்சி செய்து அநியாயமாக சிறையில் வாடும் இளைஞர்களை விடுவிக்க ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதனால் கோபம் கொண்ட அரசு இவரைப் பழிவாங்க நேரத்தை தேடிக் கொண்டு இருந்தது.

2018-ல் மகாராஷ்டிராவில் உள்ள பீமா-கோரேகான் என்ற போர் நினைவிடத்தில் 200-வது நினைவு தினத்தைக் கொண்டாட தலித் மக்கள் கூடிய போது அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சாதியினர் கலவரத்தை தூண்டிவிட்டனர். ஆனால் இந்த கலவரத்திற்கு காரணம் ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களுடைய விடுதலைக்கும், முன்னேற்றத்திற்கும் ஆதரவு கொடுக்கிற, பேசுகின்ற, எழுதுகின்ற சிந்தனையாளர்களே காரணம் என்று பழி சுமத்தப்பட்டு 15 மனித உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் ஒரே நாளில் திடீரென்று விசாரணை செய்யப்பட்டனர். இவர்கள் இந்திய பிரதமரை கொல்வதற்குத் திட்டமிட்டுள்ளனர் என்றும், தடை செய்யப்பட்ட அமைப்புகளோடு இவர்களுக்குத் தொடர்புள்ளது என்றும் அபாண்ட பழி சுமத்தப்பட்டது.

இதே காலக்கட்டத்தில் தந்தை ஸ்டேன் சுவாமி அவர்களையும் “சந்தேகப்படும் நபர்” என்ற அடிப்படையில் இரண்டு முறை மகாராஷ்டிரா காவல் துறை விசாரணை செய்தது. அதற்கு அருட்தந்தை அவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதன்பிறகு மகாராஷ்டிரா காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . இதற்கிடையில் - கடந்த ஜனவரி மாதத்தில் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி அல்லாத ஆட்சி அமைந்தது. அந்த அரசு இந்த பீமா-கோரேகான் வழக்கை மறுவிசாரணை செய்ய உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் திடீரென்று இந்த வழக்கை என்.ஐ.ஏ. என்ற தேசிய புலனாய்வு அமைப்பிற்கு மாநில அரசை கலந்தாலோசனை செய்யாமல் மாற்றி உத்தரவிட்டது.

என்.ஐ.ஏ. என்ற தேசிய புலனாய்வு அமைப்பு இந்த கொரோனா காலத்திலும் ஜூலை மாதத்தில் நான்கு முறை, ஆகஸ்டு மாதத்தில் ஒரு முறை என்று ஐந்து முறை சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியது. அதற்கு அருட்தந்தை ஸ்டேன் சுவாமி தனது 83 வயதிலும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர்கள் காட்டிய ஆவணங்களில் உண்மை இல்லை என்றும் ஆணித்தரமாக மறுத்தார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டருக்குள் இவை எல்லாம் புகுத்தப்பட்டுள்ளது என்ற திட்டவட்டமாக கூறினார்.

கடந்த அக்டோபர் 6-ல் ஜார்கண்ட்டில் உள்ள ராஞ்சியில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதற்கு அருட்தந்தை அவர்கள் தனது முதுமையையும், தனக்குள்ள நரம்புதளர்வு நோயையும் காரணம் காட்டியும், கொரோனா காலம் என்பதாலும், நீண்ட தூரப் பயணம் செல்ல இயலாது என்பதாலும், வீடியோ கான்பரன்சிங் மூலமாக விசாரணைக்குத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அக்டோபர் 8-ந் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட அவர் அக்டோபர் 9-ம் தேதி தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மும்பைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தந்தை ஸ்டேன் சுவாமி அவர்கள் தனது சமூகப்பணியால் ஆதிவாசி மக்களுடைய வாழ்வுநிலையை உயர்த்தியுள்ளார். இவரைப் பாராட்ட வேண்டிய அரசு இவரைக் கைது செய்து அவமானப்படுத்தியிருப்பது வேதனைக்குரியது.கிறிஸ்தவம் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில்தான் தன் பணியை முன்னெடுத்து வருகிறது. அரசுக்கு அடுத்த நிலையில் கல்வியிலும், மருத்துவத்திலும், சமூகச் சேவையிலும் நமது பங்கு அளவிடமுடியாதது. இவருடைய கைது பழங்குடியினர், தலித் மக்கள், புலம்பெயர்ந்தோர் மத்தியில் பணி செய்யும் கிறிஸ்தவ மறைப்பணியாளர்களை, ஒரு அரசு இப்படித்தான் நடத்துமோ என்ற அச்சத்தை நம்முள் ஏற்படுத்தியுள்ளது.

நம் பெருமான் இயேசுவின் வழியில் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக துணை நிற்பதே உண்மை கிறிஸ்தவம். இதுவே கிறிஸ்தவ வாழ்வின் மையம். தந்தை ஸ்டேன்சுவாமி  ஆதிவாசிகளுக்காக, தலித் மக்களுக்காக உழைத்ததை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். ஆனால் அவர் மீது பொய் வழக்குகளைப் போட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அக்டோபர் 18 ஞாயிறு, தோழமை ஞாயிறு

எனவே வரும் அக்டோபர் 18 ஞாயிறு, நாளை 'ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக உழைத்த தந்தை ஸ்டான் சாமி அவர்களுக்குத் தமிழக திருஅவை தனது தோழமையை உறுதிப்படுத்தும் நாள்' என்று அனுசரிக்க உங்களை அழைக்கிறது. அன்று நாம் ஒவ்வொரு பங்கிலும் தந்தை ஸ்டேன் சுவாமியினுடைய உடல்நலத்திற்காகவும் விடுதலைக்காகவும் திருப்பலியை ஒப்புக்கொடுக்கவும், திருப்பலி முடிந்தவுடன் ஆலயத்திற்கு முன்பாகக் கூடி தந்தை ஸ்டேன் சுவாமியினுடைய கைதைக் கண்டித்து அவரை உடனே விடுதலை செய்யச் சொல்லி கோரிக்கை வைத்து பங்கு அளவிலான நிகழ்வை நடத்தவும் கேட்டுக் கொள்கிறோம். மேலும் தொடர்ந்து ஸ்டேன் சுவாமி அவர்கள் விடுதலை செய்யப்படும் வரை அவரது விடுதலைக்காக செப, தவங்களில் ஈடுபடவும், மனித நேயமிக்க - மற்ற மக்களோடும், தோழமை அமைப்புகளோடும் இணைந்து அமைதியான வழியில் போராடவும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக ஆயர்பேரவை

தலைவர் - பேராயர் அந்தோணி பாப்புசாமி, மதுரை உயர்மறை மாவட்டம்

துணைத்தலைவர் - ஆயர் நீதிநாதன், செங்கல்பட்டு மறைமாவட்டம்

செயலர் - ஆயர் தாமஸ் பால்சாமி, திண்டுக்கல் மறைமாவட்டம் 

துணைச் செயலர் - அருள்பணி முனைவர் சகாயராஜ் லூர்துசாமி (நன்றி K.M. செல்வராஜ், ஆசிரியர், திருஅவை செய்தி)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2020, 15:04