தேடுதல்

9/11 தாக்குதலுக்குப் பின் மக்களைக் காப்பாற்றும் தீயணைப்புப் படையினர் 9/11 தாக்குதலுக்குப் பின் மக்களைக் காப்பாற்றும் தீயணைப்புப் படையினர்  (2001/Daily News, L.P. (New York))

விவிலியத்தேடல்: பத்து தொழுநோயாளர் நலமடைதல் 3

முதல் பாடம் - தொழுநோயாளர்களுக்கு நாம் தரவேண்டிய மதிப்பு; 2வது பாடம் – துன்ப நேரத்தில் விலகிச்செல்லும் சமுதாய வேறுபாடுகள்; 3வது பாடம் - வாழ்நாளெல்லாம் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய நன்றி உணர்வு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

லூக்கா நற்செய்தி – பத்து தொழுநோயாளர் நலமடைதல் 3

பத்துத் தொழுநோயாளரை இயேசு குணமாக்கும் நிகழ்வைக் கூறும் லூக்கா நற்செய்திப் பகுதி (லூக்கா 17: 11-19), மூன்று பாடங்களை நமக்குச் சொல்லித்தருகின்றது.

முதல் பாடம் - தொழுநோயாளர்களுக்கு நாம் தரவேண்டிய மதிப்பு

2வது பாடம் – துன்ப நேரத்தில் விலகிச்செல்லும் சமுதாய வேறுபாடுகள்

3வது பாடம் - வாழ்நாளெல்லாம் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய நன்றி உணர்வு

இம்மூன்று பாடங்களில், முதல் பாடத்தைக் குறித்த சிந்தனைகளை சென்ற வாரம் மேற்கொண்டோம். நோயுற்றோர், அங்கக்குறையுள்ளவர்கள், ஆகியோரைக் குறிப்பிட, ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நாம் பயன்படுத்திய சொற்களுக்கும், இன்று நாம் பயன்படுத்தும் சொற்களுக்கும், வேறுபாடுகள் உள்ளன என்பதையும், அவர்களைக் குறிப்பிடும் சொற்களில் மாற்றங்கள் ஏற்பட்டதால், அவர்களைப்பற்றிய நம் கண்ணோட்டங்களும் மாறின என்பதையும் சிந்தித்தோம்.

அங்கக்குறைபாடுகள் உள்ளவர்களை, அவர்களது குறைபாடுகளுடன் அடையாளப்படுத்தி அழைத்துவந்தோம். எடுத்துக்காட்டாக, பார்வைத்திறன் குறைந்தோரை, 'குருடர்' என்றும், கால் ஊனமுற்றோரை, 'நொண்டி' என்றும் கூறிவந்த நமது பழக்கத்தை மாற்றி, தற்போது, பொதுவாக, இத்தகைய குறைபாடு கொண்டவர்களை, 'மாற்றுத்திறன் கொண்டோர்' என்று அழைக்கிறோம். இவ்வாறு அழைப்பதன் வழியே, அவர்களை, குறையுள்ளவர்கள் என்று அடையாளப்படுத்தாமல், அவர்கள், மாறுபட்ட திறன்கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்துகிறோம். இந்த சொல் மாற்றங்களால், அவர்களுக்கு உரிய மரியாதை, ஒகு சிறிதாகிலும் வளர்ந்துள்ளது.

தொழுநோய் உள்ளவர்களை, ‘குஷ்டரோகி’ என்றழைப்பதற்குப் பதில், அவர்களை,, ‘தொழுநோயாளர்’ என்று குறிப்பிடுகிறோம். அண்மையக் காலங்களில், ‘தொழுநோயாளர்’ என்ற சொல்லையும், 'ஹான்சன் நோய்' (Hansen's disease) உள்ளவர்கள் என்று மாற்றியமைத்துள்ளோம். குறையுள்ளவர்கள் அனைவருக்கும் நாம் தரவிழையும் மரியாதையை, அண்மைய முயற்சிகள்  காட்டுகின்றன. நோயுற்றோரை, மாற்றுத் திறனாளிகளை, மதிப்புடன் நடத்தவேண்டுமெனில், முதலில், நாம், அவர்களைக் குறிப்பிட பயன்படுத்தும் சொற்களில், நம் மதிப்பைக் காட்டவேண்டும். பத்து தொழுநோயாளர் குணமாகும் புதுமை, நமக்குச் சொல்லித்தரும் முதல் பாடம் இது.

இப்புதுமையின் ஆரம்ப வரிகளில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய 2வது பாடம் தரப்பட்டுள்ளது. இதோ இப்புதுமையின் ஆரம்ப வரிகள்:

லூக்கா நற்செய்தி, 17:11-19

இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே,  “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.

கலிலேயா, சமாரியா என்ற இரு பகுதிகளையும் கடந்து, இயேசு, எருசலேம் நோக்கி நடந்துகொண்டிருந்தார். யூதர், சமாரியர் என்ற பாகுபாடுகளை வலியுறுத்தி வாழ்ந்துவந்த தன் மக்களை ஒன்று சேர்க்கமாட்டோமா என்ற ஏக்கம் நிறைந்த சிந்தனைகளுடன் இயேசு அவ்வழியே சென்றிருக்கவேண்டும். அந்நேரம், பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிராக வந்தனர். அவர்கள் யூதரா? சமாரியரா? தெரியவில்லை. அவர்கள் அனைவரும்  தொழுநோயாளர்கள். தொழுநோய் என்ற ஒரே காரணத்தால், யூத சமுதாயமும், சமாரிய சமுதாயமும் அவர்களைப் புறக்கணித்தன. அந்த புறக்கணிப்பு, அவர்களை இணைத்தது. இதுவே ஒரு புதுமைதானே!

நோய், துன்பம், பேரழிவு என்று வரும்போது, மனிதர்களாகிய நாம், பலவழிகளில் இணைந்துவிடுகிறோம். 1977ம் ஆண்டு, பெருவெள்ளம் ஒன்று திருச்சியைச் சூழ்ந்தது. திருச்சி தூய வளனார் கல்லூரி பெருமளவு பாதிக்கப்பட்டது. ஆனால், கல்லூரியைச் சுற்றியிருந்த வீடுகள் இன்னும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டப் பகுதிகளில், சேரிகளும் உண்டு, உயர் குடியினர் என்று தங்களையே அடையாளப்படுத்துவோர் வாழ்ந்த பகுதிகளும் உண்டு. பாதிக்கப்பட்டவர்களில், நூற்றுக்கணக்கானோர், கல்லூரிக்கட்டடத்தின் மாடிகளில் தஞ்சம் புகுந்தனர்.

அவர்களிடையே நிலவிய சாதி, மதம், இனம், ஏழை, செல்வர் என்ற பாகுபாடுகள் எல்லாம் அழிக்கப்பட்டன. 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர்' என்ற ஒரே அடையாளத்தைத் தாங்கிய அவர்கள் எல்லாரும், கல்லூரிக் கட்டடத்தில் தங்கினர். அரசு சார்பில் அளிக்கப்பட்ட உணவுப் பொட்டலங்களை, எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டனர். அவர்கள் வீட்டுச்சுவர்கள் வெள்ளத்தில் இடிந்தபோது, காலம் காலமாய் அவர்கள் கட்டிவைத்த பிரிவுச்சுவர்களும் இடிந்தன. ஆனால், வெள்ளம் வடிந்து, அவர்கள், மீண்டும், அவரவர் வீட்டுச் சுவர்களை எழுப்பியபோது, இந்த பிரிவுச்சுவர்களும் கட்டப்பட்டுவிட்டன என்பது, வேதனையான உண்மை.

2001ம் ஆண்டு, சனவரி 26, இந்தியக் குடியரசு நாளன்று, குஜராத் மாநிலத்தில், புஜ் என்ற ஊரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இடிபாடுகளில் சிக்கியவர்களைக் காப்பதற்கும், காயமுற்றவர்களுக்கு இரத்த தானம் செய்வதற்கும், இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து வந்தனர். இந்துக்கள் உடலில், முஸ்லிம்கள் இரத்தமும், முஸ்லிம்கள் உடலில், இந்துக்கள் இரத்தமும் ஓடியது. ஆனால், அதே குஜராத்தில், அடுத்த ஆண்டு, 2002, பிப்ரவரியில், அரசியல்வாதிகளாலும், அடிப்படைவாதிகளாலும் தூண்டிவிடப்பட்ட மதக் கலவரங்களில், இவ்விரு மதத்தவரும், ஒருவர் மற்றவரின் இரத்தத்தை, வீதிகளில் ஓடவிட்டனர்.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, நியூயார்க் நகரில், உலக வர்த்தக மையத்தின் இரு பெரும் கோபுரங்கள், விமானங்கள் கொண்டு தாக்கப்பட்டதால் இடிந்து விழுந்தன. அந்த அழிவு, வெள்ளை-கறுப்பு இனத்தவரிடையே நிலவிய வேறுபாடுகளை அழித்து, அனைவரையும் சமமாக்கியது. அந்த அழிவால் உருவான சமத்துவத்தைப்பற்றி, 'One', அதாவது, 'ஒன்றாக' என்ற தலைப்பில், Cheryl Sawyer என்ற பேராசிரியர் எழுதியிருந்த ஒரு கவிதையின் சில வரிகள் இதோ:

கரும்புகையும், புழுதியும், சாம்பலும் மழைபோல் இறங்கிவந்தபோது,

நாம் ஒரே நிறத்தவரானோம்.

எரியும் கட்டடத்தின் படிகளில் ஒருவர் ஒருவரைச் சுமந்து இறங்கியபோது,

நாம் ஒரே இனத்தவரானோம்.

சக்தி வேண்டி, முழந்தாள்படியிட்டபோது,

நாம் ஒரே மதத்தவரானோம்.

இரத்ததானம் வழங்க வரிசையில் நின்றபோது,

நாம் ஒரே உடலானோம்.

இந்தப் பெரும் அழிவை எண்ணி, கூடிவந்து அழுதபோது,

நாம் ஒரே குடும்பமானோம்.

ஒரு கொடூரமான நிகழ்வு, சூழ இருந்த மக்கள் அனைவரையும் ஒரே நிறமாக்கியது. வெள்ளையர், கறுப்பர் என்ற நிற வேறுபாடுகள் இல்லாமல் போயின. பல நூறு ஆண்டுகள், அமெரிக்க மக்கள் காணவிழையும், சமத்துவம் என்ற கனவு, அந்த அழிவு நேரத்தில், ஒரளவு நனவானது.

நியூயார்க் நகரில், உலக வர்த்தக கோபுரங்கள் இடிந்து விழுந்தபோது, மக்கள் கட்டிவைத்திருந்த பிரிவுச்சுவர்கள் இடிந்து விழுந்தன என்பதும், அந்த வேதனை, அவர்களை ஒருங்கிணைத்தது என்பதும், புதிரான உண்மைகள். அந்தக் கொடூரத்தின் தாக்கங்கள் குறையக் குறைய, காணாமற்போன பிரிவுச்சுவர்களை மீண்டும் கட்டியெழுப்பி, அவர்கள், தங்களையே, மீண்டும் சிறைப்படுத்திக்கொண்டனர். மதவெறி, நிறவெறி, சாதியவெறி, என்ற சுவர்கள் உயர, உயர, மனிதத்தன்மை காணாமற்போகிறது என்பது, கசப்பான உண்மை.

தீவிரவாதிகளின் வெறியால் உருவான இக்கொடுமை, நமக்குப் பாடங்களைச் சொல்லித்தந்ததுபோல், COVID-19 என்ற தொற்றுக்கிருமியின் கொடுமை, நமக்கு தற்போது, பாடங்களைச் சொல்லித்தந்தவண்ணம் உள்ளது. மதம், இனம், நாடு என்ற அனைத்து பிரிவுகளையும், எல்லைகளையும் தாண்டி, மனிதர்களாகப் பிறந்த நாம் அனைவருமே, சக்தியற்றவற்றவர்கள்தான் என்ற அடிப்படையானப் பாடத்தை நமக்குச் சொல்லித்தருவதற்கு, COVID-19 என்ற ஆசிரியர், நம் நடுவே உலவி வருகிறார்.

மனித வரலாற்றில் தொற்றுக்கிருமிகளின் தாக்கம் பலமுறை ஏற்பட்டுள்ளது. அவற்றிலிருந்து மீள்வதற்குரிய வழிகளையும் மக்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், மனிதர்கள், தாங்களாகவே உருவாக்கிக்கொண்ட சமுதாயத் தொற்றுக்கிருமியின் தாக்கத்திலிருந்து மீள வழியின்றி, பல்லாயிரம் ஆண்டுகளாக துன்புற்று வருகின்றனர். இந்தத் தொற்றுக்கிருமியின் பெயர் - பாகுபாடுகள். மதம், மொழி, இனம், பணம், பாலினம் என்ற பல நிலைகளிலும் ஏற்றத்தாழ்வுகள் என்ற நோயைப் புகுத்தும் ‘பாகுபாடுகள்’ என்ற தொற்றுக்கிருமியை அழிக்க மனமின்றி, இந்நோயை, போற்றி வளர்த்துவருகிறோம். ஒரு சில வேளைகளில், இயற்கை அழிவுகள் வழியாகவோ, அல்லது, ஒரு சில மனிதர்களின் கட்டுக்கடங்கா வெறியினால் உருவாகும் துன்பங்கள் வழியாகவோ, இந்நோயிலிருந்து குணமாகும் வழிகள் நமக்கு வந்தவண்ணம் உள்ளன. கோவிட் 19 கொள்ளைநோய்க்கு பின்வரும் காலங்களில், நாம், பழைய, பிளவுபட்ட சமுதாயத்தையே மீண்டும் கட்டியெழுப்பப் போகிறோமா என்பதை ஆய்வு செய்வது நல்லது.

சமுதாய வேறுபாடுகள், துன்ப நேரத்தில் விலகிச்செல்லும் என்பது, தொழுநோயாளர் குணமடைந்த புதுமையின் ஆரம்ப வரிகள் நமக்குச் சொல்லித்தரும் 2வது பாடம். தொழுநோய் என்ற துன்பத்தால் யூதர், சமாரியர் என்ற பிரிவுகளையெல்லாம் மறந்து இணைந்திருந்த அந்த பத்து தொழுநோயாளர்கள், "தூரத்தில் நின்று கொண்டே,  “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வரிகளைப்பற்றி தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ள Alexander MacLaren என்ற விவிலிய மறையுரையாளர், தொழுநோயாளர்கள் குரல் எழுப்பி வேண்டியதைக் குறித்து தன் சிந்தனைகளை இவ்வாறு பதிவு செய்துள்ளார்: "மோசேயின் சட்டம் விதித்திருந்த சமுதாய தூரத்தை தொழுநோயாளர்கள் கடைபிடித்தனர். எனவே, அவர்கள் குரல் எழுப்பி தங்கள் குறையைக் கூறவேண்டியிருந்தது. பொதுவாக, குரலை இழப்பது, தொழுநோயின் ஒரு விளைவாக இருந்தது. இருப்பினும், ஒரு தேவை என்றதும், அவர்கள், தங்கள் குறையைத் தாண்டி குரல் எழுப்ப முடிந்தது" என்று கூறியுள்ளார்.

பத்து தொழுநோயாளர்களும் ஒன்றாக வந்து, குரல் எழுப்பி விடுத்த வேண்டுகோளுக்கு, இயேசு அளித்த பதிலையும், அந்த பதிலில் அடங்கியுள்ள இறையியல் உண்மைகளையும் நாம் அடுத்த தேடலில் சிந்திப்போம்.

20 October 2020, 14:36