தேடுதல்

இறையன்பு, பிறரன்பு என்ற இரு பெரும் கட்டளைகள் - மத்தேயு 22:36-40 இறையன்பு, பிறரன்பு என்ற இரு பெரும் கட்டளைகள் - மத்தேயு 22:36-40 

பொதுக்காலம் 30ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

“‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து’. ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’"

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 30ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

ஆசிரியர் ஒருவர் தன்னிடம் பயிலும் மாணவனைப்பற்றி அவனது தந்தையிடம் முறையிட்டார்: "ஐயா! ஒங்க பையன் வகுப்புல சரியாவே பதில்சொல்ல மாட்டேங்கறான். இன்னக்கி அவன்கிட்ட 'கம்பராமாயணத்தை எழுதுனது யார்'ன்னு கேட்டேன். அதுக்கு உங்க மகன், 'திருவள்ளுவர்'ன்னு சொல்றான்" என்று ஆசிரியர் குறை கூறவே, தந்தை அவரிடம், "சார், கோவிச்சுக்கக்கூடாது. நீங்க 'திருக்குறள எழுதுனது யார்'ன்னு கேட்டிருந்தா, என் பையன் 'திருவள்ளுவர்'ன்னு சரியா பதில் சொல்லியிருப்பான். நீங்க கேள்வியைத் தப்பா கேட்டுட்டீங்க" என்று சொன்னார். சிரிக்க மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைக்கும் துணுக்கு இது. தப்பானக் கேள்விகள் கேட்கமுடியுமா என்று சிந்திக்க வைக்கும் இத்துணுக்கு, இன்றைய ஞாயிறு சிந்தனையைத் துவக்கி வைக்கின்றது.

கேள்விகள் கேட்பது அறிவை வளர்க்க நாம் பயன்படுத்தும் சிறந்த கருவி. இயற்பியலில் சிறந்து விளங்கிய இஸிடோர் இஸாக் ராபி (Isidor Isaac Rabi) அவர்கள், நொபெல் விருது பெற்றபோது வழங்கிய ஒரு பேட்டியில், தான் அறிவியலில் ஆர்வம் கொண்டதற்கு, தன் தாயே முக்கியக் காரணம் என்று சொன்னார். ஒவ்வொரு நாளும் இஸிடோர் பள்ளியிலிருந்து திரும்பி வந்ததும், அவருடைய தாய் அவரிடம் அன்று பள்ளியில் அவர் என்ன படித்தார், எப்படி நடந்து கொண்டார் என்றெல்லாம் கேட்காமல், “இன்று நீ பள்ளியில் நல்லதொரு கேள்வியைக் கேட்டாயா?” என்று மட்டும் கேட்பாராம். நல்ல கேள்வியைக் கேட்பதற்கு தன் தாய் ஒவ்வொரு நாளும் தன்னை ஊக்கப்படுத்தியதே, தன்னை, அறிவியலில் ஆர்வம் கொள்ளவைத்தது என்று இஸிடோர் அவர்கள் சொன்னார்.

நமக்குத் தெரியாததைத் தெரிந்துகொள்ள கேட்கப்படும் கேள்விகள், அறிவியலாளர் இஸிடோரைப்போல், நம் அறிவை வளர்க்கும். இதற்கு மாறாக, பதில்களைத் தெரிந்துவைத்துக்கொண்டு, அடுத்தவருக்கு நம்மைவிட குறைவாகத் தெரிகிறது என்பதை இடித்துக் காட்டுவதற்காக கேள்விகள் கேட்கும்போது, நம் கேள்வி-பதில் பரிமாற்றம், அறிவை வளர்ப்பதற்குப் பதில், ஆணவத்தை வளர்க்கும் வாய்ப்பாக மாறும்.

ஆணவம் கொண்ட பரிசேயர், சதுசேயர் மற்றும் ஏரோதியர், இயேசுவை, ஏதாவது ஒரு வழியில், சிக்கவைப்பதற்கு மேற்கொண்ட கேள்வி-பதில் முயற்சிகள், சென்ற ஞாயிறன்றும், இந்த ஞாயிறன்றும் வழங்கப்பட்டுள்ளன.

"சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?" (மத்தேயு 22:17) என்ற கேள்வி, சென்ற ஞாயிறு நற்செய்தியில் இயேசுவிடம் தொடுக்கப்பட்டது. "திருச்சட்ட நூலில் தலை சிறந்த கட்டளை எது?" (மத்தேயு 22:34) என்ற கேள்வி, இந்த ஞாயிறு நற்செய்தியில் இயேசுவிடம் தொடுக்கப்படுகிறது. இன்றைய நற்செய்தியில், திருச்சட்ட அறிஞர் ஒருவர், இயேசுவைச் சோதிக்கும் நோக்கத்துடன், “போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்று கேட்டார். (மத்தேயு 22:36) என்ற அறிமுக சொற்கள், நம் சிந்தனைகளைத் தூண்டுகின்றன.

திருச்சட்ட அறிஞர், இயேசுவை, 'போதகரே' என்றழைத்ததில், ஏளனம், ஏராளமாய் ஒலித்தது. திருச்சட்டங்களையோ, திருமறைநூல்களையோ படிக்காத, தச்சுத்தொழிலாளியான இயேசுவை, 'போதகரே' என்றழைத்ததன் வழியே, அவர் ஒரு 'போலிப்போதகர்' என்று, திருச்சட்ட அறிஞர்,  குத்திக்காட்ட விழைகிறார். அதைத் தொடர்ந்து அவர், 'தலைசிறந்த கட்டளை எது?' என்று கேட்டது, உண்மையிலேயே, இயேசுவை வீழ்த்த அவர் பதித்துவைத்த நிலத்தடி கண்ணிவெடி என்றே சொல்லவேண்டும்.

யூதப் பாரம்பரியத்தில், 613 கட்டளைகள் உண்டு. அவற்றில், 'நீங்கள் செய்யவேண்டியது' என்பதைக் கூறும், கட்டளைகள், 248 ஆகவும், 'நீங்கள் செய்யக்கூடாதது' என்பதைக் கூறும் கட்டளைகள், 365 ஆகவும் இருந்தன. இந்த 613 கட்டளைகளில், ஓய்வுநாள், கோவிலில் அளிக்கப்படும் பலிகள், காணிக்கைகள், விருத்தசேதனம் ஆகியவை குறித்து சொல்லப்பட்டுள்ள கட்டளைகள், மதத்தலைவர்களுக்கு, மிக, மிக முக்கியமானவை. இவற்றில், தலைசிறந்தது எது என்பதை இயேசு கூறுவார்; அதைக் கொண்டு, அவரைச் சிக்கவைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், திருச்சட்ட அறிஞர் இந்தக் கேள்வியைத் தொடுத்திருக்கவேண்டும். ஆனால், இயேசு அவருக்கு வழங்கிய மறுமொழியோ, காலத்தால் அழியாத ஒரு கவிதை.

தவறான, குதர்க்கமான எண்ணங்களுடன் திருச்சட்ட அறிஞர் கேள்வி கேட்டாலும், அக்கேள்வி, மிக அழகான, ஆழமான கேள்வி என்பதை இயேசு உணர்ந்து, அதற்கு பதில் தருகிறார். மனிதவாழ்வின் அடித்தளமாய், கிறிஸ்தவ மறையின் உயிர்த்துடிப்பாய், இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாக, நம் அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ள ஒரு பதிலை இயேசு தருகிறார்.

மத்தேயு நற்செய்தி 22: 37-40

திருச்சட்ட அறிஞருக்கு மறுமொழியாக, இயேசு, “‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து’. இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று கூறினார்.

இயேசு கூறிய இந்த பதிலில், இணைச்சட்டம், லேவியர், என்ற இரு நூல்களில் சொல்லப்பட்ட கருத்துக்கள், ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இணைச்சட்ட நூலில், கூறப்பட்டுள்ள பகுதியில்,   "உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!" (இணைச்சட்டம் 6:5) என்ற கட்டளையோடு, அக்கட்டளையை இஸ்ரயேல் மக்கள் எவ்வாறு கடைபிடிக்கவேண்டும் என்ற வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. இச்சொற்கள், இஸ்ரயேல் மக்களின் மனங்களில் பதியவேண்டும்; அவர்கள் பிள்ளைகளின் உள்ளங்களில் பதியவேண்டும்; அவர்கள் வீட்டில் இருக்கும்போது, பயணம் செய்யும்போது, படுக்கும்போது, எழும்போது இக்கட்டளையைப்பற்றி பேசவேண்டும்; இஸ்ரயேல் மக்களின், கைகளிலும், கண்களுக்கிடையிலும் இச்சொற்கள் கட்டப்படவேண்டும்; வீட்டின் கதவு நிலைகளிலும், நுழை வாயில்களிலும் இந்தச் சட்டம் எழுதப்படவேண்டும் (இணைச்சட்டம் 6: 6-9) என்ற தெளிவான வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன.

இவ்வளவு முக்கியமான இந்தக் கட்டளை பெற்றிருந்த முதன்மையான இடத்தை, பரிசேயரும், திருச்சட்ட அறிஞர்களும் படிப்படியாகக் குறைத்து, அதற்குப்பதிலாக, ஒய்வுநாள், பலிகள், விருத்தசேதனம் குறித்த கட்டளைகளை மக்கள் மனதில் பீடமேற்றி வந்தனர். அவர்கள் பீடமேற்றியிருந்த அந்த பொய் தெய்வங்களை இறக்கிவைத்துவிட்டு, இறைவன் தந்த தலைசிறந்த கட்டளையை, இயேசு, அந்த திருச்சட்ட அறிஞர் மனதிலும், சூழ இருந்த மக்கள் மனதிலும் பீடமேற்றி வைத்தார்.

இறைவனை அன்புகூரவேண்டும் என்று கூறிய அதே மூச்சில், இயேசு, பிறரன்பு என்ற கட்டளையையும் இணைத்தார். "உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!" (லேவியர் 19:18) என்ற அந்தக் கட்டளையும், இறைவன் வழங்கிய கட்டளையே என்பதை, இயேசு, சூழ இருந்த அனைவருக்கும் நினைவுறுத்தினார்.

அனைத்து மதங்களும், இறையன்பையும், பிறரன்பையும் வலியுறுத்துகின்றன. இவை இரண்டும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் என்றும் நாம் அடிக்கடி சொல்கிறோம். இயேசு கூறிய இந்த பதில் மொழியில், இறையன்பிற்கும், பிறரன்பிற்கும் இயேசு வழங்கும் அளவுகோல்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இறைவன் மீது காட்டப்படும் அன்புக்கு, இயேசு கூறும் அளவுகோல், முழுமை. முழுமையான இதயம், உள்ளம், மனம் ஆகியவற்றால் இறைவன் மீது அன்புகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார். "உன் மீது நீ அன்பு கூர்வதுபோல..." என்ற சொற்றொடர், அயலவர் மீது காட்டப்படும் அன்புக்கு, அளவுகோல். தன் மீது அன்புகொள்ள இயலாத ஒருவரால், அடுத்தவர் மீதும் அன்புகாட்ட முடியாது என்பது, இயேசு நமக்கு சொல்லாமல் சொல்லித்தரும் பாடம்.

இந்நிகழ்வு, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவாகியுள்ளது. இந்த மூன்று நற்செய்திகளும், ஒரே நிகழ்வை வெவ்வேறு வகையில் கூறியுள்ளன. இந்த வேறுபாடுகளைச் சிந்திப்பது நமக்குப் பயனளிக்கும். குறிப்பாக, மாறுபட்ட கருத்து கொண்டவர்கள், எவ்வாறு, நேர்மையான விவாதங்கள் வழியே உண்மையைக் கண்டுகொள்ளமுடியும் என்பதையும், மாறுபட்ட கண்ணோட்டம் கொண்டவர்களும், எவ்விதம், ஒருவரையொருவர் மதிப்புடன் நடத்தமுடியும் என்பதையும், இந்த நற்செய்திப் பதிவுகள் நமக்குச் சொல்லித்தருகின்றன.

மத்தேயு நற்செய்தியில், இயேசு கூறிய இந்த பதிலோடு, இந்நிகழ்வு நிறைவடைகிறது. மாற்கு நற்செய்தியில், இயேசு கூறிய பதிலால் மகிழ்வடைந்த மறைநூல் அறிஞர், இயேசுவைப் புகழ்கிறார். இயேசுவும் அந்த அறிஞரின் அறிவுத்திறனைக் கண்டு, "நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை" (மாற்கு 12:34) என்று அவரைப் புகழ்வதாக இந்நிகழ்வு நிறைவடைகிறது.

இயேசுவும், மறைநூல் அறிஞரும் எதிர் அணிகளைச் சார்ந்தவர்கள் என்றாலும், ஒருவரையொருவர் புகழ்வது, நமக்கு நல்லதொரு பாடத்தைச் சொல்லித்தருகிறது. ஒருவர் தன்னைப்பற்றி உண்மையான மதிப்பு கொண்டிருந்தால், அடுத்தவரை, அவர், தன் எதிரியே ஆனாலும், அவரையும் மதிக்கும் பண்பு கொண்டிருப்பார் என்பது, மாற்கு நற்செய்தியில் (மாற்கு 12: 28-34) கூறப்பட்டுள்ள இந்நிகழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பாடம்.

லூக்கா நற்செய்தியில் (லூக்கா 10:25-37) மாறுபட்ட ஒரு சூழலை நாம் காண்கிறோம். திருச்சட்ட அறிஞரின் குதர்க்கமான கேள்விகள் தொடர்வதை நாம் காண்கிறோம். தனது திறமையை, இயேசுவிடமும், சூழ இருந்தவர்களிடமும் காட்டும் நோக்கத்துடன், "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்ற மற்றொரு குதர்க்கமான கேள்வியைத் தொடுக்கிறார் திருச்சட்ட அறிஞர். அந்தக் கேள்விக்கு இயேசு கூறிய  பதில், காலத்தால் அழியாத புகழ்பெற்ற 'நல்ல சமாரியர்' உவமையாகத் தரப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற இவ்வுவமையின் துவக்கத்திலும், முடிவிலும், இயேசு, அந்த அறிஞரிடம் கூறிய ஓர் அறிவுரை, நமக்கு ஒரு வாழ்வுப்பாடமாக அமைகிறது. நல்ல சமாரியர் உவமைக்கு முன்னர், “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றும், உவமைக்குப் பின், “நீரும் போய் அப்படியே செய்யும்” (லூக்கா 10: 37) என்றும் இயேசு சொல்கிறார்.

திருச்சட்டங்களின் அடிப்படை நியதிகளைப்பற்றி கேள்விகள் கேட்டு, அறிவுப்பூர்வமான பதில்களை அறிந்துகொள்வது முக்கியமல்ல; அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் இறையன்பு, பிறரன்பு, ஆகியவற்றிற்கு, செயல்வடிவம் தருவதே முக்கியம் என்பதை, இயேசுவின் இந்தக் கூற்று தெளிவுபடுத்துகிறது.

இயேசுவுக்கும், மதத் தலைவர்களுக்கும் நிகழ்ந்த பல்வேறு மோதல்கள், இறுதியில் அவரைச் சிலுவை மரணத்திற்கு அழைத்துச்சென்றது. இயேசுவின் வழியை, அவரது அரசின் விழுமியங்களை நடைமுறைப்படுத்துவதற்காக உழைத்த உன்னத உள்ளங்கள், அதிகார வெறியாட்டத்திற்குப் பலியானதை, வரலாறு நமக்குச் சொல்கிறது. இந்த வரலாற்றில், அண்மையில் இணைக்கப்பட்டுள்ளவர், அருள்பணி ஸ்டான் சுவாமி.

இந்தியாவில், மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் அரசியல் தலைவர்கள், தங்கள் சர்வாதிகாரத்தைக் குறித்து கேள்வி எழுப்புவோரை எவ்விதம் நடத்துகின்றனர் என்பதை, அண்மைய நாள்களில் கண்டுவருகிறோம். வயதில்  முதிர்ந்து, உடல்நலத்தில் மிகவும் தளர்ந்திருக்கும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு, இந்திய அரசு வழங்கியிருக்கும் சிறை தண்டனை, உலகெங்கும் கண்டனங்களை வெளிக்கொணர்ந்துள்ளது. இந்நிகழ்வு, உண்மையைச் சந்திக்க பயந்து, அதிகாரத்தின் பின்னே ஒளிந்துகொள்ளும் அரசியல் தலைவர்களை வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ளது. உடல்நலக் குறைவை காரணம் காட்டி, அருள்பணி ஸ்டான் அவர்கள் விடுத்திருந்த பிணையல் மனுவை, NIA நீதிமன்றம், அக்டோபர் 23, இவ்வெள்ளியன்று நிராகரித்து, அவரை மீண்டும் சிறைக்கு அனுப்பிவிட்டது.

தன்னை அன்புகூர்வதுபோல், அடுத்தவர் மீதும் அன்புகூர்ந்து, பழங்குடியினரின் நல்வாழ்வுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழும் அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இறைவன் அருளால், நல்ல உடல்நலத்துடன் இந்த அநீதியிலிருந்து விடுதலைப்பெற்று, தன் அறப்பணியைத் தொடர, அவருக்காக தொடர்ந்து மன்றாடுவோம்.

24 October 2020, 13:46