தேடுதல்

செபமாலை செபிக்கும் கரங்கள் செபமாலை செபிக்கும் கரங்கள் 

அக்டோபர் 25ம் தேதி, 10 இலட்சம் பேருடன் இணைந்து செபமாலை

கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வீடுகளை செபக்கூடங்களாக மாற்றி, உலகின் நலனுக்காக நாம் செபமாலை செபிக்கும் நேரம், அன்பின் தருணமாக இருக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

செபமாலையின் மாதமாகிய இந்த அக்டோபர் மாதத்தில், 25ம் தேதி ஞாயிறன்று, இணையம் வழியாக 10 இலட்சம் பேருடன் இணைந்து செபமாலை செபித்து அன்னை மரியாவுக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார், மெக்சிகோவின் திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான Eduardo Verastegui.

உலகின் நலனுக்காக நாம் செபிக்கும் செபமாலை என்பது, அன்பின் தருணமாக இருக்கும் என உரைத்த Verastegui அவர்கள், கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வீடுகளை செபக்கூடங்களாக மாற்றி, அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டி செபிப்போம் என அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

16 ஆண்டுகளுக்கு மேலாக செபமாலையை செபித்துவரும் திரைப்படத் தயாரிப்பாளர் Verastegui அவர்கள், இவ்வாண்டு மார்ச் மாதம் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து, இணையம் வழியாக அவருடன் இணைந்து, இதுவரை 10 கோடி செபமாலைகள் செபிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செபமாலை வழியாக அன்னைமரியாவுடன் இடம்பெறும் இந்த சந்திப்பில், ஒவ்வொரு நாளும் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை தங்களுடன் இணையம் வழியாக கலந்து கொள்வதாகவும் அறிவித்துள்ளார் Verastegui.

தற்செயலாக தன் வலைத்தள பக்கத்திற்கு வந்த மக்கள் சிலரும், செபமாலை செபிப்பதை இடையில் விட்டுவிட்ட சிலரும்கூட, தற்போது இணையம் வழியாக தன் குழுவுடன் சேர்ந்து செபிப்பதாகவும் கூறிய மெக்சிகோ நடிகர் Verastegui அவர்கள், இம்மாதம் 25ம் தேதி ஞாயிறன்று, 10 இலட்சம் பேருடன் இணைந்து இணையம் வழியாக செபமாலையை செபிக்க உள்ளதாகத் தெரிவித்தார். (ZENIT)

20 October 2020, 14:49