தேடுதல்

மலாவியில் செபமாலை செபிக்கும் சிறார் மலாவியில் செபமாலை செபிக்கும் சிறார்  

136 நாடுகளில் வாழும் குழந்தைகளின் செபமாலை முயற்சி

போலந்து, மெக்சிகோ ஆகிய நாடுகளின் குழந்தைகள், மிக அதிக அளவிலும், அதற்கடுத்த நிலையில், சுலோவாக்கியா, இந்தியா மற்றும் பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளும் செபமாலை செபித்தனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 18,19 ஆகிய இருநாள்கள் குழந்தைகளுடன் இணைந்து அனைவரும் செபமாலை செபிக்கும்படி  விடுத்திருந்த அழைப்பை ஏற்று, 136 நாடுகளில் வாழும் குழந்தைகளும், பெரியோரும் இந்த செபமாலை முயற்சியில் இணைந்தனர் என்று, இந்த முயற்சியை ஒருங்கிணைத்த கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு கூறியுள்ளது.

கோவிட்-19 கொள்ளைநோயிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்றும், உலகில் அமைதி நிலவவேண்டும் என்றும், உலகெங்கும் உள்ள 10 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இணைந்து செபமாலை செபிக்கும் முயற்சியை, "தேவையில் உள்ள திருஅவைகளுக்கு உதவி" (Aid to the Church in Need) என்ற பெயரில் இயங்கிவரும் பாப்பிறை பிறரன்பு அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

உலகெங்கிலுமிருந்து இவ்வமைப்பினருக்கு வந்து சேர்ந்த தகவல்களின்படி, போலந்து, மெக்சிகோ ஆகிய நாடுகளில் மிக அதிக அளவில் குழந்தைகள் இந்த முயற்சியில் இணைந்தனர் என்றும், அதற்கடுத்த நிலையில், சுலோவாக்கியா, இந்தியா மற்றும் பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் ஈடுபட்டடிருந்தனர் என்றும் தெரிய வந்துள்ளது.

போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா அன்னை மரியா திருத்தலத்தில் குழந்தைகள் மேற்கொண்ட செபமாலை முயற்சி, பல்வேறு நாடுகளுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டதென்றும், அக்குழந்தைகளுடன், பல்லாயிரம் பேர் இணையத்தின் வழியே இணைந்தனர் என்றும் Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

நைஜீரியா நாட்டில் போக்கோ ஹராம் (Boko Haram) அடிப்படைவாதக் குழுவால் உருவாகிவரும் வன்முறைகள் முடிவுக்கு வருவதற்கென்று அந்நாட்டு குழந்தைகள் செபித்தனர்.

அதேவண்ணம், பெலாருஸ், ஈராக், ஆர்மேனியா ஆகிய நாடுகளில் வாழும் குழந்தைகள், தங்கள் நாடுகளிலும், உலகெங்கும் அமைதி உருவாக செபமாலை செபித்தனர் என்று Zenit செய்தி கூறுகிறது.

2005ம் ஆண்டு, வெனிசுவேலா நாட்டின் Caracas நகரில், குழந்தைகள் இணைந்து மேற்கொண்ட செபமாலை முயற்சியைக் கண்டு, அவ்வழியே சென்ற பல பெண்கள் இணைந்தனர் என்று சொல்லப்படுகிறது.

"பத்து இலட்சம் குழந்தைகள் இணைந்து செபமாலை செபித்தால், இவ்வுலகம் மாறும்" என்று  புனித பாத்ரே பியோ அவர்கள் கூறிய சொற்களை நினைவுகூர்ந்த பல பெரியோர், தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இந்த முயற்சியில் இணைந்தனர் என்று, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீட அவை கூறியுள்ளது. (Zenit)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2020, 14:12