தேடுதல்

சித்ரவதைகளின் காலத்தில் கிறிஸ்தவர்கள் இரகசியமாக புதைக்கப்பட்ட இடங்கள் சித்ரவதைகளின் காலத்தில் கிறிஸ்தவர்கள் இரகசியமாக புதைக்கப்பட்ட இடங்கள் 

திருத்தந்தையர் வரலாறு - தூய ஆவியார் வழிநடத்துகிறார்

திருஅவைக்கு எதிரான சித்ரவதைகளின்போது திருஅவையை விட்டு விலகிச் சென்று, பின்னர், தங்கள் பாவத்திற்காக மனம் வருந்தி திரும்பியவர்களை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

ஒரு திருத்தந்தை இறந்ததைக் கேள்விப்பட்டு, நாம் அனைவரும், அவர் உடலைக் கண்டு மரியாதை செலுத்தச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். அப்போது அங்கு, அடுத்த திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பும் நடக்கிறது. நாமும் ஓரமாக நின்று அதனைப்பார்க்கிறோம். திருஅவை விதிகளின்படி, எந்த கத்தோலிக்கரும் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்படலாம். திடீரென்று ஓர் அதிசயம் நடக்கிறது. நீங்கள் திருத்தந்தையாக அனைவராலும் தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். எப்படி இருக்கும் உங்களுக்கு! அக்காலத்தில், தமிழகத்தில், வாரிசில்லா மன்னர் ஒருவர் இறந்தவுடன், பட்டத்து யானையின் துதிக்கையில் பூமாலையைக் கொடுத்து, புது மன்னரைத் தேர்ந்தெடுக்கும் பழக்கம் இருந்ததை நாம் அறிவோம்.

திருத்தந்தை Anteros அவர்கள் இறந்தபின்னர், அவர் உடலைக் காணவும் அடுத்த திருத்தந்தையாக யார் வரப்போகிறார் என்பதை அறியவும் ஆவல்கொண்டு உரோம்நகர் வந்தார், பண்ணைத்தொழில் புரிந்துவந்த Fabian என்பவர். இவர் அருள்பணியாளராக இருக்கவில்லை. ஒரு சாதாரண பொதுநிலையினர். புதிய திருத்தந்தைக்குரிய தேர்தலுக்கு, பல அறிவாளிகளின்  பெயர்கள் முன் வைக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது, திடீரென, புறா ஒன்று Fabian அவர்களின் தலைமீது வந்து அமர்ந்தது. உடனே, அங்கு கூடியிருந்த அனைவரும், ஒரே குரலில், “இவரே திருத்தந்தை” என அறிவித்தனர். புறா வந்தமர்ந்தது முக்கியமில்லை என, சிலர் கூறினாலும், அனைவரும் ஒரே குரலில், அறிமுகமில்லாத ஒருவரை திருத்தந்தையாக அறிவித்ததே இங்கு அதிசயம். இரண்டுமே, தூய ஆவியாரின் செயலாக நோக்கப்பட்டன.

பொதுநிலையினரான Fabian அவர்கள், திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில காலத்திலேயே, திருஅவைக்கு எதிரான சித்ரவதைகள் நின்றன. அமைதியின் காலம் பிறந்தது. பேரரசர் பிலிப், கிறிஸ்தவர்களோடு நட்பு பாராட்டி, அவர்களை ஏற்றுக்கொண்டார். இக்காலத்தில், கிறிஸ்தவர்கள், துன்பங்களற்ற எளிதான வாழ்வை மேற்கொண்டனர். அதனால், கிறிஸ்தவமறையில், உயிர்விடும் தியாக வாழ்வு காணாமற்போனது. திருத்தந்தை Fabian அவர்கள், உரோம் நகரை ஏழு மாவட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொன்றிற்கும் ஒரு தியாக்கோனை நியமித்தார். Sardeniaவில் மறைசாட்சியாக உயிரிழந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்ட புனித Pontianus அவர்களின் கல்லறையைத் தோண்டி அவரது உடலை, உரோம் நகருக்குக் கொண்டுவந்து அடக்கம் செய்ய வழிவகுத்தார், திருத்தந்தை Fabian. இவரது தலைமைப்பணி காலத்தில், பேரரசர் பிலிப் இறந்துவிடவே, அதற்குப்பின் அரியணை ஏறிய பேரரசர் Gaius Messius Quintus Decius அவர்கள், கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்தத் துவங்கினார். பிற கடவுளுக்கு தூபம் காட்டுமாறு கிறிஸ்தவர்களைக் கட்டாயப்படுத்தினார். அமைதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், மறைசாட்சிகளாக உயிர்விடத் தயங்கினர். ஆனால், திருத்தந்தை Fabian அவர்கள், கிறிஸ்தவத்தை மறுதலிக்க மறுத்ததுடன், மறைசாட்சியாய், 250ம் ஆண்டு உயிரிழந்தார்.

புனித Fabian அவர்களுக்குப்பின், அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதில் காலதாமதமாகியது. ஏனெனில், பேரரசர் Deciusன் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போக்கு தீவிரமாக .இருந்ததால் (249-251), திருத்தந்தைக்கான தேர்தல் இடம்பெற 14 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதன்பின் புனித Cornelius அவர்கள், திருத்தந்தையானார். திருஅவைக்கு எதிரான சித்ரவதைகளின்போது, திருஅவையை விட்டு விலகிச்சென்று, பின்னர், தங்கள் பாவத்திற்காக மனம் வருந்தி, திருஅவையில் இணைய விரும்பியவர்களை, இவர் ஏற்றுக்கொண்டார். மனந்திருந்தியவர்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்பதை, இவர் வலியுறுத்தினார். ஆனால், இதனை வலிமையாக மறுத்தார், Novatian என்பவர். இவரும் ஓர் அருள்பணியாளராக இருந்தார். சித்ரவதைகளுக்குப் பயந்து திருஅவையை விட்டு ஓடியவர்களை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்ற Novatianன் வாதம் ஏற்றுக்கொள்ளப்படாததால் கோபமுற்ற இவர், தன்னைத்தானே திருத்தந்தை என அறிவித்தார். ஆனால் பெரும்பாலான ஆயர்களின் ஆதரவு, திருத்தந்தை Cornelius அவர்களுக்கு இருந்ததால் Novatianன் தர்க்கவாதங்கள் எடுபடவில்லை. திருத்தந்தை Cornelius அவர்கள்,  2 ஆண்டுகள், 3 மாதங்கள், 10 நாட்களே, தலைமைப்பணியில் இருந்தார். மீண்டும் துவங்கிய கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகளால், திருத்தந்தை Cornelius அவர்கள்,  Civita Vecchia  எனும் துறைமுக நகருக்கு அரசரால் விரட்டப்பட்டு, துன்பங்களால் உயிரிழந்தார். இவர் தலைவெட்டுண்டு உயிரிழந்தார் என்று கூறுபவர்களும் உள்ளனர்.

புனித Cornelius அவர்கள், உரோமிலிருந்து விரட்டப்பட்டு உயிரிழக்க, அடுத்து, புனித Lucius அவர்கள் திருத்தந்தையானார். இவர் திருத்தந்தையாவதற்கு முன்னர் அதிகம் அறியப்படாத ஒரு நபராக இருந்தார். இவரும் திருத்தந்தையாக பதவியேற்ற சில காலத்திலேயே, உரோமிலிருந்த அரசரால் விரட்டப்பட்டார். ஆனால் Valerian என்பவர் பேரரசரானபோது, Lucius அவர்கள் உரோம் நகருக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டார். இவர் இயற்கை மரணம் எய்தினார் என்றே வரலாறு கூறுகிறது.

07 October 2020, 15:39