தேடுதல்

உரோம் நகர் அடிநில கல்லறைகளுள் ஒன்று உரோம் நகர் அடிநில கல்லறைகளுள் ஒன்று 

திருத்தந்தையர் வரலாறு - வசந்த கால துவக்கம்

கிறிஸ்தவர்கள் மீதான சித்ரவதைகள் நிறுத்தப்பட்டன. அவர்களின் வழிபாட்டுத்தலங்கள் கட்டப்படவும் அனுமதியளிக்கப்பட்டது. உரோம் நகரில் அரசரால் பறிமுதல் செய்யப்பட்ட இடங்கள் திருப்பி அளிக்கப்பட வகை செய்யப்பட்டது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

சித்ரவதைகளையேத் தொடர்ந்து அனுபவித்து வந்த ஒரு திருஅவையில், அதனை விட்டுவிட்டு ஓடிய விசுவாசிகளை, மீண்டும் திருஅவையில் இணைத்துக்கொள்வது குறித்த கேள்வி, திருத்தந்தை Marcellus காலத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. 309 அல்லது 310ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை Eusebius அவர்கள், நான்கு மாதங்கள் மட்டுமே தலைமைப் பொறுப்பில் இருந்தார். சித்ரவதை காலத்தில், திருஅவையை விட்டு விலகி ஓடி, பின்னர் சேர விரும்பிய கிறிஸ்தவர்கள் ஒரே குழுவாக Heraclius என்பவரின் கீழ் கூடி தங்களைக் கட்டாயமாக திருஅவைக்குள் திணிக்க முயன்றனர். இரு தரப்பிலும் மோதல்கள் ஏற்பட்டதால், பேரரசர் Maxentius, திருத்தந்தை Eusebius அவர்களையும் Heraclius அவர்களையும் நாடுகடத்தினார். திருத்தந்தை Eusebius அவர்கள், தான் நாடு கடத்தப்பட்ட சிசிலி தீவில் உயிரிழந்தார். இவருக்குப்பின் பதவிக்கு வந்த திருத்தந்தை Miltiades அவர்கள், திருத்தந்தை Eusebius அவர்களின் உடலை, உரோம் நகருக்கு கொண்டுவரவைத்து,  Calistus கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தார்.

திருத்தந்தை Miltiades அவர்கள், ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 3 ஆண்டுகள் 6 மாதங்கள் எட்டு நாட்கள் பாப்பிறை பதவி வகித்தார் என ஏடுகள் கூறுகின்றன. இவர் காலத்தில்தான்,  அதாவது, 311ம் ஆண்டு, பேரரசர்கள் Galerius, Licinius, Constantine ஆகியோரிடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டு, கிறிஸ்தவர்கள் மீதான சித்ரவதைகள் நிறுத்தப்பட்டன. அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் கட்டப்படவும் அனுமதியளிக்கப்பட்டது. உரோம் நகரில் அரசரால் பறிமுதல் செய்யப்பட்ட இடங்கள் திருப்பி அளிக்கப்பட வகை செய்யப்பட்டது. பேரரசர் Maxentius அவர்கள் வீழ்த்தப்பட்டு, பேரரசர் Constantine அவர்கள் உரோம் நகருக்குள் நுழைந்தபோது, திருஅவையின் வசந்தகாலம் பிறந்தது. ஏனெனில், பேரரசர் Constantine அவர்களே, கிறிஸ்தவ மறையைத் தழுவியிருந்தார். கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பீடமாக பல ஆண்டுகள்   செயல்பட்ட இலாத்தரன் மாளிகையை திருஅவைக்கு வழங்கினார் பேரரசர் Constantine. 314ம் ஆண்டு, திருத்தந்தை Miltiades அவர்கள் உயிரிழக்க, அவரது உடலும் Callistus கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அடுத்து வந்தவர்  திருத்தந்தை  முதலாம் Sylvester. இவர், அன்றைய வரலாற்றில், மிக நீண்டகாலம், அதாவது 21 ஆண்டுகள், திருத்தந்தையாக பதவி வகித்தவர். இவர் காலத்தில், பேரரசர் Constantine அவர்கள் ஆட்சியில் இருந்ததால், திருஅவையின் வாழ்வில், பல வளர்ச்சித்திட்டங்கள் இடம்பெற்றன. இந்த திருத்தந்தையின் காலத்தில்தான் பலகோவில்கள், குறிப்பாக, இலாத்தரன் பெருங்கோவில், திருச்சலுவை பேராலயம், வத்திக்கான் புனித பேதுரு  பெருங்கோவில்  போன்றவை, பேரரசர் Constantine அவர்களின் உதவியுடன் கட்டப்பட்டன. இதுதவிர, மறைசாட்சியரின் கல்லறைகள் மீது, மேலும் பல கோவில்கள் கட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

திருத்தந்தை புனித Sylvester அவர்களின் காலத்தில் திருவழிபாட்டு கொண்டாட்ட வழிமுறைகள், மறைசாட்சிகளின் பெயர் தொகுப்பு, திருவழிபாட்டு பாடல்களைக் கற்றுத்தரும் பயிற்சி பள்ளி போன்றவை கொணரப்பட்டன. பல விதங்களிலும் இவர் காலத்தை, மறுமலர்ச்சியின், முன்னேற்றத்தின் காலம் எனக் கூறலாம்.

புனித சில்வெஸ்டர் அவர்களுக்குப்பின் தலைமைப் பதவிக்கு வந்தவர், திருத்தந்தை  மாற்கு. இவர் 336ம் ஆண்டு, ஜனவரி 18ம் நாள் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. இவர்தான் உரோம் நகரின் புறநகர் பகுதியான Ostia  என்ற கடற்கரை நகரின் ஆயருக்கு பாலியம் வழங்கி, அவரே, புதிய திருத்தந்தையை திருநிலைப்படுத்தும் தகுதியுடையவர் என அறிவித்தார். 4ம் நூற்றாண்டில் Ostia நகர் ஆயரே, பதிய திருத்தந்தையர்களை திருநிலைப்படுத்தினார் என்பது, வரலாற்றிலேயே காணப்படும் ஒன்று. புனித மாற்கு பேராலயத்தையும், நகருக்கு வெளியேயுள்ள, Balbina மறைசாட்சிகள் கல்லறை மீதான கோவிலையும் இத்திருத்தந்தைதான் கட்டினார். இந்த கல்லறைக் கோவிலில்தான், பின்னர், திருத்தந்தை புனித மாற்கு அவர்களும் அடக்கம் செய்யப்பட்டார்.

அமைதி காலத்தில் வாழ்ந்த திருஅவையின் செயல்பாடுகளை வரும் வாரம் காண்போம்.

28 October 2020, 15:24