தேடுதல்

உரோமில் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் சித்ரவதைகளை அனுபவித்த இடம் - கொலோசியம் உரோமில் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் சித்ரவதைகளை அனுபவித்த இடம் - கொலோசியம்  (AFP or licensors)

திருத்தந்தையர் வரலாறு – இருபக்க வேதனைகள்

தூரத்திருஅவைகளை நம்பிக்கையில் ஊக்கமூட்டி, அவற்றுக்கு கடிதங்கள் எழுதுவது, துன்புறும் திருஅவைகளுக்கு நிதி உதவி அனுப்புவது என்று, திருத்தந்தை தியோனிசியுஸ் (Dionysius) அவர்கள், பல வழிகளில் ஆர்வமுடன் செயல்பட்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

கல்லறைத் தோட்டத்தில் திருவழிபாடு நடத்திக்கொன்டிருந்த ஒரு திருத்தந்தையை அக்கல்லறையில் வைத்தே கொலைசெய்த நிகழ்வோடு கடந்த வார திருத்தந்தையர்  வரலாற்றை நிறைவுக்கு கொணர்ந்தோம். அத்திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸின் மறைசாட்சிய மரணத்திற்குப்பின் பதவிக்கு வந்தார் திருத்தந்தை புனித தியோனிசியுஸ் (Dionysius). இவர் திருத்தந்தை ஸ்தேவானின் காலத்திலேயே அறிஞராக, அருள்பணியாளராக அறியப்பட்டிருந்தார் என்பதை வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. திருத்தந்தை 2ம் Sixtusன் பணிக் காலத்திலும், அவர் மரணத்திற்குப் பின்னரும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகள் தொடர்ந்ததால், தியோனிசியுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. 258ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம்தேதி திருத்தந்தை இரண்டாம் Sixtus கொலைசெய்யப்பட, 259ம் ஆண்டு ஜூலை 22ல்தான் பதவியேற்றார் திருத்தந்தை தியோனிசியுஸ். இயேசு, மற்றும், மூவொரு கடவுள் குறித்த தவறான படிப்பினைகள் பரவி வந்ததால், 260ம் ஆண்டு ஆயர் மாநாட்டை உரோம் நகரில் கூட்டி அது குறித்து விவாதித்தார் இத்திருத்தந்தை. தூரத் திருஅவைகளுக்கு விசுவாச ஊக்கமூட்டி கடிதங்கள் எழுதுவது, துன்புறும் திருஅவைகளுக்கு நிதி உதவி அனுப்புவது என பல வழிகளில் ஆர்வமுடன் செயல்பட்டார் திருத்தந்தை தியோனிசியுஸ்.

திருத்தந்தை தியோனிசியுஸ் அவர்களின் மறைவுக்குப்பின், கி.பி. 269ம் ஆண்டு பதவிக்கு வந்தார் திருத்தந்தை முதலாம் Felix. ஏற்கனவே திருத்தந்தை தியோனிசியுஸ் அவர்களின் காலத்திலேயே பேரரசர் Gallienus, கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகளை நிறுத்தி, கோவில் உடைமைகளையும், கல்லறைகளையும் திருப்பிக் கொடுக்க ஆரம்பித்ததால் அமைதியான ஒரு சூழலிலேயே திருத்தந்தை  முதலாம் Felixன் பணிக்காலம் தொடர்ந்தது. அமைதியான இக்காலத்தில் இவருக்குப்பின், 275ல் திருத்தந்தை புனித Eutychianusம், 283ல் திருத்தந்தை Caiusம் பதவிக்கு வந்தனர். திருத்தந்தை Caius, 12 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திச் சென்றார். அதற்குப்பின், 296ம் ஆண்டு பதவிக்கு வந்தார், திருத்தந்தை புனித Marcellinus.

இந்த திருத்தந்தையின் காலத்தில், அதாவது அவரின் பணிக்கால முடிவுக்கு ஓராண்டிற்கு முன்னர் கிறிஸ்தவர்களுக்கு எதிரான Diocletianன் சித்ரவதைகள் துவங்கின. 303ல் கிறிஸ்தவர்களுக்கு எதிரான சித்ரவதைகள் தொடங்கப்பட்டாலும், இதனால் திருத்தந்தை Marcellinus பாதிக்கப்படவில்லை. இவர் 304ம் ஆண்டு இயற்கையான முறையிலே மரணம் அடைந்தார். ஆனால் இவருக்குப் பிடிக்காதவர்கள் இவரைப் பற்றிய பல பொய்க் கதைகளை எழுதிவைத்து பரப்பி வந்தனர். பேரரசர் Diocletianனின் கட்டளையின் பேரில் இவர் புறவினக் கடவுளுக்கு பலி கொடுத்ததாகவும், சிலைகளுக்குத் தூபம் காட்டியதாகவும், புனித நூல்களை எரிக்க கொடுத்ததாகவும் பொய்க் குற்றம் சாட்டி அவரை களங்கப்படுத்த முயன்றனர். ஆனால், உண்மையில் இத்திருத்தந்தை நம்பிக்கைக்கு எதிரான எச்செயலிலும் ஈடுபடவில்லை. மாறாக, சித்ரவதைகளுக்குப் பயந்து ஒளிந்துகொண்டார் என்று, சில ஏடுகள் தெரிவிக்கின்றன. இவர் காலத்தில்  கிறிஸ்தவர்களின் Calistus கல்லறைத்தோட்டம் அரசரால் பறிமுதல் செய்யப்பட்டது. ஆகவே இன்னொரு கல்லறைத் தோட்டமான Priscillaவில் கிறிஸ்தவ நடவடிக்கைகள் தொடர்ந்தன.     

திருத்தந்தை Marcellinusக்குப்பின் 308ம் ஆண்டு பதவிக்கு வந்தவர் திருத்தந்தை புனித Marcellus. கிறிஸ்தவர்கள் மீதான சித்ரவதைகள் தொடர்ந்து இடம்பெற்றதால் இடையில் நான்கு ஆண்டுகள் திருத்தந்தை இல்லாமல் இருந்த ஒரு நிலை ஏற்ப்பட்டது. 304ல் திருத்தந்தை Marcellinus இறந்தார். 305ல் பேரரசர் Diocletian பதவியிழந்தார். பின்னர் வந்த மன்னர் Maxentius, கிறிஸ்தவர்கள் மீதான சித்ரவதைகளை தடுத்தி நிறுத்தினார். இருப்பினும் அவர் ஆட்சியேற்ற இரண்டாண்டுகளுக்குப் பின்னர்தான் திருத்தந்தை  Marcellus பதவியேற்க முடிந்தது. இவர் திருத்தந்தையாக பதவிக்கு வந்தபோது உரோமைத் திருஅவையில் ஒரே குழப்பநிலைதான் நிலவியது. திருஅவையின் பல இடங்கள் அரசரின் கையில் இருந்தன. விசுவாசத்தை மறுதலித்த பல கிறிஸ்தவர்கள் தங்கள் விருப்பம்போல் பல்வேறு கொள்கைகளைக்கொண்டு குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் இவர்களை சீர்படுத்த விரும்பிய இத்திருத்தந்தை, திருஅவைப் பகுதிகளை 25 மாவட்டங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு திருஅவை நிர்வாகியை நியமித்தார். இவர்களே திருமுழுக்குக்கு வயது வந்தோரைத் தயாரிக்கும் பொறுப்புடையவர்களாக இருந்தனர். இவர்களுக்கே இறந்தோரின் அடக்கச் சடங்கை நிறைவேற்றும் பொறுப்பும் வழங்கப்படடது.

அதேவேளை, திருஅவையை விட்டு விலகிச் சென்றவர்களை மீண்டும் எப்படி இணைப்பது என்பது குறித்த கேள்வியும் பூதாகரமாக உருவெடுத்தது. திருமறையை மறுதலித்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் இணையவேண்டுமானால் அவர்கள் பாவப்பரிகாரம் செய்து கழுவாய் தேடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் திருத்தந்தை Marcellus. ஆனால் திருமறையை மறுத்து விலகிச்சென்றவர்கள் இதனை வலுவாக எதிர்த்தனர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் எழுந்து இரத்தம் சிந்தல்களும் இடம் பெற்றன. திருமறைக்கு எதிராக பலகாலம் மறைந்திருந்து செயல்பட்ட மன்னர் Maxentius இதனை சாதகமாகப் பயன்படுத்தி, திருத்தந்தையை சிறைப்பிடித்து உரோமிலிருந்து வெளியேற்றினார். ஓராண்டு 6 மாதம் 20 நாட்களே பாப்பிறையாக இருந்த திருத்தந்தை  புனித முதலாம் Marcellus,  தான் வெளியேற்றப்பட்ட சில காலத்திலேயே மரணமடைந்தார். அப்போதிருந்தே அவர் புனிதராக போற்றப்பட்டு வருகிறார்.

திருஅவை துவங்கிய 300 ஆண்டுகளிலேயே அது மன்னர்களிடமிருந்து மட்டுமல்ல, தன் சொந்த மக்களிடமிருந்தே உண்மைக்காகவும் நீதிக்காகவும் பல்வேறு துயர்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. இன்னும் நாம் பார்க்க வேண்டிய 1700 ஆண்டு வரலாறு காத்திருக்கிறது. வரும் வாரம் தொடர்வோம்.

21 October 2020, 14:22