தேடுதல்

எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை,  பேராயர் Pierbattista Pizzaballa. எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, பேராயர் Pierbattista Pizzaballa.  (AFP or licensors)

எருசலேமின் அனைத்து மக்களும் ஒரே குடும்ப உணர்வுடன்

நற்செய்தி அறிவிப்புப் பணிகளுக்கு புதிய ஊக்கமூட்டவேண்டும். யூதர்கள், மற்றும், இஸ்லாமியரிடையே கிறிஸ்தவர்கள் சான்றுபகரும் வாழ்வை வாழ வேண்டும் - முதுபெரும்தந்தை, பேராயர் Pierbattista Pizzaballa.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகின் ஏனைய நாடுகளைப் போலவே, கோவிட்  கொள்ளைநோயாலும், அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலைகளாலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் புனித பூமியில், மிகக் கவனமுடன் செயல்படவேண்டிய நேரம் வந்துள்ளது என்றார் எருசலேமின் புதிய இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை,  பேராயர் Pierbattista Pizzaballa.

எருசலேமின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக செயல்பட்டு வந்த பேராயர் Pizzaballa அவர்களை, கடந்த வார இறுதியில், எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தையாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்ததைத் தொடர்ந்து, ஆசிய செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பேராயர், எருசலேமின் அனைத்து மக்களும் ஒரே குடும்ப உணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம்  என்று கூறினார்.

எருசலேம் திருஅவைப் பணிகளில் பல்வேறு பிரச்சனைகள் இன்னும் தீர்வு காணப்படாமல் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றபோதிலும், யூதர்கள் மற்றும் இஸ்லாமியரிடையே சிறந்த சான்றுகளாக செயல்படுவதற்குரிய வாய்ப்புகள் கிறிஸ்தவர்களுக்கு இருந்துகொண்டேயிருக்கின்றன என மேலும் கூறினார், புதிய முதுபெரும்தந்தை.

நற்செய்தி அறிவிப்புப் பணிகளுக்கு புதிய ஊக்கமூட்டவேண்டும் என்பதில் நம்பிக்கைக் கொண்டுள்ள முதுபெரும்தந்தை Pizzaballa அவர்கள், யூதர்கள், மற்றும், இஸ்லாமியரிடையே கிறிஸ்தவர்கள் சான்றுபகரும் வாழ்வை வாழ வேண்டியதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தையின் கீழ், இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டன், சைப்ரஸ் ஆகிய நாடுகளில் 71 பங்குத்தளங்கள் செயலாற்றி வருகின்றன. (AsiaNews)

27 October 2020, 15:15