தேடுதல்

பதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்ஸ் பேராயர் Jose Advincula  பதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்ஸ் பேராயர் Jose Advincula  

புதிய கர்தினால்கள் - பொறுப்புணர்வு அதிகரித்துள்ளது

திருஅவைக்கும், திருப்பீடத்திற்கும் இன்னும் கூடுதலாக அர்ப்பணித்து பணியாற்ற இந்த அறிவிப்பு வலியுறுத்துகின்றது - பதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள, பேராயர் Silvano Tomasi

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில்,அக்டோபர் 25, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த 13 புதிய கர்தினால்கள், தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்த எண்ணங்களை, வத்திக்கான் செய்தித் துறையிடம் பதிவுசெய்துள்ளனர்.

பிலிப்பீன்ஸ் நாட்டின் Capiz பேராயர் Jose Advincula அவர்கள் கூறுகையில், தான் மறைப்பணியாற்றும் Panay தீவில், ஹோசே என்ற பெயரில் குறைந்தது மூன்று ஆயர்கள் பணியாற்றுவதால், தனது பெயர் தவறாகத் தெரிவுசெய்யப்பட்டதாக, முதலில் தான் நினைத்ததாகத் தெரிவித்தார்.

தனது பெயரை திருத்தந்தை அறிவித்தபோது, மகிழ்ச்சியைவிட, கடமையுணர்வு அதிகம் இருப்பதை உணர்ந்ததாகவும், புதிய கர்தினால் பேராயர் Advincula அவர்கள் கூறினார்.

புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள, வாஷிங்டன் பேராயர் Wilton Gregory அவர்கள் கூறுகையில், தான் மிகுந்த தாழ்ச்சி நிறைந்த இதயத்துடன், திருத்தந்தைக்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு, கிறிஸ்துவின் திருஅவையைப் பராமரிப்பதில், திருத்தந்தையுடன் தான் நெருங்கிப் பணியாற்ற உதவியுள்ளது என்றும், ஆப்ரிக்க அமெரிக்க இனத்தவரான, வாஷிங்டன் பேராயர் கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்தோருக்கு பணியாற்றுவதற்கென ஆரம்பிக்கப்பட்ட, Scalabrini சபையைச் சார்ந்த பேராயர் Silvano Tomasi அவர்கள் கூறுகையில், இந்த அறிவிப்பு தனக்கு மட்டுமல்ல, தான் சார்ந்துள்ள சபைக்கும் மதிப்பளிப்பதாய் உள்ளது என்றும், இது திருப்பீடத்தின் சார்பில் தான் ஆற்றிய தூதரகப் பணிகளை அங்கீகரிப்பதாய் உள்ளது என்றும் கூறினார்.

திருஅவைக்கும், திருப்பீடத்திற்கும் இன்னும் கூடுதலாக அர்ப்பணித்து பணியாற்ற இந்த அறிவிப்பு வலியுறுத்துகின்றது என்றும், பதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள, பேராயர் Silvano Tomasi அவர்கள் கூறியுள்ளார்.

புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டுள்ள 13 பேரும், வருகிற நவம்பர் மாதம் 28ம் தேதி இடம்பெறும் திருவழிபாட்டு நிகழ்வில், திருத்தந்தையால் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்படுவர். இவர்களுள், 9 பேர், புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்டவர்கள்.

27 October 2020, 15:30