தேடுதல்

போர் இடம்பெறும் Nagorno-Karabakh பகுதி போர் இடம்பெறும் Nagorno-Karabakh பகுதி  

Caucasus பகுதியில் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

அஜர்பைஜான் மற்றும், Nagorno-Karabakh எல்லைப்பகுதியில் இடம்பெறும் வன்முறை மற்றும், ஆயுதத்தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்கு, உலகத்தலைவர்கள் ஆவன செய்யுமாறு, எருசலேம் கிறிஸ்தவத்தலைவர்கள் அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அஜர்பைஜான் மற்றும், Nagorno-Karabakh எல்லைப்பகுதியில் இடம்பெறும் வன்முறை  மற்றும், ஆயுதத்தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்கு, உலகத்தலைவர்கள் ஆவன செய்யுமாறு, எருசலேம் முதுபெரும்தந்தையரும், திருஅவைத்தலைவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஐரோப்பியத்தலைவர்களும், இரஷ்ய மற்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர்களும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமை பொதுச்செயலரும் இந்த பிரச்சனையில் தலையிட்டு, இதற்கு ஓர் அமைதியான தீர்வைக் கொணருமாறு, எருசலேம் கிறிஸ்தவத்தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எருசலேம் கிறிஸ்தவத்தலைவர்கள், அப்பகுதியில் இடம்பெறும் போர் உடனடியாக நிறுத்தப்பட்டு, நீடித்த அமைதி நிலவ, கலந்துரையாடலை ஊக்குவிக்குமாறு, உலகத்தலைவர்களிடம் விண்ணப்பித்துள்ளனர்.

அந்த Caucasus பகுதியில் அமைதி நிலவ, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்கனவே விடுத்திருந்த அழைப்பையும் சுட்டிக்காட்டியுள்ள அத்தலைவர்கள், இந்தப் பிரச்சனை முடிவுக்கு வருவதற்கு, உலகத்தலைவர்கள் ஒரே குரலாய் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வது இன்றியமையாதது என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையே, அக்டோபர் 5, இத்திங்களன்று ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும், Nagorno-Karabakh எல்லைப்பகுதியில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறை நிறுத்தப்படவும், உலகளாவிய சட்டம் கடைப்பிடிக்கப்படவும் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

06 October 2020, 14:23