தேடுதல்

மலேசியாவில் பள்ளிக்குச் செல்லும் மாணவியர் மலேசியாவில் பள்ளிக்குச் செல்லும் மாணவியர் 

மலேசியாவில் மனித முன்னேற்றத்திற்கு கத்தோலிக்க பள்ளிகள்

மலேசியத் திருஅவை நடத்துகின்ற பள்ளிகள், கிராமப் பகுதிகளில் அடிப்படை கல்வியை வழங்குவதன் வழியாக, அந்நாட்டு முன்னேற்றத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக உள்ளது – பேராயர் Hoon Seng

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மலேசியாவில், நற்செய்தி அறிவிப்பு, மனித முன்னேற்றம் மற்றும், தனிப்பட்ட மனிதரின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு, கத்தோலிக்கப் பள்ளிகள், உண்மையான மற்றும், சிறந்த கருவிகளாக உள்ளன என்று, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அக்டோபர் மாதம், மறைப்பரப்புப்பணி மாதமாகச் சிறப்பிக்கப்படுவது பற்றி, பீதேஸ் செய்திக்குப் பேட்டியளித்த, மலேசியாவின் Kuching உயர்மறைமாவட்ட பேராயர் Simon Peter Poh Hoon Seng அவர்கள், திருஅவை நடத்துகின்ற பள்ளிகள், கிராமப்பகுதிகளில் அடிப்படைக்கல்வியை வழங்குவதன் வழியாக, அந்நாட்டு முன்னேற்றத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக உள்ளன என்று கூறினார்.

அக்டோபர் மாதம், மறைபரப்புப்பணிக்குப் பாரம்பரியமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பேராயர் Hoon Seng அவர்கள், மலேசியாவில் நற்செய்தி அறிவிப்புப்பணிக்கும், நற்செய்தியின் விழுமியங்களைப் பரப்புவதற்கும், கல்வி மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து, இம்மாதத்தில், கல்வித்துறையில், தலத்திருஅவை தன் பணியை தீவிரப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

மலேசிய Borneo மாநிலமாகிய Sarawakவில், அனைவருக்கும் கல்வி வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், அம்மாநிலத்தின் கிராமப்பகுதிகளில் பள்ளிகள் அவசியம் என்றும், பல்சமய அவை, உதவி பிரதமர் Datuk Amar Douglas Uggah ஆகியோருடன், தான் கலந்துரையாடல் மேற்கொண்டதாகவும் பேராயர் Hoon Seng அவர்கள் கூறினார்.

Sarawak மாநிலத்தில், தற்போது 113 ஆரம்பப் பள்ளிகள், 14 உயர்நிலைப் பள்ளிகள் உட்பட, 127 பள்ளிகளை தலத்திருஅவை நடத்துகின்றது.

பல்வேறு இன, கலாச்சார மற்றும், மதங்களைக் கொண்ட மலேசியாவின் ஏறத்தாழ 3 கோடியே 27 இலட்சம் மக்கள் தொகையில், அறுபது விழுக்காட்டினர் முஸ்லிம்கள். (Fides)

17 October 2020, 15:13