தேடுதல்

அக்டோபர் மாதத்தில், இந்தோனேசியாவில், 'மறைபரப்புப் பணிக்காக செபமாலை' பக்திமுயற்சி அக்டோபர் மாதத்தில், இந்தோனேசியாவில், 'மறைபரப்புப் பணிக்காக செபமாலை' பக்திமுயற்சி 

இந்தோனேசியாவில் 'மறைபரப்புப்பணி செபமாலை' பக்திமுயற்சி

ஒவ்வொரு நாளும், இந்தோனேசிய ஆயர்கள், செபமாலையைக் குறித்த கருத்துக்களை வழங்கி, மக்கள், தங்கள் குடும்பங்களிலும், சிறு குழுக்களிலும், இந்த பக்தி முயற்சியில் ஈடுபட வழிகாட்டி வருகின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தோனேசியாவில் உள்ள 37 மறைமாவட்டங்களும் இணைந்து, அக்டோபர் மாதத்தில், 'மறைபரப்புப் பணிக்காக செபமாலை' என்ற பக்திமுயற்சியை மேற்கொண்டுள்ளது என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

ஒவ்வொரு நாளும், வெவ்வேறு மறைமாவட்டங்களின் ஆயர்கள், செபமாலையைக் குறித்த கருத்துக்களை வழங்கி, மக்கள், தங்கள் குடும்பங்களிலும், சிறு குழுக்களிலும், இந்த பக்திமுயற்சியில் ஈடுபட வழிகாட்டி வருகின்றனர்.

அக்டோபர் 1, கடந்த வியாழனன்று துவங்கிய 'மறைபரப்புப் பணிக்காக செபமாலை' என்ற பக்திமுயற்சியை, மேற்கு ஜாவாவில் உள்ள பண்டுங் ஆயர், அன்டன் சுபியான்டோ அவர்கள் துவக்கிவைத்தார் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

இந்த ஒரு மாத பக்திமுயற்சியின் இறுதி நாளான, அக்டோபர் 31ம் தேதியன்று, ஜகார்த்தா பேராயர், கர்தினால் இக்னேசியஸ் சுகார்யோ அவர்கள் இதனை நிறைவு செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"இதோ உமது அடியேன், என்னை அனுப்பும்" என்ற பொருளுடன் இவ்வாண்டு சிறப்பிக்கப்படவிருக்கும் மறைபரப்புப்பணி ஞாயிறு, இந்த செபமாலை பக்தி முயற்சிக்கு வித்திட்டது என்று இந்த முயற்சியை ஒருங்கிணைக்கும் அருள்பணி Markus Nur Widipranoto அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

இதற்கிடையே, அக்டோபர் 7, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட புனித செபமாலை அன்னை மரியாவின் திருநாளையொட்டி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் அனைத்து கத்தோலிக்கரும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் செபமாலை பக்திமுயற்சியில் ஈடுபடுமாறு, அந்நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் ஹோஸே கோமஸ் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

பல்வேறு வழிகளில் நிலையற்ற, சக்தியற்ற உணர்வுகளில் வாழும் அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களை, அன்னை மரியாவின் அரவணைப்பில் ஒப்படைக்க, அந்நாட்டின் கிழக்குக் கடற்கரையில் பிற்பகல் 3 மணிக்கு, இந்த பக்தி முயற்சி மேற்கொள்ளப்படுவதற்கு ஆயர்கள் அழைப்பு விடுத்தனர்.

07 October 2020, 16:04