தேடுதல்

இயேசு சபை அருள்பணி Stan Swamy அவர்களுக்கு ஆதரவாக, உரோம் இயேசு சபை தலைமையகம் முன்பு இயேசு சபை அருள்பணி Stan Swamy அவர்களுக்கு ஆதரவாக, உரோம் இயேசு சபை தலைமையகம் முன்பு 

இயேசு சபை அருள்பணி Stan Swamy அவர்களுடன் ஒருமைப்பாடு

ஆதாரமின்றி கைது செய்யப்பட்டுள்ளோரின் விடுதலைக்காக போராடிய இயேசு சபை அருள்பணியாளர், ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்பட்டுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் கைதுசெய்யப்பட்டு, சிறைவைக்கப்பட்டுள்ள இயேசு சபை அருள்பணி Stan Swamy அவர்களின் விடுதலைக்கென, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் குரல் எழுப்பப்பட்டு வருகின்றது.

அருள்பணி Stan Swamy அவர்களுடன் ஒருமைப்பாட்டை வெளியிடும் விதமாக, தேசிய அளவில் இடம்பெறும் கூட்டங்களின் ஒருபகுதியாக, டெல்லியின் ஜந்தர் மந்தரில் இடம்பெற்ற ஒரு மணி நேர கூட்டத்தில்,  மனித உரிமை நடவடிக்கையாயாளர்கள் Shabanam Hashmi, Harsh Mander, Apoorvanand Jha ஆகியோருடன் டெல்லி பேராயர் Anil Couto அவர்களும் கலந்துகொண்டார்.

ஏழ்மையில் வாழும் பூர்வீகக் குடிமக்களின் நில உரிமைகளுக்காக போராடி வந்த இயேசு சபை அருள்பணி Swamy அவர்கள், இம்மாதம் 8ம் தேதி, NIA எனப்படும் தேசிய பயங்கரவாத தடுப்பு புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு, Taloja சிறையில் வைக்கப்பட்டுள்ளது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தெற்கு ஆசிய இயேசு சபை சமூகத்தொடர்பு மையம், பூர்வீக இன மக்களின் உரிமைகளுக்காக அவர் போராடியதையும், பூர்வீக இன இளையோர் காரணமின்றி கைது செய்யப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்ததையும், கைது செய்யப்பட்ட இளையோர் விடுவிக்கப்பட வழக்கு தொடர்ந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதாரமின்றி கைது செய்யப்பட்டு, மாவோயிஸ்ட் என அரசால் முத்திரைக் குத்தப்பட்ட பழங்குடி இன இளையோரின் விடுதலைக்காக போராடிய இயேசு சபை அருள்பணியாளர் Swamy அவர்கள், அதே குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளார் என்கிறது இயேசு சபையினரின் அறிக்கை.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ள அருள்பணி Stan Swamy அவர்களுடன் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் விதமாக, அஸ்ஸாமின் Guwahati நகரில், கிறிஸ்தவ சபைகளின் கூட்டம் ஒன்றும், பெங்களுருவில் பேராயர் Peter Machadoவுடன் ஆயிரம் பேர் கொண்ட 3 கிலோமீட்டர் மனித சங்கிலி  ஒருமைப்பாட்டு பேரணி ஒன்றும், கேரளாவின் கொச்சியில் கிறிஸ்தவ சபைகளின் கூட்டம் ஒன்றும், பீகாரின் பாட்னாவில் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றும், அருள்பணி Stan Swamy அவர்கள் பிறந்த மாநிலமான தமிழகத்தின் திருச்சியில், புனித ஜோசப் கல்லூரியில் மௌன எதிர்ப்பு கூட்டம் ஒன்றும் என, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அருள்பணி Stan Swamy அவர்களுடன் ஒருமைப்பாட்டை வெளியிட்டு, மக்களின் பங்கேற்புடன், கூட்டங்கள் நடத்தப்பட்டன.

உரோம் நகரிலுள்ள இயேசு சபை தலைமை இல்லத்தில் பணியாற்றும், சமுதாய நீதி மற்றும் சூழலியல் செயலகத்தின் செயலர், அருள்பணி சேவியர் ஜெயராஜ் அவர்கள், அருள்பணி Stan Swamy அவர்களின் விடுதலையை வேண்டி விடுத்துள்ள ஓர் அறிக்கையில், கல்விப்பணியிலும், ஏழைமக்கள் உரிமை பாதுகாப்பிலும் தங்களை ஈடுபடுத்தி, உலகம் முழுவதும் உழைத்துவரும் இயேசுசபையினர்,  அருள்பணி Stan Swamy அவர்களுடனும், ஏனைய மனித உரிமை நடவடிக்கையாளர்களுடனும் ஒருமைப்பாட்டை அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும், அருள்பணி Stan Swamy அவர்களின் கைது செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டித்து, அவரின் உடனடி விடுதலைக்கு அழைப்பு விடுப்பதுடன், சட்டத்திற்கு பயந்து வாழும் மக்களை ஆதாரமின்றி கைது செய்வதிலிருந்து இந்திய அரசு விலகி நிற்க வேண்டும் என விண்ணப்பிப்பதாகவும், அருள்பணி சேவியர் ஜெயராஜ் அவர்கள், கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 October 2020, 14:52