தேடுதல்

இயேசுசபை அருள்பணியாளர்  Stan Swamy இயேசுசபை அருள்பணியாளர் Stan Swamy 

இயேசு சபை அருள்பணியாளரின் விடுதலைக்கு ஆயர்கள் கோரிக்கை

இந்திய ஆயர்கள் : ஏழைகளுக்காக 50 ஆண்டுகளுக்கு மேல் உழைத்துவந்த அருள்பணி Stan Swamy அவர்களை, வன்முறைகளோடு தொடர்புபடுத்தி கைது செய்துள்ளது, ஆழ்ந்த கவலை தருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள இயேசுசபை அருள்பணியாளர்  Stan Swamy அவர்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என இந்திய ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

இயேசு சபை அருள்பணி Stan Swamy அவர்களின் கைது குறித்து, இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர், பேராயர் Felix Machado அவர்கள், இப்பேரவையின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூர்வீக இன மக்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் 50 ஆண்டுகளுக்கு மேல் உழைத்துவந்த ஒருவரை, 2018ம் ஆண்டு துவக்கத்தில் இடம்பெற்ற Bhima–Koregaon கலவர வன்முறைகளோடு தொடர்புபடுத்தி கைதுசெய்துள்ளது, ஆழ்ந்த கவலை தருவதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடி இன மக்களின் நில உரிமைகளுக்காக அயராது உழைத்து வந்த அருள்பணி Stan Swamy அவர்களின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ஒரு சிலரின் சுயநலத்தால் இந்த கைது இடம்பெற்றுள்ளது எனக்கூறும் ஆயர்களின் அறிக்கை, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் NIA எனும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைகளின்போது, அவர் முழு ஒத்துழைப்புக்கொடுத்து, அனைத்து விவரங்களையும் வழங்கியுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.

கோவிட் கொள்ளைநோய் காலத்தில் சாதாரண மனிதர்களே, வெளியில் செல்வதற்கு தயங்கிவரும் வேளையில், பல்வேறு நலப்பிரச்னைகளைக் கொண்டுள்ள 83 வயது முதியவரான இயேசு சபை அருள்பணி Stan Swamy அவர்கள், பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது வேதனை தருவதாக உள்ளது என ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் சட்டங்களை மதித்து, நாட்டின் பொது நலனுக்காக எப்போதும் தொடர்ந்து உழைத்துவரும் இந்திய திருஅவை, அனைத்துக் குடிமக்களின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யுமாறு அரசை நோக்கி விண்ணப்பிப்பதாகவும், அருள்பணி Stan Swamy அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுமாறு அரசிடம் கேட்பதாகவும், அருள்பணியாளருக்கு ஆதரவாக தங்கள் குரலை உயர்த்தியுள்ள அனைத்து தரப்பினருக்கும் நன்றியுரைப்பதாகவும், இந்திய ஆயர்கள் தங்கள் அறிக்கையில் மேலும் கூறியுள்ளனர்.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில், ஏறத்தாழ, 50 ஆண்டுகளாக, பழங்குடி மக்களிடையே பணியாற்றிவரும் 83 வயதான இயேசு சபை அருள்பணியாளர் Stan Swamy அவர்களை, இம்மாதம் 8ம் தேதி, வியாழன் இரவு கைது செய்து மும்பைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது, NIA எனப்படும் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு.

அருள் பணி  Stan Swamy அவர்களை இம்மாதம் 23ம் தேதி வரை காவலில் வைக்குமாறு மும்பையின் சிறப்பு நீதிமன்றம் இப்புலனாய்வு அமைப்பிற்கு அனுமதி வழங்கியுள்ளது. (UCAN)

12 October 2020, 15:56