தேடுதல்

அயர்லாந்து நாட்டின் பேராயர் ஈமோன் மார்ட்டின் அயர்லாந்து நாட்டின் பேராயர் ஈமோன் மார்ட்டின் 

கொள்ளைநோய்க்கு பின்வரும் உலகைச் சந்திக்க திட்டம்

திருத்தந்தையின் ‘Fratelli tutti’ திருமடலையொட்டி, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயர்களின் கருத்துக்களும், வேறுபல கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்களின் கருத்துக்களும் வெளிவந்தவண்ணம் உள்ளன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"அனைவரும் உடன்பிறந்தோர்" (Fratelli tutti) என்ற பெயரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள திருமடல், சமுதாயத்தின் ஓரத்தில் வாழ்வோர் மீது நம் கவனத்தைத் திருப்புவதோடு, அவர்களை, சமுதாயத்தில் இணைப்பதற்கும் அழைப்பு விடுக்கிறது என்று, அயர்லாந்து நாட்டின் தலைமை ஆயர், பேராயர் ஈமோன் மார்ட்டின் அவர்கள் கூறியுள்ளார்.

அக்டோபர் 4ம் தேதி வெளியிடப்பட்ட திருத்தந்தையின் திருமடலையொட்டி, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயர்களின் கருத்துக்களும், வேறுபல கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்களின் கருத்துக்களும் வெளிவந்தவண்ணம் உள்ளன.

அயர்லாந்தில் வாழும் மக்கள், சமுதாயத்தின் ஓரத்தில் வாழ்வோரை, மையத்திற்குக் கொணரும் முயற்சிகளில் ஈடுபட அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய பேராயர் மார்ட்டின் அவர்கள், நாம் ஒவ்வொருவரும் யாரை ஓரங்களில் தள்ளிவைக்கிறோம் என்ற ஆன்ம ஆய்வையும் மேற்கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் பிறரன்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள, CAFOD, அதாவது, பன்னாட்டு கத்தோலிக்க முன்னேற்ற பிறரன்பு என்ற அமைப்பின் தலைவர், கிறிஸ்ட்டீன் ஆலன் அவர்கள், கொள்ளைநோய்க்கு பின்வரும் உலகைச் சந்திக்க, திருத்தந்தையின் திருமடல் ஒரு திட்டத்தை வழங்கியுள்ளது என்று கூறினார்.

இன்றைய அரசியல், வறியோருக்கு பணியாற்றுவதைவிட்டு விலகிச்செல்கிறது என்பதை, இந்தத் திருமடல் தெளிவாக உணர்த்தியுள்ளது என்று கூறிய கிறிஸ்ட்டீன் ஆலன் அவர்கள், இதே அரசியல் சூழலுக்குத் திரும்ப, அரசியல் தலைவர்கள் காட்டிவரும் ஆர்வத்தை, திருத்தந்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் என்று எடுத்துரைத்தார்.

07 October 2020, 15:55