தேடுதல்

பத்து இலட்சம் குழந்தைகள் இணைந்து மேற்கொள்ளும் செபமாலை முயற்சி பத்து இலட்சம் குழந்தைகள் இணைந்து மேற்கொள்ளும் செபமாலை முயற்சி 

16வது ஆண்டாக சிறார் ஒண்றிணைந்து செபமாலை

கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கத்திலிருந்து மக்கள் காப்பாற்றப்பட, சிறாரிடையே செபமாலையை ஊக்குவிப்பதோடு, துன்புறும் நாடுகளில், மருத்துவ உதவிகளையும் வழங்கிவருகிறது ACN அமைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலகின் அமைதி மற்றும் ஒன்றிப்பிற்காக, துன்புறும் திருஅவைகளுக்கு உதவி செய்துவரும் ACN எனும் அமைப்பின் சார்பில், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 இலட்சம் சிறார் இணைந்து செபமாலை செபித்தனர்.

கோவிட்-19 கொள்ளைநோய் பாதிப்புக்களிலிருந்து உலகம் மீட்படையவும், அமைதியும் ஒன்றிப்பும் நிலவவும் என்ற நோக்கத்துடன் நடைபெறும் இந்த செபமாலை முயற்சிக்கு, கடந்த வார ஞாயிறு மூவேளை செப உரையில் திருத்தந்தையும் தன் ஆதரவை வழங்கியிருந்தார்.

2005ம் ஆண்டு வெனிசுவேலாவின் கரக்காஸ் நகரில், உலக அமைதிக்கென சிறார் ஒன்றிணைந்து செபமாலையை செபிக்கத் துவங்கியதிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் இடம்பெற்றுவரும் இந்த பழக்கத்தை, 2018ம் ஆண்டிலிருந்து துன்புறும் திருஅவைகளுக்கு உதவி செய்துவரும் ACN எனும் அமைப்பு தன் பொறுப்பில் எடுத்து நடத்திவருகின்றது.

உலகின் சிறார் பங்குபெறும் இந்த செபமாலை முயற்சி குறித்து, கருத்துக்களை வெளியிட்ட ACN அமைப்பின் அதிகாரி John Pontifex அவர்கள், இந்த நோயின் தாக்குதலாலும்,  அதன் தொடர்புடைய பொருளாதார இழப்பாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குரலுக்கு செவிமடுத்து அவர்களின் துயர்களை நீக்கிட இறைவன் துணைபுரிய செபமாலை வழியாக வேண்டவேண்டிய நேரம் இது என்றார்.

கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கத்திலிருந்து மக்கள் காப்பாற்றப்பட, சிறாரிடையே செபமாலையை ஊக்குவிப்பதோடு, துன்புறும் நாடுகளில், குறிப்பாக, பாகிஸ்தான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் மருத்துவ உதவிகளையும் வழங்கிவருவதாக கூறினார், Pontifex.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2020, 14:46