தேடுதல்

Vatican News
சிரியா போர் குறித்து கர்தினால் செனாரி சிரியா போர் குறித்து கர்தினால் செனாரி  (AFP or licensors)

11 மில்லியன் சிரியா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை

சிரியாவில் இடம்பெற்றுவரும் போரால் அந்நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் ஏறத்தாழ பாதி அழிந்துவிட்டன. இந்நிலை, கோவிட்-19 காலத்தில் நலவாழ்வு பிரச்சனையை அதிகமாக்கியுள்ளது – கர்தினால் செனாரி

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வத்திக்கானின் புதிய மாமன்ற அறையில், திருப்பீடத்துடன் தொடர்புடைய தூதரக அதிகாரிகளை, அக்டோபர் 15, இவ்வியாழனன்று சந்தித்து, சிரியாவின் இன்றைய நிலைமை குறித்த விழிப்புணர்வைத் தூண்டியுள்ளார், கர்தினால் மாரியோ செனாரி (Mario Zenari).

2008ம் ஆண்டிலிருந்து சிரியாவில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றும் கர்தினால் செனாரி அவர்கள், சிரியாவில், ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் போர், மற்றும், தற்போதையக் கொரோனா கொள்ளைநோய், ஆகியவை, அந்நாட்டு மக்களை, கடுமையான வறுமைக்கு உள்ளாக்கியுள்ளன என்று எடுத்துரைத்தார்.

சிரியா நாடு, ஊடகங்களில் காணாமல்போய்விட்டதாகத் தெரிகின்றது என்று கவலை தெரிவித்த அதேவேளையில், சிரியா மக்களில் பலர் நம்பிக்கை இழந்துள்ளனர் என்றும், ஒரு கோடியே பத்து இலட்சம் சிரியா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் கர்தினால் செனாரி அவர்கள் கூறினார்.

மேலும், இந்த சந்திப்பு பற்றிப் பேசிய, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், போரினால் அழிக்கப்படும் சிரியாவிலிருந்து ஒவ்வொரு நாளும் வருகின்ற கொடுந்துன்பங்கள் பற்றிய செய்திகள், அவை ஒரு துன்பத் தொடர்கதை என்று ஒதுங்கும் எண்ணத்தில், உலகம் வளராமல் இருப்பதற்கு, இக்கூட்டம் உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.  

ஒரு கோடியே 75 இலட்சம் மக்களைக் கொண்ட சிரியாவில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பசிப் பிரச்சனை நிலவுகின்றது. 93 இலட்சம் சிரியா மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். 2020ம் ஆண்டிலிருந்து இவ்வெண்ணிக்கை 14 இலட்சம் அதிகரித்துள்ளது என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியுள்ளது. (CNA)  

16 October 2020, 15:00