தேடுதல்

“Fratelli Tutti” புதிய திருமடலின் இந்திய பதிப்பு “Fratelli Tutti” புதிய திருமடலின் இந்திய பதிப்பு  

“Fratelli Tutti” புதிய திருமடலின் இந்திய பதிப்பு

நான், எனது என்ற தனிமனிதக்கோட்பாடு, நம் வாழ்விலிருந்து முற்றிலும் அகற்றப்படவேண்டும். நாம் மற்றவரை மையப்படுத்திய மனிதர்களாக வாழ வேண்டும் - கர்தினால் கிரேசியஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த உணர்வு மற்றும், சமுதாய நட்பை மையப்படுத்தி வெளியிட்டுள்ள, “அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli tutti)” என்ற புதிய திருமடலின் இந்தியப் பதிப்பை, மும்பை பேராயரான கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

ஆங்கில மொழியிலுள்ள இந்த திருமடல் பிரதியின் இந்தியப் பதிப்பை, இந்திய ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அக்டோபர் 18, இஞ்ஞாயிறன்று, இணையம் வழியே, நிகழ்பதிவில், திருப்பலியை நிறைவேற்றியபின் வெளியிட்டார்.

இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் (CCBI), பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும், ஆசிய பதிப்பக நிறுவனத்தின் (ATCP) ஒத்துழைப்போடு, திருத்தந்தையின் இப்புதிய திருமடலின் இந்தியப் பதிப்பைத் தயாரித்துள்ளனர்.

இந்த திருமடலை, அனைவரும் ஆழ்ந்து வாசிக்கவும், அதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பைச் செயல்படுத்தவும் வேண்டும் என்று கர்தினால் கிரேசியஸ் அவர்கள் கூறியுள்ளார்.

நான், எனது என்ற தனிமனிதக்கோட்பாடு, நம் வாழ்விலிருந்து முற்றிலும் அகற்றப்படவேண்டும் என்றும், நாம் மற்றவரை மையப்படுத்திய மனிதர்களாக வாழ வேண்டும் என்றும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

20 October 2020, 14:49