தேடுதல்

கர்தினாலாக உயர்த்தப்பட்டுள்ள அருள்பணி Cantalamessa கர்தினாலாக உயர்த்தப்பட்டுள்ள அருள்பணி Cantalamessa  

கர்தினால் பணி, இறைவார்த்தைக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம்

1980ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால், பாப்பிறை மறையுரையாளராக நியமிக்கப்பட்ட அருள்பணி Cantalamessa அவர்கள், கடந்த 40 ஆண்டுகளாக, சிறப்பு மறையுரைகளை வழங்கிவந்துள்ளார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 25, கடந்த ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த 13 புதிய கர்தினால்களில் ஒருவரான, அருள்பணி Raniero Cantalamessa அவர்கள், திருத்தந்தை வழங்கிய இந்த அங்கீகாரம், தனி மனிதனாகிய தனக்கு வழங்கப்பட்டது என்று சொல்வதைவிட, அவர், இறைவார்த்தைக்கு வழங்கிய அங்கீகாரம் என்று சொல்வதே பொருந்தும் என்று கூறினார்.

புனித பிரான்சிஸ் அவர்களின் பெயரைத் தாங்கிய கப்பூச்சியன் துறவு சபையின் உறுப்பினரும், பாப்பிறை இல்லத்தின் ஆன்மீக மறையுரையாளருமான அருள்பணி Cantalamessa அவர்கள், வத்திக்கான் செய்தித்துறைக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோர் நேரம் ஒதுக்கி, கப்பூச்சியன் துறவி ஒருவரின் கருத்துக்களுக்கு செவிமடுத்துள்ளனர் என்பது, அவர்கள், இறை வார்த்தைக்கு வழங்கிய மதிப்பைக் காட்டுகிறது என்று, கர்தினாலாக உயர்த்தப்பட்டுள்ள அருள்பணி Cantalamessa அவர்கள், தன் பேட்டியில் கூறினார்.

86 வயது நிறைந்த இத்தாலிய துறவி Cantalamessa அவர்கள், பாப்பிறை இல்லத்தில் மறையுரை ஆற்றும் தன் பணியைத் தொடர விழைவதாகவும், அடுத்துவரும் திருவருகைக் காலத்திற்குத் தேவையான மறையுரைகளை தான் தயாரித்து வருவதாகவும் வத்திக்கான் செய்தித்துறையிடம் கூறினார்.

1980ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால், பாப்பிறை மறையுரையாளராக நியமிக்கப்பட்ட அருள்பணி Cantalamessa அவர்கள், கடந்த 40 ஆண்டுகளாக, மூன்று திருத்தந்தையர் மற்றும், பாப்பிறை இல்லத்தைச் சேர்ந்த கர்தினால்கள், ஆயர்களுக்கு திருவருகைக் காலத்திலும், தவக்காலத்திலும் சிறப்பு மறையுரைகளை வழங்கிவந்துள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனக்கு வழங்கியுள்ள இந்த பொறுப்பு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகின் பல பகுதிகளிலிருந்து தனக்கு வந்து சேர்ந்த வாழ்த்துச் செய்திகள், குறிப்பாக, யூத நண்பர்களிடமிருந்து தனக்கு வந்த வாழ்த்துக்கள் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகக் கூறினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல்கள் வழியே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாலங்கள் கட்டவிழைவது, தன் மனதுக்கு நெருக்கமான பணிகளில் ஒன்று என்பதை, புதிய கர்தினால்களில் ஒருவரான அருள்பணி Cantalamessa அவர்கள் கூறினார்.

28 October 2020, 14:15