தேடுதல்

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் விடுதலைக்காக அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் விடுதலைக்காக  (AFP or licensors)

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் விடுதலைக்காக...

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை, இதுவரை சிறையில் எவரும் சந்தித்ததில்லை. அவரது உடல்நிலை மிகுந்த கவலை தருகின்றது. அவர் உட்கொள்ளும் மருந்துகளில் மாற்றம் தேவை – அவருடன் தொலைப்பேசியில் தொடர்புகொண்ட அருள்பணி சாலமோன் சே.ச.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்த அக்டோபர் மாதம் 9ம் தேதியிலிருந்து மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 83 வயது நிரம்பிய, மனித உரிமைப் போராளி, இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற போராட்டங்கள், நாடெங்கும் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன என்று, இயேசு சபையினர் அறிவித்துள்ளனர்.

இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால், பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, சிறைவைக்கப்பட்டுள்ள, தமிழரான, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதற்காக, இந்தியாவில் பணியாற்றும் இயேசு சபையினர், தேசிய மற்றும், மாநில அளவில் பல்வேறு குழுக்களை அமைத்து, போராட்டங்கள் மற்றும், சமுதாய ஊடகங்கள் வழியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று, உலகளாவிய இயேசு சபையின் சமுதாய நீதி மற்றும், சூழலியல் செயலகம் அறிவித்துள்ளது.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுடன் கடந்த இரு ஆண்டுகளாக பணியாற்றிவந்த இயேசு சபை அருள்பணி டேவிட் சாலமோன் அவர்கள், அக்டோபர் 25, கடந்த ஞாயிறன்று, சுவாமி அவர்களை முதல்முறையாகத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, நான்கு நிமிடங்கள் உரையாடினார் என்று கூறப்பட்டுள்ளது.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் விரும்பினால், வாரத்திற்கு ஒருமுறை தொலைப்பேசி அழைப்பை மேற்கொள்ளலாம் என்றும், இதுவரை அவரை சிறையில் எவரும் சந்தித்ததில்லை என்றும், அவரது உடல்நிலை மிகுந்த கவலை தருகின்றது என்றும், அவர் எடுக்கும் மருந்துகளில் மாற்றம் தேவை என்றும், அருள்பணி சாலமோன் அவர்கள் கூறியுள்ளார்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களும், கடந்த இரு ஆண்டுகளாக சிறையில் துன்புறும் மற்ற 15 பேரும், விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதற்காக, கோவிட்-19 கொள்ளைநோய் அச்சுறுத்தல் மத்தியிலும், நாடெங்கும் பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

பார்க்கின்சென் நோய் மற்றும் முதிர்ந்த வயதைக் காரணம் காட்டி பிணையலுக்கு விண்ணப்பிக்கப்பட்டிருந்த மனுவும், அக்டோபர் 23ம் தேதி நிராகரிக்கப்பட்டுள்ளது

31 October 2020, 13:39