தேடுதல்

Vatican News
கோவிட்-19 சூழலுக்கு மத்தியில் பள்ளிகள் திறப்பு கோவிட்-19 சூழலுக்கு மத்தியில் பள்ளிகள் திறப்பு  (ANSA)

அமெரிக்க ஐக்கிய நாட்டில் தொழிலாளர் நாள்

கோவிட்-19 கொள்ளைநோயைத் தொடர்ந்துவரும் காலத்தில், பொருளாதாரச் சீர்குலைவு, வேலையின்மை, உடல்நலத்திற்கு வரும் ஆபத்துக்கள் என்ற பல காரணங்களால், மக்களின் கவலைகள் கூடியுள்ளன – அமெரிக்க பேராயர் கோக்லி

ஜெரோம் லூயிஸ்: வத்திக்கான் செய்திகள் 

கோவிட்-19 கொள்ளைநோயைத் தொடர்ந்துவரும் நாள்களில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்வோர், இன்னும் அதிக நன்மைகள் நிறைந்ததொரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற ஊக்கத்தை, அந்நாட்டு ஆயர்கள் ஒரு செய்தி வழியே வெளியிட்டுள்ளனர்.

செப்டம்பர் 7, இத்திங்களன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டில் தொழிலாளர் நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, அந்நாட்டு ஆயர் பேரவையின் உள்நாட்டு நீதி மற்றும் மனித முன்னேற்றப் பணிக்குழுவின் தலைவரான பேராயர் பால் கோக்லி (Paul Coakley) அவர்கள், ஆயர்களின் சார்பில், இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

கோவிட்-19 கொள்ளைநோயைத் தொடர்ந்துவரும் காலத்தில், பொருளாதாரச் சீர்குலைவு, வேலையின்மை, உடல்நலத்திற்கு வரும் ஆபத்துக்கள் என்ற பல காரணங்களால், மக்களின் கவலைகள் கூடியுள்ளன என்று பேராயர் கோக்லி அவர்கள் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொள்ளைநோய்க்கு முன்பு, அமெரிக்க ஐக்கிய நாட்டில், நலவாழ்வு, வேலை பாதுகாப்பு, குடியிருப்பு ஆகியவற்றில் நிலவிய பல்வேறு அநீதிகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் இந்தக் கொள்ளைநோய் இன்னும் கூடுதலாக வெளிச்சத்திற்குக் கொணர்ந்துள்ளது என்று பேராயரின் செய்தி கூறுகிறது.

பல்வேறு நிலைகளில் திருப்தியற்று வாழும் இச்சமுதாயத்தில், ஜார்ஜ் பிளாய்ட் (George Floyd) அவர்களின் மரணம், ஒரு நெருப்புப்பொறியாக விழுந்து, பெரும் துயரங்களை உருவாக்கியுள்ளது என்று கூறியுள்ள பேராயர் கோக்லி அவர்கள், அநீதி ஒருபோதும் இறுதியில் வெற்றிபெறாது என்பதை நாம் நம்புவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளாக, மனித முன்னேற்றத்திற்காக பணியாற்றும் கத்தோலிக்க அமைப்பு ஒன்றின் வழியே, இதுவரை 8000த்திற்கும் அதிகமான செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள பேராயர் கோக்லி அவர்கள், இந்த அமைப்பினர் தற்போதையச் சூழலில் ஆற்றிவரும் பணிகள் நம்பிக்கை தருகின்றன என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் இயங்கிவரும் தொழிலாளர் இயக்கங்களை சிறப்பிக்கும் வண்ணம், ஒவ்வோர் ஆண்டும், அந்நாட்டில், செப்டம்பர் மாதம், முதல் திங்களன்று, தொழிலாளர் நாள் கொண்டாடப்படுகிறது.

08 September 2020, 12:48