தேடுதல்

Vatican News
கர்தினால் Marian Jaworski கர்தினால் Marian Jaworski  

கர்தினாலாக உயர்த்தப்பட்டது இரகசியமாக வைக்கப்பட்டவர்

உக்ரைன் நாட்டு கர்தினால் Jaworski அவர்களின் மறைவோடு, கத்தோலிக்கத் திருஅவையில், மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 219 ஆக மாறியுள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உக்ரைன் நாட்டின் Lviv உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர், கர்தினால் Marian Jaworski அவர்கள், செப்டம்பர் 5ம் தேதி, இச்சனிக்கிழமையன்று, தன் 94ம் வயதில் இறைபதம் சேர்ந்தார்.

அக்காலத்தில் போலந்தின் ஒரு பகுதியாக இருந்த Lviv நகரில், போலந்து பெற்றோருக்கு 1926ம் ஆண்டு பிறந்த கர்தினால் Jaworski அவர்கள், போலந்தின் Cracow உயர்மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக 1950ம் ஆண்டும், உக்ரைனின் கீழ் வந்த Lviv நகரின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டு, 1984ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.

1991ம் ஆண்டு பேராயராக உயர்த்தப்பட்ட இவர், 1998ம் ஆண்டே புனித திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டாலும் (in pectore), 2001ம் ஆண்டுதான் அது வெளிப்படுத்தப்பட்டு, கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார். 2008ம் ஆண்டு, மறைமாவட்டப் பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற கர்தினால் Marian Jaworski அவர்கள், செப்டம்பர் 5ம் தேதி, சனிக்கிழமையன்று, தன் 94வது வயதில் இறைபதம் சேர்ந்தார்.

உக்ரைன் நாட்டு கர்தினால் Jaworski அவர்களின் மறைவோடு, கத்தோலிக்கத் திருஅவையில், மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 219 ஆகவும், இவர்களில், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய, 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 122 ஆகவும் மாறியுள்ளன.

செப்டம்பர் 05, இச்சனிக்கிழமையன்று, இறைபதம் அடைந்துள்ள உக்ரைன் நாட்டு கர்தினால் Marian Jaworski அவர்களின் ஆன்மா, நிறையமைதி அடைய, இறைவேண்டல் செய்வதாகவும், அவரது மறைவால் வருந்தும் அந்நாட்டினருடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

07 September 2020, 14:14