தேடுதல்

இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் - மத்தேயு 18:20 இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் - மத்தேயு 18:20 

பொதுக்காலம் - 23ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

குடும்ப உறவுகளில் ஏற்படும் உரசல்கள், விரிசல்கள் ஆகியவற்றை சீராக்கும் வழிகளை, இன்றைய ஞாயிறு நற்செய்தி நமக்குச் சொல்லித்தருகிறது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 23ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள ஜியார்ஜியா டெக் (Georgia Tech) என்ற பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட ஓர் உரை, கடந்த 20 ஆண்டுகளாக, வலைத்தளங்களில், அவ்வப்போது, வலம்வருகிறது. கொக்க கோலா நிறுவனத்தின் முன்னாள் தலைமை மேலாளர், ப்ரையன் டைசன் (Brian G.Dyson) அவர்கள், வழங்கிய அவ்வுரையில், குடும்ப உறவுகள் பற்றி கூறியிருப்பது, நம் ஞாயிறு சிந்தனைகளை ஆரம்பித்து வைக்கிறது.  

பல பந்துகளை, தொடர்ச்சியாகத் தூக்கிப்போட்டுப் பிடிக்கும் வித்தையை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். அந்த வித்தையைச் செய்வதற்கு, தனித்திறமை வேண்டும். அந்த வித்தையோடு வாழ்வை ஒப்பிட்டு, டைசன் அவர்கள் வழங்கிய எண்ணங்கள் இதோ:

“பல பந்துகளை ஒரே நேரத்தில் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையைப் போல, வாழ்க்கையைக் கற்பனைசெய்து பாருங்கள். உங்கள் கையில் ஐந்து பந்துகள் உள்ளன. அவை... நீங்கள் செய்யும் தொழில், உங்கள் குடும்பம், உடல் நலம், நண்பர்கள் மற்றும் உங்கள் மனம். இந்த ஐந்து பந்துகளையும், நீங்கள், மாற்றி, மாற்றி, தூக்கிப்போட்டு, பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

இந்த ஐந்து பந்துகளில், உங்கள் தொழில் என்பது மட்டும் ஒரு இரப்பர் பந்து. அது, கைதவறி கீழே விழுந்தாலும், மறுபடி எகிறி குதித்து, உங்கள் கைகளுக்கு வந்துவிடும். ஆனால், மற்ற நான்கு பந்துகள் – அதாவது, குடும்பம், உடல்நலம், நண்பர்கள், மனம் ஆகிய நான்கும் – கண்ணாடி பந்துகள். அவை கீழே விழுந்தால், உடைந்துவிடும். அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது, மிகக் கடினமான காரியம். அல்லது, இயலாத காரியம் என்று கூடச் சொல்லலாம்” என்று டைசன் அவர்கள், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

வாழ்வின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான நமது குடும்ப உறவுகள், கண்ணாடி பந்துகள் போன்றவை... தவறினால், சிதறிவிடும். குடும்ப உறவுகளில் ஏற்படும் உரசல்கள், விரிசல்கள் ஆகியவற்றை சீராக்கும் வழிகளை, இன்றைய ஞாயிறு நற்செய்தி நமக்குச் சொல்லித்தருகிறது.

நமது தொலைக்காட்சிகளில் வரும் பல ‘மெகா’த் தொடர்கள், குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனைகளை ஒவ்வொரு நாளும் காட்டிவருகின்றன. எண்ணிக்கையின்றி பெருகிவரும் இத்தொடர்களின் வெற்றிக்குக் காரணம், இரசிகர்களின் ஈடுபாடு. ‘இதேப் பிரச்சனைகள்தானே நம் குடும்பங்களிலும் நடக்கின்றன’ என்று சொல்லும் அளவுக்கு, இத்தொடர்கள், இரசிகர்கள் மனதில் அரியணை கொண்டுள்ளன. குடும்பங்களில், நிஜமான மனத்தாங்கல்கள், வாக்குவாதங்கள் நிகழும்போது, இத்தொடர்களில் வரும் நிகழ்ச்சிகளும், வசனங்களும் நம் குடும்பங்களை, மறைமுகமாகப் பாதிக்கின்றனவோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.

தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றிய ஆய்வு அல்ல இது. இன்றைய நற்செய்தி, நம்மை, குடும்பப்பிரச்சனைகளுக்கு அழைத்துவந்திருப்பதால், இத்தொடர்களைப்பற்றியும் இங்கு பேசுகிறோம். தொலைக்காட்சித் தொடர்கள் கூறும் கருத்துக்களை உள்வாங்கும் அளவுக்கு, நாம் நற்செய்தி சொல்லும் கருத்துக்களை உள்வாங்குகிறோமா என்பதை, இஞ்ஞாயிறன்று, ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்ள, முயல்வோம்.

குடும்பத்தில் ஒருவர் தவறு செய்யும்போது, என்ன செய்யமுடியும், என்ன செய்யவேண்டும் என்ற தீர்வுகளை, இயேசு இன்றைய நற்செய்தியில் கூறியுள்ளார். இந்த நற்செய்தியைக் கேட்கும்போது, நம் மனங்களில், இதைப் பின்பற்றும் ஆவல் பிறக்கின்றதா? அல்லது, இயேசு கூறும் வார்த்தைகள், நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராதவை என்ற மறுப்பு எழுகின்றதா? உண்மையாகவே, நம் உள்ளத்தில் என்னதான் நிகழ்கிறதென்று அலசிப் பார்ப்போமே. இயேசு தம் சீடர்களிடம் அன்றும், இதோ, நம்மிடம் இன்றும், சொல்வது இதுதான்:

மத்தேயு நற்செய்தி 18: 15-17

“உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது, அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ... உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக்கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில், திருச்சபையிடம் கூறுங்கள்.”

இன்றைய நற்செய்தியின் துவக்கமே ஒரு சவாலாக ஒலிக்கிறது. “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்பவை, இயேசு கூறும் ஆரம்ப வார்த்தைகள். “உங்கள் சகோதரர் அல்லது சகோதரிக்கு எதிராக நீஙகள் பாவம் செய்திருந்தால்…” என்று இயேசு ஆரம்பித்திருந்தால், அவர் தொடர்ந்து கூறுவது பொருளுள்ளதாக இருக்கும். ஆனால், அவர் அப்படி சொல்லவில்லை. “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்று ஆரம்பத்திலேயே நம் சிந்தனைகளைப் புரட்டிப்போடுகிறார்.

பொதுவாக, நம் குடும்பங்களில், தவறு செய்பவர் யாரோ, அவரே, அந்தத் தவறைச் சரிசெய்யும் முயற்சிகளையும் ஆரம்பிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்போம். எடுத்துக்காட்டாக, நான் என் உடன் பிறந்த ஒருவரிடம் கோபமாகப் பேசியிருந்தால், அவரைத் தேடிச்சென்று மன்னிப்பு கேட்பது, என் கடமை. இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில், இயேசு நமக்கு முன் வைக்கும் சவால், கடினமான ஒன்று. நம் உடன் பிறந்தவர் குற்றம் செய்யும்போது, அதுவும் நமக்கு எதிராகக் குற்றம் செய்யும்போது, அவர் நம்மைத் தேடிவந்து சமரச முயற்சிகளை ஆரம்பிக்கவேண்டும் என்று காத்திருக்காமல், நம் உடன் பிறந்தோர் புரிந்த குற்றத்தைக் களைய, நாம் முதல் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று இயேசு கூறுகிறார். நடக்கிற காரியமா இது? நடக்கிற காரியம் தான்... நடக்க வேண்டிய காரியமும் கூட.  

இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வார்த்தைகளைக் கேட்டதும், நம் உள்ளங்களில், இயேசுவின் மற்றொரு கூற்று எதிரொலிக்கிறது. மலைப்பொழிவில் அவர் கூறிய வார்த்தைகள் அவை:

மத்தேயு 5: 23-24

நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டு, போய், முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

காணிக்கை செலுத்தும் நேரத்தில் ஒருவருக்கு, தன் உறவுகள் சரியில்லை என்ற நெருடல் உருவாகிறது. சரியில்லாத உறவுகளுக்கு யார் காரணம்? நாம் காரணமா? பிறர் காரணமா? "காணிக்கை செலுத்த வரும்போது, நீங்கள் உங்கள் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால்..." என்று இயேசு சொல்லவில்லை. மாறாக, அவர் தரும் சவால், இன்னும் தீவிரமானதாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும்போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார்.

அவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... உறவுகளில் தவறுகள் ஏற்படும்போது, யார் காரணம் என்ற வரலாற்றுக் குறிப்புக்களையும், கணக்குகளையும் பார்க்காமல், பிரச்சனையைத் தீர்க்கும் முதல் முயற்சிகள் நம்மிடமிருந்து வரவேண்டும் என்று, இயேசு மலைப்பொழிவிலும், இன்றைய நற்செய்தியிலும் தெளிவாக்குகிறார்.

பிரச்சனையைத் தீர்க்க, குற்றத்தைக் களைய நாம் மேற்கொள்ளும் முதல் முயற்சிகள் எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் தொடர்ந்து தெளிவாக்குகிறார். அவர் கூறும் முதல் படி என்ன? நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.

மிக, மிக அவசியமான, ஆனால், கடினமான ஒரு வழி. வயதால் அல்ல, மனதால் முதிர்ச்சி அடைந்தவர்கள் பின்பற்றும் சரியான வழி இது. ஆனால், நம்மில் பலர் உறவுகள் விடயத்தில் மட்டும் வளர மறுத்து, முதிர்ச்சி அடைய மறுத்து, அடம்பிடிக்கும் குழந்தைப் பருவத்திலேயே நின்றுவிடுகிறோம். தவறிழைத்தவரைத் தனியே அழைத்து, அவரிடமே அதைப்பற்றி பேசுவதற்குப் பதில், அவரைப்பற்றி வேறுபலரிடம் பேசி, சிக்கல்களை உருவாக்குகிறோம். பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம்.

இதைத்தானே, நம் ‘மெகா’த் தொடர்கள் காட்டுகின்றன. பிரச்சனை பெரிதானால்தான் மெகாத் தொடர்கள் பல வாரங்கள் ஓடும்... நமது குடும்பங்களிலும் இதுபோல் நிகழ வேண்டுமா, என்ன? தொலைக்காட்சித் தொடர்களைப் பொருத்தவரை, பிரச்சனை பெரிதாகவேண்டும், குற்றவாளி ஒழியவேண்டும், பழிக்குப் பழி தீர்க்கப்படவேண்டும். அப்போதுதான், நாடகம், விறுவிறுப்பாக இருக்கும். நம் குடும்பங்களில், விறுவிறுப்பு வேண்டுமா, அல்லது, விடைகள், தீர்வுகள் வேண்டுமா என்பதை, நாம் தீர்மானிக்க வேண்டும்.

குடும்ப உறவு, ஒரு கண்ணாடி பந்து என்றும், அதை தவறவிட்டால், சிதறிவிடும் என்றும், இன்றைய சிந்தனைகளின் துவக்கத்தில் குறிப்பிட்டோம். அப்படியே, உறவுகள் உடைந்துபோனால், அவற்றை தூக்கியெறிந்து விடுவது, இன்றைய தூக்கியெறியும் கலாச்சாரத்தில் சொல்லித்தரப்படும் மந்திரம். இதற்கு மாறாக,  அந்த உறவுகளை ஒட்டவைப்பதற்கு, இயேசு இன்றைய நற்செய்தியில் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

உறவுகளிலிருந்து விலகி வாழ்தல், அல்லது, உறவுகளை தூக்கியெறிதல் போன்ற முடிவுகள், இன்றைய காலத்தில் மிக எளிதாக இடம்பெறுகின்றன. ஆனால், இதனை, நமது முந்தைய தலைமுறைகளில் காண்பது அரிது. 65 ஆண்டுகள் திருமண வாழ்வில் இணைந்திருந்த தம்பதியரிடம், "எப்படி நீங்கள் இருவரும் 65 ஆண்டுகள் சேர்ந்தே இருக்கிறீர்கள்?" என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அவர்கள், "நாங்கள் பிறந்து வளர்ந்த நாள்களில், ஏதாவது ஒன்று உடைந்துபோனால், அதை, பழுதுபார்த்து மீண்டும் பயன்படுத்துவோமே தவிர, அதை, தூக்கியெறிய மாட்டோம்" என்று பதில் தந்தனர்.

உடைந்தவற்றையும் போற்றி பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தை, தாய்லாந்தைச் சேர்ந்த Sean Buranahiran என்பவர், சமூக வலைத்தளப் பகிர்வில், “Be Proud of your Scars” அதாவது, "உங்கள் தழும்புகளுக்காகப் பெருமைப்படுங்கள்" என்ற தலைப்பில், அழகாகக் கூறியுள்ளார்:

"ஜப்பானில், கிண்ணமொன்று உடைந்துபோனால், அந்த விரிசல்களை, உருக்கப்பட்ட தங்கத்தைக் கொண்டு, இணைத்து, அந்தக் கிண்ணத்தை, முன்பு இருந்ததைவிட, கூடுதலான அழகுள்ள கிண்ணமாக மாற்றுவர்...

அதுவே, மனிதப்பிறவிகளாகிய நமக்கும் பொருந்தும். நீங்கள் உடைக்கப்படும்போது, அழகற்று போனதுபோல் உணர்ந்தாலும், அது, உண்மையல்ல. நமது உடைபாடுளை, தங்கம் உட்பட, பல்வேறு வண்ணங்களில் தீட்டுவது, நம் கரங்களில் உள்ளது.

சரிசெய்ய முடியாதவண்ணம் நீங்கள் உடைந்துபோகவில்லை. நடந்ததிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, உங்களை இன்னும் மேன்மையுள்ளவராக மாற்றலாம். உங்களுக்கு ஏற்பட்ட தழும்புகளை பெருமையுடன் அணிந்துகொள்ளலாம்."

உடைபட்ட உறவுகளைச் சீராக்க இயேசு கூறும் உன்னத வழிகளின் சிகரமாக, குடும்பங்களில் இறைவனின் பிரசன்னம் தங்கும் என்ற உறுதியை, இயேசு, இன்றைய நற்செய்தியின் இறுதியில் ஒரு வாக்குறுதியாக வழங்கியிருக்கிறார்:

மத்தேயு 18: 20

“இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

தன் பெயரால் கூடிவருவோர் நடுவே தான் இருப்பதாக இயேசு வழங்கியுள்ள இந்த வாக்குறுதி, நம் இல்லங்களில் நிறைவேறிவருவதை எண்ணிப்பார்ப்போம். கோவிட்-19 கொள்ளைநோய், பல்வேறு வழிகளில், நம் வாழ்வை உடைத்திருந்தாலும், அந்நோயினால் விதிக்கப்பட்ட முழு அடைப்புக்காலத்தில், குடும்ப உறவுகள், இன்னும் சிறிது வலுவடைந்துள்ளதை நாம் அறிவோம். இந்த நெருக்கத்திற்கு, தொலைக்காட்சி வழியே வீடுகளில் நிகழ்ந்த திருப்பலிகளும், குடும்பமாக சேர்ந்து செபித்த செபமாலைகளும் காரணம் என்பதை எண்ணி, இறைவனுக்கு நன்றி சொல்வோம். "சேர்ந்து செபிக்கும் குடும்பம், சேர்ந்து வாழும்" (The family that prays together, stays together) என்ற கூற்று, நம் இல்லங்களில் உண்மையானதை ஏற்று, மகிழ்வோம்.

இறுதியாக, நலம் வழங்கும் ஆரோக்கிய அன்னையின் திருநாளை, செப்டம்பர் 8, வருகிற செவ்வாயன்று கொண்டாடவிருக்கிறோம். இவ்வேளையில், அந்த அன்னையின் திருத்தலங்களுக்கு நேரடியாகச் செல்லும் வாய்ப்புக்கள் அனைவருக்கும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், குடும்பமாக, நம் அன்னையின் பிறந்தநாளை, நாம், நம் இல்லங்களில் கொண்டாட முயல்வோம். நலம் வழங்கும் ஆரோக்கிய அன்னையின் பரிந்துரையால், கோவிட்-19 கொள்ளைநோய், நம் இல்லங்களை, தெருக்களை, நகரங்களை, நாடுகளை, இவ்வுலகை, விட்டு விலகவேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

கானா திருமண இல்லத்தில் இரசம் தீர்ந்தபோது, தன் மகனிடம் வேண்டி, இரசத்தை அதிகமாக உருவாக்கி, அந்த இல்லத்தவரை மகிழ்வித்த அன்னை மரியா, நம் இல்லங்களில் குறைந்துவரும் அன்பு உறவு என்ற இரசம், இன்னும் அதிகமாகப் பெருகி, நம்மை நிறைவடையச் செய்வாராக!

05 September 2020, 14:04