தேடுதல்

சிங்கப்பூர் புனித யோசேப் ஆவயம் சிங்கப்பூர் புனித யோசேப் ஆவயம் 

சிங்கப்பூரில், கொள்ளைநோய் காலத்தில், மத நல்லிணக்கம்

உலகளாவிய இந்தக் கொள்ளைநோய் காலத்தில், மக்களை ஒருங்கிணைப்பதில் மதத் தலைவர்களின் பங்கு மிகவும் முக்கியம் – கர்தினால் Ayuso Guixot

ஜெரோம் லூயிஸ்: -வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், மத நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் வளர்க்க சிங்கப்பூர் கத்தோலிக்க திருஅவை முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

Jamiyah Singapore என்ற பெயரில், சிங்கப்பூரில் பணியாற்றிவரும் பழம்பெரும் Malay-Muslim பிறரன்பு அமைப்புடன், கத்தோலிக்கத் திருஅவை இணைந்து, மத நல்லிணக்கத்தை மையப்படுத்தி, ஓர் இணையவழி கருத்தரங்கை அண்மையில் நடத்தியது.

இந்த கருத்தரங்கின் துவக்கத்தில், திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர், கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள் பேசுகையில், உலகளாவிய இந்தக் கொள்ளைநோய் காலத்தில், மக்களை ஒருங்கிணைப்பதில் மதத் தலைவர்களின் பங்கு மிகவும் முக்கியம் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

இந்தக் கொள்ளைநோயின் ஒரு முக்கிய விளைவாக, அனைத்து வழிபாட்டு தலங்களும் மக்கள் கூடிவர இயலாத இடங்களாக மாறிவிட்டன என்று கூறிய கர்தினால் Ayuso Guixot அவர்கள், மக்களுக்குத் தேவையான ஆன்மீக சக்தி கிடைக்காத இச்சூழலில், அவர்களை நம்பிக்கையில் வழிநடத்திச் செல்வது, மதத்தலைவர்களுக்கு முன்னிருக்கும் ஒரு முக்கிய சவால் என்று கூறினார்.

சிங்கப்பூர் அரசுத்தலைவர், Halimah Yacob அவர்கள், இந்த இணையவழி கருத்தரங்கில் உரையாற்றுகையில், இந்தக் கொள்ளைநோய் காலத்தில், மக்கள் அவரவர் மத நம்பிக்கையிலிருந்து தங்களுக்குத் தேவையான சக்தியையும், மனஉறுதியையும் பெறவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

57 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட சிங்கப்பூரில், 9 விழுக்காடான 383,000 பேர் கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவர்கள். (Fides)

30 September 2020, 16:10