தேடுதல்

Vatican News
திருநற்கருணை பவனி திருநற்கருணை பவனி 

ஆலயங்கள் திறந்துவிடப்பட திருநற்கருணை பவனி

அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆலயங்கள் வழிபாடுகளுக்கு திறந்துவிடப்படவேண்டும் என்ற வேண்டுகோளை வலியுறுத்த, சான் பிரான்ஸிஸ்கொ உயர் மறைமாவட்டத்தின் மக்கள், செப்டம்பர் 20 வருகிற ஞாயிறன்று திருநற்கருணை பவனி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவனுக்கு முதலிடம் வழங்கவும், அவர் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தவும், நாம் இணைந்து நடப்போம் என்ற அழைப்பை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் சான் பிரான்ஸிஸ்கொ உயர் மறைமாவட்டத்தின் பேராயர் சால்வாத்தோரே கொர்திலேயோனே (Salvatore Cordileone) அவர்கள் தன் மறைமாவட்ட மக்களுக்கு விடுத்துள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆலயங்கள் வழிபாடுகளுக்கு திறந்துவிடப்படவேண்டும் என்ற வேண்டுகோளை வலியுறுத்த, சான் பிரான்ஸிஸ்கொ உயர் மறைமாவட்டத்தின் மக்கள், செப்டம்பர் 20, வருகிற ஞாயிறன்று, திருநற்கருணை பவனியில் கலந்துகொள்ளவேண்டுமென, பேராயர் கொர்திலேயோனே அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

சான் பிரான்ஸிஸ்கொ பெருநகரில் அமைந்துள்ள மூன்று பங்குகளில், செப்டம்பர் 20ம் தேதி திருநற்கருணை பவனிகள் துவங்கி, அம்மறைமாவட்டத்தின் பேராலயம் நோக்கிச் செல்லும் என்றும், பேராலயத்திற்கருகே அமைந்துள்ள திறந்தவெளியில், திருப்பலிகள் நிகழும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டையும், நமது நகரையும் குறித்து அச்சங்கள் எழுந்துள்ளன. ஆயினும், அச்சங்கள் நம் வாழ்வை ஆள்வதற்கு விடக்கூடாது; நம்பிக்கை கொண்ட மக்கள் என்பதை பறைசாற்ற நாம் கூடிவருவோம் என்று, பேராயர் கொர்திலேயோனே அவர்கள் கூறியுள்ளார்.

இஸ்பானிய மொழி பேசுவோரை அதிகமாகக் கொண்டிருக்கும் மேற்குக் கடற்கரையில் வாழ்வோர், இந்த இஸ்பானிய கலாச்சார மாதத்தையும், நாம் அனைவரும் பல்வேறு கலாச்சாரங்களைச் சார்ந்திருந்தாலும் ஒற்றுமையாக வாழமுடியும் என்பதை உணர்த்துவதற்கும் இந்த முயற்சியை மேற்கொள்வோம் என்று பேராயர் கொர்திலேயோனே அவர்கள் மக்களிடம் விண்ணப்பித்துள்ளார்.

வரலாற்றில் பலமுறை, திருஅவையின் செயல்பாடுகளை தடைசெய்வதற்கு பல அரசுகள் முயன்றுள்ளன எனினும், இறுதியில், அத்தடைகளை வென்று, நம்பிக்கை கொண்ட மக்கள் முன்னேறியுள்ளனர் என்பதை மீண்டும் ஒருமுறை நிலைநாட்ட, மக்கள் இந்த ஞாயிறு பவனிகளிலும் திருப்பலிகளிலும் கலந்துகொள்ளவேண்டும் என்று பேராயர் கொர்திலேயோனே அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். (Zenit)

16 September 2020, 14:23