தேடுதல்

ஐ.நா. அவையில் உரையாற்றும் சாம்பியா அரசுத்தலைவர் Edgar Lungu - கோப்புப் படம் ஐ.நா. அவையில் உரையாற்றும் சாம்பியா அரசுத்தலைவர் Edgar Lungu - கோப்புப் படம் 

நாட்டின் கடன் பிரச்சனைக்கு முதலில் தீர்வு

2011ம் ஆண்டில் 320 கோடி டாலர்களாக இருந்த சாம்பியா நாட்டின் வெளிநாட்டுக் கடன், 2019ம் ஆண்டின் இறுதியில், 1,100 கோடியாக அதிகரித்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சாம்பியா நாட்டில் தீர்வு காணப்படவேண்டிய பிரச்சினைகளுள் முக்கியமான ஒன்றாக, கடன் பிரச்சனை நோக்கப்படவேண்டும் என இயேசு சபையினரின் இறையியல் சிந்தனைகள் மையம் (JCTR) அழைப்பு விடுத்துள்ளது.

நாட்டின் இன்றைய நிலைகள் குறித்து கடந்த வாரம் உரையாற்றிய சாம்பியா அரசுத்தலைவர் Edgar Lungu அவர்கள், கடன் பிரச்சனை குறித்து எதுவும் குறிப்பிடாதது கவலை தருவதாக உள்ளது என உரைத்த இம்மையத்தின் வளர்ச்சித்திட்ட இயக்குனர் Chama Bowa Mundia அவர்கள், நாட்டின் ஏனைய பிரச்சனைகள் போல், கடன் பிரச்சனைக்கும் தீர்வு காண்பது அவசியம் என்றார்.

சஹாரா பாலைவனத்தையொட்டியுள்ள நாடுகளின் நிலைகளோடு ஒப்பிடும்போது, சாம்பியாவின் கடன் பிரச்சினை கடந்த 10 ஆண்டுகளில் மிக பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்ற Mundia அவர்கள், நாட்டின் வருமானத்தை விட, அதன் செலவுகள் மிகப்பெரிய அளவில் உள்ளன என உரைத்தார்.

2011ம் ஆண்டில் 320 கோடி டாலர்களாக இருந்த சாம்பியாவின் வெளிநாட்டுக்கடன், 2019ம் ஆண்டின் இறுதியில் 1,100 கோடியாக அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி கவலையை வெளியிட்ட Mundia அவர்கள், கடன் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில், கல்வி, நலவாழ்வு, சமூக பாதுகாப்பு போன்ற துறைகளுக்கு நிதி ஒதுக்குவது சிரமமாக இருக்கும் எனவும் கூறினார்.

21 September 2020, 14:13